யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுவை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்துவதே பிழையானது!.

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுவை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்துவதே பிழையானது!.

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதை ஒட்டி ஊடக நண்பர் பேசிக்கொண்டிருந்தார். ‘இது அநியாயம்ங்க, எப்படிங்க இதை அனுமதிக்கலாம் பேட்டி எடுத்ததுக்கு எப்படி கைது பண்ண முடியும். பேட்டில பேசின விஷயங்களுக்கு பேட்டி எடுத்தவர் அல்லது ஒளிபரப்பினவர் எப்படி பொறுப்பாக முடியும், இது ஊடக சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்குகிற ஒன்றாக இருக்கிறது, இப்படியே போனால் யாருமேபேட்டி எடுக்க முடியாது’’ என்று கொதிப்பாக பேசினார். வெயில் நேரத்தில் இவ்வளவு கொதிப்பு ஆகாதுதான். அவருக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் கொடுத்துவிட்டு உரையாடினேன். அவரிடம் பேசியதன் அல்லது அல்லது என்னுடைய ஊடகத்துறை அனுபவத்திலிருந்து விளக்கியதன் சற்றே நீண்ட சுருக்கம் இதுதான்.

செய்திகளுக்காக வழக்குகளை எதிர்கொள்வதும் கைதுகளை எதிர்கொள்வதும் ஊடகங்களுக்கோ ஊடகவியலாளர்களுக்கோ புதியதில்லை. இது சகஜமான ஒன்றுதான். மான நஷ்ட ஈடு வழக்கிலிருந்து கைது வரை நிறையவே பார்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் ஊடகங்களுக்காக நின்று போராடி இருக்கிறோம். ஆனால் ஃபெலிக்ஸ் விஷயம் அப்படிப்பட்டதல்ல. ஃபெலிக்ஸ் பிரச்சனையை புரிந்துகொள்ள பேட்டி என்பதன் ஊடக வடிவத்தினையும் அது யூடியூபில் என்னவாக பரிணமித்துள்ளது என்பதையும் புரிந்துகொள்வது முக்கியம்.

முதலில் பேட்டி எடுக்கிறவருக்கும் ஒளிபரப்புகிறவர்களுக்கும் அல்லது அதை அச்சில் ஏற்றுபவர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். மற்ற எந்த தொழிலில் ஈடுபடுகிறவர்களை விடவும் ஊடகப்பணியில் இருப்பவர்களுக்கே இது அதிகம் இருக்கவேண்டியுள்ளது. பேட்டிகளில் சொல்கிற அத்தனையையும் நம்மால் முதலில் ஒளிபரப்ப முடியாது. (இவை நேரடி ஒளிபரப்புகளும் இல்லை.) ஏன்?இந்த பேட்டிகளை முறையாக கத்தரித்து தணிக்கை செய்தே வெளியிட வேண்டும்… ஏன்?

ஊடகத்திற்கு இந்த பொறுப்பு ஏன் இருக்கிறது என்றால், நாளை இப்பேட்டிகளில் சொல்லப்படும் கருத்துகளால் அல்லது வதந்திகளால் உண்மைக்கு புறம்பான தகவல்களால் பிரச்சாரங்களால் தனிநபர்களோ அல்லது குழுக்களோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படலாம், அதற்கான Enablers ஆக நாம் இருந்துவிடலாகாது. நாளை யாரோ ஒருவர் மீது வழக்குகள் பாயலாம். விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படலாம். வகுப்புவாத சாதிய கலவரங்கள் உருவாகலாம், மக்களுக்கு மோசமான கருத்துகள் சென்று சேரலாம், மக்களின் வெறுப்பை தூண்டுகிற பிரச்சாரமாக அது இருக்கலாம். அல்லது அது ‘பிளாக்மெயில்’ வகையறாவாகவும் இருக்கலாம்.

இதையெல்லாம் கணித்தே பேட்டிகளை எடிட் செய்ய வேண்டும். இது பேட்டி எடுப்பவருக்கும் அதை வெளியிடுபவருக்கும் இருக்கவேண்டிய அடிப்படை புரிதல் மற்றும் அறம். அதனாலேயே பெரும்பான்மை பேட்டிகளில் ஆபாச கருத்துகள், அருவருக்கத்தக்க பொய்கள் முதலானவற்றை எக்காரணம் கொண்டு வெளியிடமாட்டோம். இன்றுவரை அச்சு மற்றும் தொலைகாட்சி ஊடகங்களில் இதை கடுமையாக கடைபிடிக்கிறார்கள். ஏனெனில் பேட்டியில் பேசுபவருக்கு மட்டுமல்ல வெளியிடுபவருக்கும் அதில் பொறுப்பு உண்டு. இதற்கு உதாரணமாக குணசேகரன், கார்த்திகைசெல்வன் தொடங்கி எத்தனையோ காட்சி ஊடக பேட்டிகளை பார்த்திருக்கிறோம்.

