தண்டகாரண்யம் – விமர்சனம்!

உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின் பங்குக்கு இணையாக ஆதிக்குடிகளின் பங்கு உள்ளது. ஆதிகுடி, பூர்வ குடி, பழங்குடி தொல்குடி, முதுகுடி என பல வகைகளில் அறியப்படும் பழங்குடியினரை துரத்தி விட்டு அதே காடுகளை சூறையாடி கொண்டிருக்கிறது நாகரிக சமூகம்.அப்படியான அப்பாவி பழங்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியை உருக்கமாக சொல்லி கவர முயன்று இருக்கிறார்கள். குறிப்பாக அரசியல் தெளிவு, திரைக்கதையை அணுகிய விதம், ரத்தம் தோய்ந்த உண்மைச் சம்பவத்தை காதலோடு இணைத்து சொல்லி இருந்தாலும் வெகு ஜன மக்களிடம் சினிமா வழியாக பரலாக சென்று சேர சில சினிமா தனங்கள் நிச்சயம் தேவை புரியாத டீம் வழங்கியுள்ள படமே தண்டகாரண்யம்
அதாவது தமிழகத்தின் வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், ஒய்ஃப் ரித்விகா, பிரதர் கலையரசன், அப்பா, அம்மா என்று குடும்பமாக வசித்து வருகிறார். கலையரசன் ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்டில் டெம்பரவரி கார்டாக ஒர்க் செய்து வருகிறார். எப்படியாவது அரசுிரந்தர ஊழியராகி விட வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். ஆனால், உயர் அதிகாரிக்கும், தினேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் கலையரசனின் தற்காலிக பணியும் பறிபோய் விடுகிறது. இதனால் உறவினர்கள் உதாசினப்படுத்த, குடும்பமே அவமானத்தில் தலை குனிகிறது. இதை அடுத்து தம்பியை எப்படியாவது அரசு பணியில் சேர்த்து தலை நிமிர நினைக்கும் அண்ணன் தினேஷ், ஒருவரது சிபாரிசில் , நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு உருவாக்கியதாகசொல்லப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்த்து விட முடிவு செய்கிறார். அதற்காக விவசாய நிலத்தை விற்று பணம் கொடுத்து அனுப்புகிறார். அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் படைப்பிரிவில் இணைந்து பயிற்சி பெற்று வரும் கலையரசன், பலவித கஷ்ட்டங்களை அனுபவித்தாலும், வேலையோடு தான் ஊர் திரும்ப வேண்டும் என்ற மனநிலையில் இருக்க ஒரு சூழலில் அந்த இடத்திற்கு வருபவர்கள் உயிரோடு எங்கும் செல்ல முடியாது என்ற அதிர்ச்சி அளிக்கும் உண்மையை தெரிந்துக் கொள்கிறார். இதை அடுது அங்கு அப்படி என்ன நடக்கிறது ? அவர் அங்கிருந்து தப்பித்தாரா ? இல்லையா ? என்பதை காலப் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூர நிகழ்வை நம் கண் முன் நிறுத்தும் வகையில் சொல்வதே ‘தண்டகாரண்யம்’ படத்தின் கதை.
படத்தின் முதல் பாதி கிருஷ்ணகிரி அருகே உள்ள மலைப்பகுதியில் நடக்கிறது. கலையரசன் – வின்சு ரேச்சல் இடையேயான லவ், ஃபாரஸ்ஸ் ரேஞ்ச்ர்களின் அத்துமீறலுடனான அட்டூழியம், தினேஷின் அறிமுகம் என மிதமான வேகத்தில் செல்கிறது. இண்டர்வெல்லுக்கு பின்ன பயிற்சி என்ற பெயரில் நடக்கும் கொடுமைகள், நக்சலைட்டாக இருந்த சரணடைந்த சபீர் கல்லரக்கலின் கதை, நக்சல் ஒழிப்பு என்ற போர்வையில் நடக்கும் ஊழல் போன்றவை வெளிச்சமிட்டு காட்டப்பட்டுள்ளன.
ஹீரோக்களாக நடித்திருக்கும் தினேஷ் மற்றும் கலையரசன் பழங்குடியின மக்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களாக மக்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞராக சாஃப்டான முறையில் அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுக்கும் தினேஷ், பொங்கி எழுந்து தனது விஸ்வரூபத்தை வெளிக்காட்டும் இடங்கள், பலே சொல்ல வைக்கிறது. வட இந்தியாவில் பரவலாக அறியப்படும் நக்சலைட்டுகள் மக்களுக்கு எதிரானவர்கள் என்ற முத்திரையை அழித்தொழிக்கும் கேரக்டரில் பர்பெக்டாக நடித்து சபாஷ் சொல்ல வைத்து விடுகிறார். எந்த தவறு செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் மிஸ்டர் பப்ளிக் ரோலில் நடித்திருக்கும் கலையரசன், தன் உயிர் போகப்போகிறது என்பதை தெரிந்து பதற்றம் அடையும் போதும், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போதும் ஸ்கோர் செய்கிறார். அதிலும் ராணுவ அகாடமியில் காதலியை நினைத்து ஏங்குவது, காவல் துறையின் சூழ்ச்சியை நினைத்து கலங்குவது, காதலிக்குத் தைரியம் தருவது, செம்மையாய் வாழலாம் என்று நம்பிக்கை விதைப்பது என அடர்த்தியான நடிப்பில் கிளாப்ஸ் அள்ளுகிறார்.
யுவன் மயில்சாமி தெனாவெட்டான உடல் மொழி, மிரட்டும் பார்வை என முத்திரை பதிக்கிறார். வின்சு ரேச்சல், ரித்விகா இருவரும் காதல் காட்சிகளுக்கு நீர் பாய்ச்சி விட்டு போகிறார்கள். தினேஷ் – கலையரசன் இருவரின் அப்பாவாக நடித்துள்ள சங்ககிரி மாணிக்கம் நடிப்பில் தனித்து தெரிகிறார். இவர்களுடன், அருள் தாஸ், பால சரவணன், வேட்டை முத்துக்குமார், கவிதா பாரதி என கமிட் ஆன சகலரும் தங்கள் பங்களிப்பை சரியாக வழங்கியுள்ளார்கள்
மியூசிக் டைரக்டர் ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. டைட்டிலின் போதே பீஜியெம் மூலம் கவனம் ஈர்க்கும் ஜஸ்டின் பிரபாகரன், “காவக்காடே…” பாடல் மூலம் மட்டுமின்றி இளையராஜாவின் ”ஓ…ப்ரியா…ப்ரியா…” மற்றும் “மனிதா…மனித…” பாடல்களையும் மிக சரியாக பயன்படுத்தி தனி கவனம் பெறுகிறார்
குண்டு என்ற படத்தை சில வருடங்களுக்கு முன்பு இயக்கிய அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கி இருக்கிறார்.படத்தின் அரசியல் முக்கியமானதென்றாலும் அதை இன்னும் நேர்த்தியாக சொல்லியிருக்கலாம். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளைப் படம் அழுத்தமாக பேசத் தவறுகிறது. திரைக்கதை அங்கங்கே கொஞ்சம் அலைபாய்கிறது. கலையரசனும் – வின்சும் பேசும் கவித்துவமான வசனங்கள் எடுபடவில்லை.
மொத்தத்தில் தண்டகாரண்யம் – வெடிக்காத இன்னொரு குண்டு.
மார்க் 2.25/5