உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தானத்தில் சிறந்தது அன்ன தானம், ரத்த தானம் என்ற நிலையெல்லாம் மாறி, இன்று உடலுறுப்பு தானம்தான் மிகவும் உயரிய தானம் என்ற நிலையை எட்டியிருக்கிறது. உடலுறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை முன்பைவிட கணிசமாக தற்போது உயர்ந்துகொண்டிருந்தாலும், மாற்று உறுப்பு கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உடலுறுப்பு தானத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தூண்டுகோலாக அமைந்தது ஹிதேந்திரன் மரணத்தில் அவரது பெற்றோர் எடுத்த முடிவு-தான் என்றால் அதை மிகையல்ல.. சென்னை அருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரன் என்ற 15 வயது பள்ளி மாணவன், கடந்த 2008-ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தான். ஹிதேந்திரனின் பெற்றோர் மருத்துவர்கள் என்பதால் அவர்கள் தங்கள் மகனின் இதயம், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகளை தானம் செய்தனர். இந்நிகழ்வு அந்த நேரத்தில் நாடு முழுவதும் உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஹிதேந்தின் மரணம் அடைந்தாலும் அவனால் உயிர்பிழைத்தவர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

அத்துடன் ஹிதேந்திரனின் பெற்றோர் தங்கள் மகனுடைய பெயரில் அறக்கட்டளை நிறுவி, உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். பள்ளிக் கல்வித்துறையின் ஆறாம் வகுப்பு தமிழ்ப்புத்தகத்தில் ஹிதேந்திரனின் உடலுறுப்பு தானம் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் தமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட காரணமாக இருந்த ஹிதேந்திரன் 15ஆம் ஆண்டு நினைவுநாளின்று! இந்த நாளை தமிழ்நாடு அரசு உடல் உறுப்புதான விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச் சாவு நிலையை அடைந்த துயர சூழலிலும் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன் வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான், இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈன்று பல உயிர்களை காப்பவரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதை உடன் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!