ரஜினியின் அரசியல் வெடி நமத்து போனதன் பின்னணி!

ரஜினியின் அரசியல் வெடி நமத்து போனதன் பின்னணி!

இப்போது ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும். ஏன் தெரியுமா? ‘ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு தான் தெரியும்…’ இந்த வாக்கியம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது ரஜினியை அதிகமாகவே பிடிக்கிறது. காரணம் அவர் எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் துணிச்சல். உண்மையில் ரஜினி கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவதைவிட இப்படி வரவில்லை என்று அறிவிக்கத் தான் அதிக துணிச்சல் தேவைப்பட்டது. காரணம் ரஜினியை சூழ்ந்திருந்த நெருக்கடி.

டிசம்பர் 3ந்தேதி அரசியல் கட்சியை அறிவித்தபோது ரஜினியை கவனித்தவர்களால் இதை உணர முடியும். வழக்கமான ரஜினியாகவே அப்போது அல்ல… அது நிர்ப்பந்தத்தில் எடுத்த முடிவு என்று தோன்றியதற்கான காரணங்கள்…

1. ரஜினியின் உடல்நிலை குறித்து பரப்பப்பட்ட தகவல்கள்.

ரஜினியின் வாழ்க்கையில் அவர் எதையுமே தன் ரசிகர்களிடம் மறைத்தது இல்லை. எப்போதுமே வெளிப்படையாக இருந்து வருபவர் அவர். உடல்நிலை விஷயத்திலும் அப்படித் தான். கடந்த மார்ச் மாதம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தன்னுடைய கொள்கைகள் பற்றி அறிவித்தபோது தன்னுடைய உடல்நிலை, வயோதிகம் குறித்தெல்லாம் வெளிப்படை யாக பேசினார். ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அவரது உடல் நிலை பற்றி அறிக்கை ஒன்று வெளியானதும் அதில் சொல்லப்பட்டு இருப்பவை உண்மை தான் என்று ரஜினி கூறியதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதே காலகட்டத்தில் தான் கட்சி தொடங்க வேண்டாம் என்று ரஜினிக்கு தி.மு.க தரப்பில் இருந்தும் அ.தி.மு.க தரப்பில் இருந்தும் பிரஷர் கொடுக்கப்ப டுவதாக தகவல் வெளியானது. கொரோனாவின் தாக்கம் குறையும் நேரத்தில் ரஜினியின் ஆரோக்கியம் பற்றி அவரே சொல்லும்படியும் கொரோனா அச்சத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஏன் ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும்?

2. அமித் ஷாவின் பூடகம்

அமித் ஷா வருகையின் போது அவர் ரஜினியை சந்திக்க விரும்பியதாகவும் ஆனால் ரஜினி பிடி கொடுக்காததாகவும் தகவல் பரவின. அமித் ஷாவை குருமூர்த்தி சந்தித்து பேசினார். பின்னர் குருமூர்த்தி ரஜினியை சந்தித்து பேசினார். இந்த 2 சந்திப்புகளுமே ஒரு மணி நேரத்தை தாண்டி நீடித்தது. அமித் ஷா கலந்துகொண்ட விழாவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று பகிரங்கமாக அறிவித்த நிலையில் அமித் ஷா அப்படி எந்த வாக்குறுதியையும் தரவில்லை. அதை வழிமொழியவும் இல்லை. அமித் ஷா யாருக்கோ, எதற்காகவோ காத்திருந்தார் என்பது மட்டும் புரிந்தது. அது ரஜினிக்காக தானா?

3. உங்களுக்கு என்ன பதவி?

இதுவரை ரஜினி கூடாரத்தில் பார்த்திராத ஒருவர் ரஜினி கட்சி அறிவிப்பு வெளியிடும்போது அருகில் இருக்கிறார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி தரப்படுகிறது. இத்தனை நாட்களாக கூடவே இருந்து ரஜினியின் அரசியல் வருகைக்கு காரணமாக இருந்த தமிழருவி மணியனுக்கே மேற்பார்வையாளர் பதவி தான் தரப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் வரை அர்ஜூனமூர்த்தி பா.ஜ.க.வில் இருந்து விலகவில்லை. திடீரென்று இத்தனையும் நடக்க காரணம் என்ன? குறிப்பாக அத்தனை பத்திரிகையாளர்கள் மத்தியில் அவரிடமே ரஜினி உங்களுக்கு என்ன பதவி சொன்னேன்? என்று கேட்கிறார். ரஜினி இப்படி தடுமாறியதே இல்லை. அறிவித்தது இரண்டே பொறுப்புகள். அதையும் மறப்பாரா?

