எல்.சி.டி & இன்ஃப்ரா தொழில்நுட்பத்துடன் ‘டெலிபதி தொப்பி; – அமெரிக்க விஞ்ஞானிகள் முயற்சி!

எல்.சி.டி & இன்ஃப்ரா தொழில்நுட்பத்துடன் ‘டெலிபதி தொப்பி; – அமெரிக்க விஞ்ஞானிகள் முயற்சி!

அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் E.S.P உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் இன்றளவும் ஆச்சரியத்தை தரும் விஷயம்தான். ஆனாலும் இந்த E.S.P (Extra Sensory Perception) என்பது உண்மையா? இல்லை, மனிதர்களின் எக்ஸ்ட்ரா கற்பனையின் பிதற்றலா? என்பது பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். அல்லது போன் வரலாம். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் ஒருவித எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன.

இதன் ஒரு வகைதான் -பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி (Telepathy) எனப்படுகிறது. நம் பழைய சில பல புராணங்களில் ஈ.எஸ்.பி மற்றும் டெலிபதி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான். ஆதிசங்கரர் சன்யாசம் ஏற்கும் தறுவாயில் அன்னை ஆர்யாம்பாள், தனது அந்திமக்காலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்ட நிலையில், சங்கரரும் அதற்குச் சம்மதிக்க, பல ஆண்டுகள் கழித்து ஆர்யாம்பாள் நோய் வாய்ப்பட்ட போது மகன் சங்கரரை நினைக்க, உடனே பல மைல் தொலைவில் தவம் செய்து கொண்டிருந்த போதும் சங்கரர் அன்னையின் அழைப்பை உணர்ந்து, இறுதித் தறுவாயில் உடன் இருப்பதற்காக விரைந்து வந்தார். இந்தத் தகவல் பரிமாற்றம் தான் ’டெலிபதி’ எனப்படுகிறது

இப்படியான அரிய விஷயமான டெலிபதி மூலம் மனிதர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய நவீன வகை தொப்பி ஒன்றை அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர். இந்த நவீன டெலிபதி தொப்பியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் சக மனிதர் என்ன நினைக்கிறார் என்பதை துல்லியமாக உணர முடியும் என கூறப்படுகிறது. எல்.சி.டி மற்றும் இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தை கொண்டு இந்த நவீன வகை தொப்பி உருவாக்கப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இதை பயன்படுத்தி ஒரு மனிதரின் உடல் உறுப்புகளையும் கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. இதனால் நோய்களை எளிதில் கணடறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் முன்னாள் எக்சிகியூட்டிவ் மேரி லூ ஜெப்செனின் நிறுவனம்தான் இந்த தொப்பியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 8 ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஒருவர் பேசாமலேயே அவர் எண்ண நினைக்கிறார் என்பதை எதிரே இருப்பவர் உணர முடியும். 100க்கும் மேற்பட்ட பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைப் பெற்றுள்ள மேரி லூ ஜெப்சென், 2016ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகி, Openwater எனும் நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.