ஸ்டேட்டின் மாத்திரைகள்: உயிர்காக்கும் வரமா? பக்கவிளைவுகளின் கூடாரமா?

ஸ்டேட்டின் மாத்திரைகள்: உயிர்காக்கும் வரமா? பக்கவிளைவுகளின் கூடாரமா?

லகெங்கும் இதயம் சார்ந்த நோய்களால் (Cardiovascular disease) ஆண்டுக்குச் சுமார் 2 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுப்பதில் ‘ஸ்டேட்டின்’ (Statins) எனப்படும் கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன. இருப்பினும், இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் நினைவாற்றல் குறையும், தூக்கம் கெடும், ஆண்மைக்குறைவு ஏற்படும் எனப் பல்வேறு அச்சங்கள் மக்கள் மத்தியில் பரவியுள்ளன. இதனால் மாரடைப்பு அபாயம் உள்ளவர்கள் கூட, பயந்துபோய் இந்த மருந்தைத் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், புகழ்பெற்ற ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு அறிக்கை, இந்தச் சந்தேகங்களுக்கு அதிரடியான முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கட்டுக்கதைகளை உடைக்கும் ஆக்ஸ்போர்டு ஆய்வு

ஆக்ஸ்போர்டு பாப்புலேஷன் ஹெல்த் (Oxford Population Health) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த விரிவான ஆய்வில், ஸ்டேட்டின் மாத்திரைகளின் பாக்கெட்டுகளில் (Package Leaflets) குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான பக்கவிளைவுகளுக்கும், இந்த மருந்திற்கும் நேரடித் தொடர்பில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக:

  • நினைவாற்றல் இழப்பு (Memory Loss)

  • மனச்சோர்வு (Depression)

  • தூக்கக் கோளாறுகள் (Sleep disturbance)

  • பாலியல் பலவீனம் மற்றும் ஆண்மைக்குறைவு (Erectile and sexual dysfunction)

போன்ற பாதிப்புகள் ஸ்டேட்டின் எடுப்பதால் ஏற்படுவதில்லை என இந்த ஆய்வு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. பல நேரங்களில் நோயாளிகளின் மனரீதியான பயமே (Nocebo effect) இத்தகைய பாதிப்புகளாக உணரப்படுகிறதே தவிர, மருந்தின் வேதிவினையால் அல்ல என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

நன்மைகள் Vs பாதிப்புகள்: எது அதிகம்?

கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் ஒருவருக்கு ஏற்படக்கூடிய மாரடைப்பு மற்றும் பக்கவாதம் (Stroke) போன்ற உயிர்ச்சேதங்களைத் தடுப்பதில் ஸ்டேட்டின் அதீதத் திறன் கொண்டது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த மருந்தால் ஏற்படக்கூடிய மிகச் சிறிய பக்கவிளைவுகளை விட, அது வழங்கும் நன்மைகளே பன்மடங்கு அதிகம்.

“ஸ்டேட்டின்கள் உயிர்காக்கும் மருந்துகள். கடந்த 30 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்திப் பலன் பெற்றுள்ளனர். ஆனால் அதன் பாதுகாப்பு குறித்த தேவையற்ற அச்சம், பலரை இந்த மருந்தைப் பயன்படுத்துவதிலிருந்து தடுத்திருக்கிறது. இது உண்மையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய முடக்கம் அல்லது மரணத்தைத் தவிர்க்க முடியாமல் செய்துவிடுகிறது” என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முடிவாக…

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவைக் குறைப்பதன் மூலம் இதயத்தைக் காக்கும் ஒரு கவசமாக ஸ்டேட்டின் செயல்படுகிறது. மருந்துச் சீட்டுகளில் சட்டரீதியான பாதுகாப்புக்காக அச்சிடப்படும் எல்லாப் பக்கவிளைவுகளும் ஒருவருக்கு ஏற்படுவதில்லை. எனவே, தேவையற்ற வதந்திகளை நம்பி உயிர்காக்கும் மருந்துகளைத் தவிர்ப்பது ஆபத்தானது. இதய நோய் அபாயம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு இந்த மருந்தைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

டாக்டர் செந்தில்

Related Posts

error: Content is protected !!