4. தாமதித்தது ஏன்?

கட்சி தொடங்குவதற்கு முன்பே ரஜினியிடம் தோல்வி பயம் தெரிவது ஏன் என்று அப்போதே நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர். வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, சாதி, மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். என்று டுவிட் போட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போதும் தோல்வி பற்றி தான் பேசுகிறார். உண்மையில் அது தோல்வி பயமா? இல்லை நிர்ப்பந்தத்தால் கட்சி அறிவிப்பை வெளியிட்ட இக்கட்டான சூழ்நிலையா?

5. கட்சியை அறிவிக்க ஒரு தேதி. அந்த அறிவிப்பை வெளியிட ஒரு தேதி. இதை அப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? கட்சியை அறிவிக்கவில்லை. கட்சி பெயரையோ நிர்வாகிகளையோ அறிவிக்கவில்லை. அதற்கான தேதியை இன்னொரு தேதியில் அறிவிப்பேன் என்று சொல்வதற்கு அத்தனை களேபரம் தேவையா? அப்போதே அறிவிக்க வேண்டும் என்ற நெருக்கடி யாரால் கொடுக்கப்பட்டது?

  • எல்லாவற்றுக்கும் மேலாக…
  • ‘நான் இன்னும் கட்சி தொடங்கவே இல்லை. ஆனால் அதுக்குள்ளே நான் எதிர்பார்க்காத இடத்தில் இருந்தெல்லாம் பிரஷர் வருது…’ இது சில நாட்களுக்கு முன்னர் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் ரஜினி பகிர்ந்த வார்த்தைகள்… எனவே ரஜினிக்கு கட்சி தொடங்குவதிலோ அரசியலில் ஈடுபடுவதிலோ விருப்பமே இல்லை. ஒரு சில அழுத்தங்களால் கடந்த டிசம்பர் 3ந்தேதி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
  • ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட இந்த 3 ஆண்டுகளில் பலருடன் ரஜினி ஆலோசனை நடத்தி இருக்கிறார். ஆனால் உள்ளே ரஜினி சொன்னதாக எந்த தகவலும் வெளியே வந்தது இல்லை. தமிழருவி மணியனில் இருந்து கராத்தே தியாகராஜன் வரை இதே நிலைமை தான்… எல்லோரிடமும் அவர்களது கருத்துகளையும் ஆலோசனை களையும் கேட்பவர் தன்னுடைய முடிவையோ எண்ணத்தையோ வெளிப்படையாக சொல்லாமலேயே இருந்துள்ளார்.
  • பொதுவாக ஒரு விஷயத்தில் பாசிட்டிவ் எண்ணத்தில் இருப்பவர் தன்னுடைய எண்ணத்தை வெளியில் சொல்லி கலந்தாலோசிப்பார்கள். ஆனால் நெகட்டிவ் எண்ணத்தில் இருப்பவர்கள் மற்றவர்களது எண்ணங்களை மட்டுமே வாங்கிக் கொள்வார்கள். இது உளவியல். அரசியல் கட்சி தொடங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லாததையே இது காட்டுகிறது. தொடங்கினால் நம்மால் ஜெயிக்க முடியுமா? என்ற சந்தேகம் அவருக்கு இருந்துகொண்டே இருந்திருக்கிறது.
  • சில அழுத்தங்களால் கட்சி அறிவிப்பை வெளியிட்டவர் ஷூட்டிங், கொரோனா என்று தட்டி கழிக்க காரணம் கிடைத்ததால் பின்வாங்கும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
    எனவே தான் உண்மையில் இத்தனை நெருக்கடி, அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பை வெளியிட நிச்சயம் துணிச்சல் வேண்டும். ரஜினி மட்டுமல்ல யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவது என்பது அவர்களது உரிமை. வரவே கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ரஜினியின் அரசியல் மக்களுக்கான அரசியலாக இல்லாமல் ஆளுங்கட்சிகளுக்கான அரசியலாகவும் மதவாத சக்திகளின் பினாமியாகவும் அமைந்தது தான் எதிர்ப்புகளுக்கு காரணம். அவர்களின் சதிக்கு பலியாகாமல் துணிச்சலாக இப்படி ஒரு முடிவு எடுத்ததற்காக இப்போது நாம் ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும்…!
  • – க.ராஜீவ் காந்தி
error: Content is protected !!