சரி ஒரு பேட்டியை எடுக்கும்போதும் வெளியிடுகையிலும் பேட்டி எடுத்தவர் மற்றும் அதை வெளியிடுகிற ஊடகத்தின் பங்கு என்னவாக இருக்க முடியும். முதலில் பேட்டி எடுக்கிறவர் பேட்டி எடுக்கும்போதே சொல்லப்படுகிற கருத்தின் உண்மைத்தன்மையை ஆராய்வது முக்கியம். அதை பேட்டியின் போதே சரியான கேள்விகளின் மூலம் தெளிவுபடுத்தக்கோரவேண்டும். அல்லது அதற்கான ஆதாரங்களை அப்போதே கோரவேண்டும். ஒருவேளை அதற்கான ஆதாரங்களை தரும் பட்சத்தில் பேட்டியை வெளியிடலாம். அனுமானங்களின் அடிப்படையில் சொல்லப்படும் எந்த கருத்துகளையும் வெளியிடுவதுதான் எப்போதும் ஆபத்தானது. ஏனெனில் இப்பேட்டிகளின் மூலம் மக்களுக்கு தெளிவினை ஏற்படுத்துவதான் நம் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர அது மேலும் மக்களை குழப்புவதாகவோ அல்லது தவறான செய்திகளை பரப்புவதற்கு உடந்தையாக இருப்பதோ கூடாது.

இப்போது ஃபெலிக்ஸ் இந்த விஷயங்களில் என்ன மாதிரியான நடைமுறையை சவுக்குடனான உரையாடலில் கடைபிடித்தார் என்பதை பார்க்கவேண்டும். ஏன் இதை உரையாடல் என்கிறேன் என்றால் ஃபெலிக்ஸ் எடுத்தது பேட்டியே இல்லை. அது உரையாடல் வகைதான். விகடனில் வருகிற இம்பர்ஃபெக்ட் ஷோ மாதிரியான இருவர் பேசும் உரையாடல் நிகழ்ச்சி. அதில் சிபி சரண் பேசுவார்கள். இதில் இவர்கள் இருவரும். இருவருமே முன்பே பேசிவைத்து திட்டமிட்டு கருத்துகளை சுவைபட பரிமாறிக்கொள்கிறார்கள்.

ஆனால் பேட்டி என்பது கேள்வி கேட்டு அதற்கான பதில்களை பெறுவது மட்டுமில்லை, பெற்ற பதிலின் உண்மைத்தன்மையை நிரூபிக்கக் கோருவது, அல்லது அதை மறுத்து கேள்விகளை முன்வைப்பது என நீளக்கூடியது என சொன்னேன். இங்கே ஃபெலிக்ஸின் உரையாடல்களில் அது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது மேடை நாடகத்தில் வருகிற வசனம் போல முன்தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். அவர் சவுக்குவிடம் வேண்டுமென்றே ஒரு விஷயத்தை பேச ஆரம்பிப்பார். சவுக்கு ஆதாரங்களில் இல்லாத குற்றச்சாட்டுகளை வரிசையாக அடுக்கிக்கொண்டே போவார். கபகபவென சிரிப்பார். ஃபெலிக்ஸும் உடன் சேர்ந்து சிரிப்பார். எதை சொன்னாலும் ஆமாம் என்று தலையாட்டுவார். கரெக்ட் என்று அதை ஒப்புக்கொள்வார். நடுநடுவே சில பெயர்களை சொல்லி அல்லது சம்பவங்களை சொல்லி எடுத்துக்கொடுப்பார். இங்கே இருவரது நோக்கமும் இங்கே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும். ஒரு ஆதாரமற்ற செய்தியை வெளிப்படுத்துவதே இருவரது நோக்கமாக இருக்கும்.

