செய்தியைக் கேட்க / Listen to News
மனித குலத்தின் மிகப்பழமையான, நம்பிக்கைக்குரிய தோழன் நாய். வேட்டையாடும் சமூகமாக மனிதன் வாழ்ந்த காலம் தொட்டே அவனோடு இணைந்து பயணித்த விசுவாசமான இந்த விலங்கு, காலப்போக்கில் வெறும் காவல் காரனாக மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே மாறிவிட்டது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான இந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டாடுவதற்காகவும், அதே வேளையில் தெரு நாய்களின் நலன் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி சர்வதேச நாய் வளர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வரலாறும் இதன் பின்னணியில் உள்ள முதன்மை நோக்கமும்
2004-ஆம் ஆண்டில் செல்லப்பிராணிகள் நல ஆர்வலரும் விலங்கு நடத்தை நிபுணருமான கொலின் பேஜ் என்பவரால் இந்த தினம் தொடங்கப்பட்டது. தனது 10-வது வயதில் தனது குடும்பத்தினர் விலங்குகள் காப்பகத்தில் இருந்து ஷெல்டி என்ற நாயைத் தத்தெடுத்த ஆகஸ்ட் 26-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் அவர் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தார். வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளைக் கொண்டாடுவது மட்டுமே இந்த தினத்தின் நோக்கமல்ல. உலகெங்கிலும் ஆதரவின்றிக் தெருக்களில் கிடக்கும், காப்பகங்களில் தவிக்கும் தெரு நாய்களை தத்தெடுப்பதை ஊக்குவிப்பதும், அவற்றை சித்திரவதைகளில் இருந்து பாதுகாப்பதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.

மனித சமூகத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் நாய்கள்
மனித சமூகத்திற்கு நாய்கள் செய்யும் சேவைகள் வெறும் பொழுதுபோக்கோடு முடிந்துவிடுவதில்லை. பார்வை சவால்கள் கொண்ட மனிதர்களுக்கு வழிகாட்டியாக அமைவது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் தெரபி விலங்காக இருப்பது என நாய்களின் பங்களிப்பு அளப்பரியது.குறிப்பாக காவல் துறை மற்றும் இராணுவத்தில் நாய்களின் பங்கு மிக முக்கியமானது. வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கண்டறிதல், குற்றவாளிகளைத் தடமறிந்து தேடுதல், இயற்கை பேரிடர் காலங்களில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மனிதர்களை மீட்கும் கடினமான பணிகளில் நாய்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் செயலாற்றுகின்றன. மருத்துவத் துறையில்கூட புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயின் மாறுபாடுகளை மோப்ப சக்தியால் கண்டறியும் பயிற்சிகள் நாய்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
நாய் கடிகளுக்குப் பின்னால் இருக்கும் நெருக்கடிகளும் உண்மைகளும்
சமீபகாலமாக நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் தெரு நாய்கள் மனிதர்களைக் கடிப்பது மற்றும் குழந்தைகளைத் தாக்குவது தொடர்பான செய்திகள் அதிகரித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், நாய்கள் இயல்பாகவே மனிதர்களைத் தாக்கும் குணமுடையவை அல்ல என்பதே விலங்கியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
நிகழும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு மனிதர்களால் ஏற்படும் சில நெருக்கடிகளும், சூழல்களுமே முக்கியக் காரணமாக அமைகின்றன. நாய்கள் வன்முறையாக மாறுவதற்கு முக்கியக் காரணங்கள்:
பசியும் இருப்பிட நெருக்கடியும்: உணவுக் கழிவுகள் சரியாகக் மேலாண்மை செய்யப்படாத இடங்களில் பசியால் தவிக்கும் நாய்கள் எல்லைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. மேலும் அவை வாழும் இடங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது தீவிர பதற்றமடைகின்றன.
மனிதர்களின் தவறான அணுகுமுறை: வீதிகளில் நடமாடும் நாய்களைக் கல்லால் அடிப்பது, வாலை மிதிப்பது, குட்டிகளைப் பிரிப்பது அல்லது அச்சுறுத்தும் வகையில் துரத்துவது போன்ற மனிதர்களின் செயல்கள் நாய்களிடம் தற்காப்பு உணர்வைத் தூண்டி கடிக்க வைக்கின்றன.
நோய்த்தொற்றுகள் மற்றும் இனப்பெருக்க காலம்: ரேபிஸ் போன்ற கொடிய நோய்கள் தாக்கும்போது நாய்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அவை கட்டுப்பாட்டை இழக்கின்றன. அதேபோல் இனப்பெருக்க காலங்களில் இயல்பாகவே அவற்றின் சீறும் குணம் / ஆக்ரோஷமான தன்மை திகரிக்கும்.

முறையான விதிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்
நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கவும், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பை ஒரே நேரத்தில் உறுதி செய்யவும் அரசு சில விதிகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (ABC) திட்டம்: தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முறையாகக் கருத்தடை அறுவை சிகிச்சைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
ரேபிஸ் தடுப்பூசி முகாம்கள்: தெரு நாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் என அனைத்துக்கும் தவறாமல் ஆண்டுதோறும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
தெரு நாய்கள் தத்தெடுப்பு: வெளிநாட்டு ரக நாய்களை பல்லாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குவதை விட, நமது நாட்டின் காலநிலைக்கேற்ற உள்ளூர் தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கும் விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப வேண்டும்.
பொறுப்புள்ள நாய் வளர்ப்பு: நாய் வளர்ப்போர் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது சங்கிலி மற்றும் வாய்க்கவசம் அணிவிப்பது, அவற்றுக்கு உரிய சமூகப் பயிற்சி அளிப்பது மற்றும் பொது இடங்களில் கழிவுகளைச் சேகரிப்பது போன்ற பொறுப்புகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
நாய்கள் மனிதர்களுக்கு வெறும் காவல் விலங்கு மட்டுமல்ல, அவை நிபந்தனையற்ற அன்பைப் பொழியும் தூய ஜீவன்கள். தெருவில் வாழும் நாய்களையும் இரக்கத்தோடு அணுகுவதும், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசின் விதிகளை முறையாகப் பின்பற்றி செயல்படுவதுமே இந்த சர்வதேச நாய் தினத்தில் நாம் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்.
மூக்காண்டி
