“தமிழ் மக்களிடையே தன்மானம் வளர வேண்டும்” – எம். நடராஜன் பேச்சு!

“தமிழ் மக்களிடையே தன்மானம் வளர வேண்டும்” – எம். நடராஜன் பேச்சு!

அமைந்தகரையில் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழ்மண் பதிப்பகம் சார்பில் மறைமலையம் (மறைமலையடிகளின் பேச்சும் எழுத்தும்) மொத்தம் 11472 பக்கங்களை கொண்ட 34 தொகுதிகள் நூல் வெளியீடு நேற்று (9.1.2017) நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற விழாவில், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் நூல்களை வெளியிட்டார். தமிழ் அறிஞர்கள் பெற்றுக் கொண்டனர்.

mn jan 10

நிகழ்ச்சியில் ம.நடராசன் பேசிய போது, “தற்போது தமிழும் தமிழ்நாடும் நெருக்கடியில் இருக்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த நெருக்கடியும் இல்லை. நாங்கள் வீழ்ந்துவிடுவோமா என்று எதிர்பார்ப்போர் மட்டுமே நெருக்கடி என்று கூறுகிறார்கள்.வெளிநாடுகளில் குடியேறிய தமிழர்களால் உலகம் முழுவதும் தமிழ் பரவியுள்ளது. குறிப்பாக ஈழத்தில் இருந்து சென்ற தமிழர்கள் அவர்கள் வாழும் நாடுகளில் தமிழுக்காக தனி இடத்தை உருவாக்கியுள்ளனர். தமிழ் மக்களிடையே தன்மானம், தமிழ்மானம், இனமானம் வளர வேண்டும்” என்றார் ம.நடராசன்.

நிகழ்ச்சியில் பேசிய கி.வீரமணி, “இங்கே வெளியிடப்படும் “மறைமலையம்’ என்கிற மறைமலையடிகளின் படைப்புகள் அடங்கிய 34 தொகுதிகளிலும் தற்போதைய சூழலுக்கு தேவைப்படும் கருத்துகள் உள்ளன.அரசியல் படையெடுப்பு என்பது கை விலங்கு, பொருளாதார படையெடுப்பு என்பது கால் விலங்கு. அவற்றை சுலபமாக உடைத்து விடலாம். ஆனால் பண்பாட்டு படையெடுப்பு என்பது மூளைக்கு போடப்படும் விலங்கு. அதனை உடைக்க பெரியார் என்ற சம்மட்டியால் மட்டுமே முடியும்.ஜல்லிக்கட்டுக்கு தடை, பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை ரத்து என்பன போன்ற நடவடிக்கைகளால் நம்மை சோதித்து பார்க்கிறார்கள்.போராட்டக் களத்தில் இருக்கும் போது ஒற்றுமைகளை ஆழமாக்க வேண்டும். வேறுபாடுகளை அலட்சியப்படுத்த வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார் வீரமணி.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர் காசி ஆனந்தன், முனைவர் க.ராமசாமி, முனைவர் கு.திருமாறன், புலவர் கி.த.பச்சையப்பன், புலவர் செந்தலை கவுதமன், ஓவியர் வீரசந்தானம் ஆகியோர் பேசினர்.மேலும் தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் இளவழகன் கலந்து கொண்டார்.