மருத்துவர்கள் பாதுகாப்புக்கான பணிக்குழு -சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

மருத்துவர்கள் பாதுகாப்புக்கான பணிக்குழு -சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்திய கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்,”பெண்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையும், அவர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாத நிலைமை இருந்தால் நாம் சம உரிமையை மறுக்கிறோம் என்று அர்த்தம்” எனக் கூறி நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் முதுகலை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை இன்று (ஆக. 20) விசாரிக்கத் தொடங்கியது. இந்த விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆஜராகினர். மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது ஓர் அடிப்படையான பிரச்சினை என்று தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

உயிரிழந்த மாணவியின் பெயர், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஊடகங்களில் வெளிவந்ததற்கு தலைமை நீதிபதி மிகுந்த கவலை தெரிவித்தார். மாணவியின் மரணத்தை தற்கொலை வழக்காக மாற்ற மருத்துவக் கல்லூரியின் முதல்வர் முயன்றதாகவும் சந்திரசூட் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “சம்பவம் நடந்தபோது பெற்றோர்கள் மருத்துவமனையில் இல்லை. வழக்குப் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு மருத்துவமனையின் மீது உள்ளது” என்று தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.

மேலும் இது ஏதோ ஒரு மருத்துவமனையில் நடந்த ஏதோ ஒரு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் இல்லை. மாறாக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளை அது குறிக்கிறது. அவர்கள் பயிற்சி மருத்துவர்கள், உள் உறைவிட மருத்துவர்கள் அதிலும் குறிப்பாக பெண் மருத்துவர்கள் என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான இளம் மருத்துவர்கள் 36 மணிநேரம் வேலை செய்கிறார்கள். ஒரு பாதுகாப்பான பணிசெய்யும் சூழலை உருவாக்க தேசிய அளவிலான நெறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்றால், நாம் அனைவருக்குமான சமத்துவத்தை மறுக்கிறோம் என்று அர்த்தம்” இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதை அடுத்து வழக்கை விசாரித்து வரும் சிபிஐ வரும் வியாழக்கிழமை தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.அதன்படி மருத்துவ நிபுணர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்குதல், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்தல், மருத்துவர்கள் / மருத்துவ நிபுணர்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடுகள், தனி கழிவறைகள், மருத்துவமனைகளில் முக்கியமான பகுதிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறைகள், சிசிடிவி கேமராக்கள், இரவு போக்குவரத்து வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த பணிக்குழு ஆய்வு மேற்கொள்ளும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

உறுப்பினர்கள் யார் யார்? –

இந்தப் பணிக் குழுவில், அறுவை சிகிச்சை நிபுணர் துணை அட்மிரல் ஆர்டி சரின், டாக்டர் டி நாகேஷ்வர் ரெட்டி, டாக்டர் எம் ஸ்ரீனிவாஸ், டாக்டர் பிரதிமா மூர்த்தி, டாக்டர் கோவர்தன் தத் பூரி, டாக்டர் சவுமித்ரா ராவத், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் பேராசிரியை அனிதா சக்சேனா, மும்பையில் உள்ள கிராண்ட் மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் பல்லவி சப்ரே, எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை மருத்துவர் பத்மா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தப் பணிக்குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இந்திய அரசின் கேபினட் செயலாளர், இந்திய அரசின் உள்துறை செயலாளர், மத்திய சுகாதார அமைச்சக செயலாளர், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், தேசிய தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோர் இருப்பார்கள் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.