ஒரு மாணவி தற்கொலை விஷயத்தில் அவதூறான கருத்துகளை சவுக்கு சொல்கிறார். அதை கேட்டு தலையாட்டிக்கொண்டிருக்கிற ஃபெலிக்ஸ் சரிங்க அதுக்கு ஆதாரம் கொடுங்க என்று கேட்கவேயில்லை. எதை வைத்து இப்படி ஒரு அபாண்டமான கருத்தை சொல்கிறீர்கள் என்று முறையிடவில்லை. நீங்க சொன்னாலே கரெக்டாதான் இருக்கும் என அதை ஏற்றுக்கொள்கிறார். இந்தப்பேட்டிகளில் வருகிற தகவல் எல்லாமே ஒரு தெரிந்த நண்பர்கள் சொன்னார், ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார், ஒரு அரசு ஊழியர் சொன்னார் என எல்லாமே யாரோ சொன்னவைதான். எது உண்மை பொய் என்பதே தெரியாத அளவுக்கு கலந்துகொட்டி அடிக்கப்பட்டிருக்கும். காவல் துறை பெண்கள் பற்றி அவதூறாக பேசும்போது எந்த அடிப்படையில் இக்கருத்துகள் பகிரப்படுகின்றன என்கிற ஆதாரங்களை அவர் கேட்கவேயில்லை. அவரும் சேர்ந்த யெஸ் யெஸ் என்று தலையாட்டிக்கொண்டுதான் இருந்தார்.

சரி சவுக்கு பேசிவிட்டார். நல்ல ஊடகவியலாளர் என்ன செய்திருக்க வேண்டும். ஆதாரமற்ற இந்த கருத்துகளை வெட்டியெறிந்துவிட்டு அல்லவா பேட்டியை வெளியிட்டிருக்க வேண்டும். பேசியவருக்குத்தான் புத்தி இல்லை பொறுப்புணர்வு இல்லையென்றால் உங்களுக்கு இல்லையா… காவல்துறை பெண்களை பற்றி அவதூறுகளை பரப்புவதற்கான கருவியாகத்தானே செயல்ப்பட்டிருக்கிறார் ஃபெலிக்ஸ். அவருக்கு என்ன பொறுப்பு இருக்கிறது சமூகத்தின் மேல். வைத்திருப்பது ஊடகமாக இருந்தால் அது இருக்கும்… ஊடகத்திற்கென்று இருக்கிற மட்டுறுத்தல் என்பது யூடியூபில் கிடையாது. அங்கே யாருக்கும் பதில் சொல்லத்தேவையில்லை என்கிற கட்டற்ற சுதந்திரத்தை ஃபெலிக்ஸ் மாதிரியானவர்கள் Exploit ­செய்யத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எல்லாமே ‘இஷ்டதுக்கு’ வகை பேட்டிகள்தான். யாரையும் இவ்வகை பேட்டிகளால் ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும். தனிநபர் பிம்பக்கொலைகள் மிக சகஜமாகவிட்டன. இது மோசமான ஜர்னலிசம். ஆகையால்தான் எந்த அவதூறையும் ஆதாரங்களின்றி தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருக்க முடிந்திருக்கிறது. கேள்வி கேட்க யாருமே இல்லை.

பதிவு செய்யப்பட்ட ஊடகங்களில் அப்படி செய்யமுடியாது… பல்வேறு அரசின் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன. யூடியூபுக்கு அந்த கண்காணிப்புகள் இல்லை, அவர்களுக்கு இருக்கிற ஒரே பிரச்சனை யூடியூப் காரன் காப்பிரைட்ஸ் அடித்துவிடாமல் இருக்கவேண்டும் என்பது மட்டும்தான். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஃபெலிக்ஸ்-சங்கர் உரையாடல்களில் ஃபெலிக் சவுக்கு பேசியதற்கு மறுப்பு தெரிவித்தோ அல்லது அது தவறான தகவல் என்று தடுத்தோ பார்த்ததே இல்லை. சவுக்கு பேசுகிற ஒரு கருத்துக்கும் ஆதாரம் கேட்டதில்லை. இன்னும் நாலு அவதூறு பேசு எனக்கு வியூஸ் அதிகமாகும் என வியாபாரம்தான் முக்கியம் என பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர பொறுப்பான ஊடகவியலாளராக நடந்துகொண்டதே இல்லை. அப்படி இருக்க அவரை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்துவதே பிழையானது. அது சுதந்திர ஊடகவியலாளர்களை அவமதிக்கிற ஒன்றாகும்.இறுதியாக ஒரு விஷயம்தான் பயில்வான் ரங்கநாதன் கூட ப்ரஸ்தான்… அவரிடமும் ப்ரஸ் கார்டு இருக்கிறது! ஃபெலிக்ஸிடம் இருப்பதும் அதே கார்டுதான் இருக்கிறது. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அவருக்கு சினிமா இவருக்கு அரசியல்.

அதிஷா

error: Content is protected !!