தமிழ்க் குடிமகன் விமர்சனம்!

தமிழ்க் குடிமகன் விமர்சனம்!

து சில ஆண்டுகளுக்கு நம் ஆந்தை ரிப்போர்ட்டர்-ரில் வந்த சேதி:

நாம் மறந்து போன அந்தக் கால கிராமத்து வண்ணார்கள்..! அந்தக் காலத்தில் சில நாட்களுக்கு ஒருமுறை வண்ணார் வீடு வீடாக வந்து ‘அழுக்கு துணிகளை’ எடுத்துக்கொண்டு போவார்கள். துணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி.. கழுதை மேல் சுமத்தி குளத்துக்கோ.. கால்வாய்க்கோ.. ஆற்றுக்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவார்கள்.. சவக்காரம் போட்டு.. உவர் மண் போட்டு வெள்ளாவி வைத்து வெளுத்து.. வெள்ளைத் துணிகளுக்கு நீலம் முக்கி.. வெயிலில் காயப்போட்டு.. எல்லா ஜாதி மதத்துக்காரர் துணிகளையும் அள்ளிக் கட்டி கழுதைமேல் வைத்து வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவார்கள்.. அதன் பின் அந்தந்த வீட்டுத் துணிகளை அவற்றில் தான் சோரங்கொட்டை சாற்றால் தயாரித்த.. ‘வண்ணார் மை’யைக் கொண்டு போட்ட குறியைப் பார்த்து (ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாக குறியீடு போடுவதற்கே ஒரு தனி கோர்ஸ் நடத்தலாம்) தனித் தனியாக பிரித்து.. இஸ்திரி போட்டு.. கட்டி.. வீடுகளுக்குப் போய் கொடுப்பார்கள்..அதிலும் சில துணிகள் வீடு மாறி போனாலும்.. முத்தம்மா இது கவுண்டர் சட்டை.. இது நம்ம தேவர் துணி என்று திருப்பி அனுப்புவதும் உண்டு.. இதற்குக் கூலியாக சில வீடுகளில் காசு கொடுப்பார்கள்.. சிலர் தானியம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் விளைச்சலில் இருந்து நெல்.. சோளம்.. பயறு வகைகளை கொடுப்பார்கள்.. அந்தக் காலத்தில் கொலைக் குற்றவாளிகள்.. கொலை செய்யப்பட்டவர்கள்.. விபத்தில் இறந்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காண.. அவர்கள் அணிந்திருக்கும் துணிகளில் இருந்த ‘வண்ணான் குறி’ பயன்பட்டது.. வீடுகளில் ‘வண்ணார் கணக்கு’ எழுதுவதற்கென்றே பழைய நோட்டு ஒன்னு இருக்கும்.. வெள்ளாவி வைத்து வெளுத்த துணிகளுக்கு ஒரு தனி வாசனை உண்டு.. புது புத்தகங்களை உள் பக்கத்தில் முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் ரம்மியமான உணர்வு வெளுத்த துணியை உடுத்திருக்கும்போதும் கிடைக்கும்…! நவீனமயமாகிப் போன இப்போதைய வாழ்வில் அந்த வாசனையை இழந்துவிட்ட சூழலில் தன் சாதி சார்ந்த தொழிலை செய்ய மறுக்கும் ஒருவன் சந்திக்கும் பிரச்சனைகளை மைய்யமாக வைத்து உருவாகி உள்ள சாதீய படமே இந்த தமிழ்க்குடிமகன்.

