ஒரு ராஜா உள்ளே: ஒரு ராஜா வெளியே -சீனிவாஸ் திவாரி!
சென்னையின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி சிறப்பு வாய்ந்த ஒன்று. அத்தொகுதி இரண்டு முறை முதல்வரின் தொகுதியாக இருந்துள்ளது. திமுகவின் சார்பில் அதன் தலைவர் கருணாநிதி மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். அப்போது அதன் பெயர் சேப்பாக்கம் மட்டுமே. தொகுதி மறுசீரமைப்பின் போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எனப் பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் திமுகவின் முக்கிய பிரமுகரான ஜெ அன்பழகன் வெற்றி பெற்றார். சமீபத்திய கோவிட்-19 பெருந்தொற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அப்போதிலிருந்து அத்தொகுதி வெற்றிடமாக இருந்து வருகிறது. இதனிடையே அன்பழகனின் மகனான ராஜா இத்தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற முயற்சிப்பதாகத் தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா அதே தி.நகர் தொகுதியில் போட்டியிட விரும்பியிருந்தார். அதற்காக அவர் முன் தயாரிப்புப் பணியில் கூட இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக ஜெ.அன்பழகனின் மகன் ஏ. ராஜா இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இத்திருப்பத்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு எடுப்பது என்பதில் எச்.ராஜா குழப்பத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தேசியக் கட்சியின் முக்கியப் பிரமுகர் அரசியலுக்கு புதியவரான ஒருவருடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தால் கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் அவருக்கும் அவமானம் ஏற்படும் என்பதால் எச்.ராஜா தனக்கு ஏற்ற தென் தமிழகத் தொகுதி ஒன்றிற்கு மாறிவிடலாமா என்று சிந்திப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தனது தந்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு விசுவாசமாக செயல்பட்டு வந்ததும், அடுத்த ஆளுங்கட்சி திமுக எனும் பரவலான பேச்சும், இத்தொகுதியில் கணிசமாக வாழும் இஸ்லாமிய சிறுபான்மையினரின் ஆதரவு திமுகவிற்கே கிடைக்கும் என்பதாலும் ஏ. ராஜா இத்தொகுதியைத் தேர்வு செய்ததாகத் தெரிகிறது. ஹெச். ராஜாவைப் பொறுத்தவரை இங்கு வாழும் படித்த மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கும் மனப்பாங்குடன் இருப்பார்கள். மேலும் ஹிந்து மக்களின் நலன்களுக்காக பாடுபடுவதாக பாஜக தொடர்ந்து கூறி வருவதால் இம்மக்களின் வாக்குகளையும் பெற்று விடலாம் என்று கணக்குப் போட்டு வந்ததாகத் தெரிகிறது. இப்போது ஏ. ராஜா போட்டியிடுவதால் அரசியல் கணக்குகள் மாறிப்போயுள்ளன. ஜெ. அன்பழகன் உயிருடன் இருந்த வரையில் ஜாதி,மதம் வேறுபாடுகள் இன்றி அனைவரையும் அரவணைத்துச் சென்றுள்ளது அங்குள்ள மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே ஏ.ராஜாவின் வெற்றி வாய்ப்பு குறைந்ததல்ல எனவும் கூறுகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தி.நகர் அடங்கிய தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் அஇஅதிமுகவின் பி. சத்யா வெற்றி பெற்றார். தொடர்ந்த இத்தொகுதி அ இ அதிமுகவின் வசமே இருந்து வருகிறது.
சமீபத்திய கொரோனா காலத்தில் ஏ. ராஜா இத்தொகுதியில் பல நலத்திட்டங்களை வழங்கி யுள்ளதாகவும் இதுவும் அவரது செல்வாக்கு வளரக் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப் படுகிறது. வீட்டிலேயே ஆன் – லைன் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டேப்லட் வழங்கி யதாகவும் கூறுகின்றனர். இது பெரிய வரவேற்பைப் பெற்றதாகவும் கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.
அனைத்திற்கும் மேலாக ஹெச்.ராஜா கடந்த 2001 ஆம் ஆண்டில் காரைக்குடி தொகுதியில் இருந்து பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்காசி தொகுதியிலும் அவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜா 2,00,000 மேலான வாக்குகளைப் பெற்றுள்ளார். எனவே அவர் ஏற்கனவே போட்டியிட்ட காரைக் குடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடலாம். தற்போது இத்தொகுதியின் பிரதிநிதியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர் ராமசாமி இருந்து வருகிறார். ஆகையால் இரு தேசியக் கட்சிகளுக்கு இடையிலானப் போட்டியாக அடுத்தப் பொதுத்தேர்தல் இருக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.