பிரேசிலில் சூறாவளி; மழை, வெள்ளம்: இதுவரை 26 பேர் உயிரிழந்ததாக தகவல்..!!

பிரேசிலில்  சூறாவளி; மழை, வெள்ளம்:  இதுவரை 26 பேர் உயிரிழந்ததாக தகவல்..!!

பிரேசிலை தாக்கிய வலுவான புயல், கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்தனர், இதில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பலர் படுகாயமடைந்தனர். கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரணம் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் இன்றும், நாளையும் மீண்டும் மழை பொழியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்புப்படைகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் ஆற்றல் மிக்க வெப்பமண்டல சூறாவளி எதிரொலியாக அந்நாட்டின் தெற்கு பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. ஆறுகளில் இரு கரைகளை தொட்டு வெள்ளம் பாய்வதால் மியூகம், வாலேதோ – டக்குவாரி ஆகிய நகரங்கள் தனி தீவுகளாக மாறிவிட்டன. முக்கிய சாலைகளை சுமார் 8 அடி அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டின் கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசில் பேரிடர் மேலாண் துறை அறிவித்துள்ளது. ரியோ கிராண்டிட் பகுதியில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் ஏராளமான வீடுகளின் கூரைகள், கதவுகள், வாகனங்கள் சேதமடைந்தன.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை பிரேசில் மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர். சாண்டா கேடரினா நகரில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரை பேரிடர் மேலாண் படையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள பெண்மணி ஒருவர் கூறுகையில், இதுபோன்ற ஒரு பேரழிவை நான் கண்டதில்லை. வெள்ளத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!