அதாவது சாதி பிரச்சனை என்றால் பலரால் சுட்டக்கட்டப்படு நெல்லை மாவட்டத்தில் நடக்கும் கதையாமிது..மேலே குறிப்பிட்ட வண்ணார் எனப்படும் சலவைத்தொழில் மற்றும் மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யும் தொழிலை செய்து வரும் வெட்டியான் குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோ சேரன், தான் செய்யும் தொழிலையும், அத்தொழில் செய்பவர்களையும் ஊர் மக்கள் இழிவாக பேசிவதால் அந்தத் தொழிலே தேவையில்லை என்று முடிவு செய்து, வேறு ஒரு தொழிலில் இறங்குகிறார். ஆனால், எந்த நிலைக்கு போனாலும் சரி, எப்படி மாறினாலும் சரி, இன்னார் இந்த தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற மனநிலையோடு ஊர் மக்கள் சேரனுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறார்கள். அவற்றை சமாளித்து தனது நிலையை மாற்றியே தீருவேன் என்ற போராட்ட குணத்தோடு சேரன் கிராம அதிகாரி தேர்வெழுதப் புறப்படுகிறார். அதே காலக் கட்டத்தில் ஊர் பெரியவர் ஒருவர் இறந்துவிட, அவரது உடலை அடக்கம் செய்ய சேரனை அழைக்கிறார்கள். அவர், இனி அந்த தொழிலை நான் செய்யப்போவதில்லை என்று மறுக்கிறார். தங்களை மீறி சேரன் இயங்குவதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். கூடவே ஹீரோ தங்கையை மேல் ஜாதிக்காரன் ஒருவன் லவ் செய்ய அது பெரும் பிரச்னையாகி தன் விவகாரத்தில் சட்டம் தலையிட, பிரச்சனை நீதிமன்றத்திற்குப் போகிறான் ஹீரோ இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்குகிறது. அது என்ன தீர்ப்பு? சட்டத்தின் துணையோடு ஜாதி சர்ச்சையை ஒழிக்க முயற்சித்துள்ளார்கள் தமிழ்க்குடிமன் டீம்.

சிலபல காலம் கழித்து சேரன் நாயகனாக தோன்றி இருக்கிறார்.நிஜத்தில் அவருக்கு உள்ள போராட்ட குணத்தையும் அமைதியும் கலந்த ரோல் என்பதால் உள்வாங்கி வருகிறார் போகிறார்.. ஆனால் நடிப்பு என்றால் என்னவென்பதை மறந்து விட்டது போல் கோபத்தைக் கூட மென்மையாக வெளிப்படுத்து கடுப்பேற்றுகிறார்.உயர் சாதி ரோலில் நடித்திருக்கும் லால், தனது அனுபவமான நடிப்பு மூலம் ஸ்கோர் செய்கிறார்.சேரனின் ஒய்ஃப் கேரக்டரில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, சிச்ட்ரகாக நடித்திருக்கும் தீபிக்‌ஷா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், ரவி மரியா, துருவா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி, மயில்சாமி என படத்தில் நடித்திருக்கும் சகலரும் எடுத்துக் கொண்ட கதைக்கு பொருத்தமே.

கேமராமேன் ராஜேஷ் யாதவ் கை வண்ணத்தால் ஒரு வில்லேஜூக்குள் நாமே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.. மியூசிக டைரக்டர் சாம் சிஎஸ்.போட்டிருக்கும் பாடல்களும், பின்னணி இசையும் அப்போதைக்கு ஓ கே ரகம்.

எடுத்துக் கொண்ட கதையின் வீரியத்தை உணர்த்தும் நோக்கில் ஆணவக்கொலை, கிராமத்தில் வாழும் சாதிய கட்டமைப்பு தொழிலுக்கும் சாதிக்கும் உள்ள உறவு போன்ற விஷயங்களை விவரித்து விட்டு க்ளைமாக்ஸில் புதுசாக தமிழ் குடிமகன் என்றொரு வர்க்கத்தை உருவாக்குவதெல்லாம் எடுபடவில்லை… கூடவே மேல் ஜாதி லால் சடங்கையே புறக்கணிப்பதும் ஒட்டவில்லை..

இந்த படம் சொல்லும் தீர்வை விட சாதி, குலத்தொயில், சாதியில் இருக்கும் உட்பிரிவுகள் போன்றவற்றை நீதிமன்ற காட்சியில் விரிவாக பேசியிருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் முன் வைக்கும் கேள்வியே ஒரு கேள்விக் குறி என்பதுதான் சோகம்

மொத்தத்தில் இந்த – தமிழ் குடிமகன் கோலிவுட்டுக்கு வந்த இன்னொரு ஜாதிப் படம்!

மார்க் 2.75/5

error: Content is protected !!