ஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை!

ஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை!

னக்கு ஒரு விஷயம் விளங்கவேயில்லை. அதற்கு என் அறிவுக் குறைவுதான் காரணமா என்றும் தெரியவில்லை. அந்த விஷயம், ஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றியது. புரிந்தவர்கள் விளக்கினால் நன்றியுடையவனாவேன். விவாதங்களில் அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசுபவர்கள் பலரும் தங்களை ‘அரசியல் விமர்சகர்கள்’ என்றுதான் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அ.தி.மு.க.காரர் என்றோ அல்லது அ.தி.மு.க. ஆதரவாளர் என்றோ சொல்லிக் கொள்வதில்லை.

அரசியல் விமர்சகர் என்றால், தவறு செய்யும் எல்லாக் கட்சிகளையும் விமர்சிக்க வேண்டுமல்லவா. அப்படியல்லாமல் அ.தி.மு.க. – பா.ஜ.க. தவிர, மற்ற கட்சிகளை மட்டுமே வமர்சிப்பவர் எப்படி ‘அரசியல் விமர்சகர்’ என்று சொல்லிக் கொள்ள முடியும்? இது நிஜமான அரசியல் விமர்சகர்களை கேலி செய்வதாகாதா? இதை ஊடகங்களும் எப்படி ஏற்றுக் கொள்கின்றன? புரியவில்லை.

அதேபோல், பாரதிய ஜனதாவை ஆதரித்துப் பேசுபவர்களும் தங்களை ‘வலதுசாரிகள்’ என்றுதான் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, தங்களை பா.ஜ. கட்சிக்காரர் என்றோ அல்லது அதன் ஆதரவாளர் என்றோ சொல்லிக் கொள்வதில்லை. அப்படி தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் என்ன தயக்கம்? தயங்குபவர்கள் எதற்காக விவாதங்களுக்கு வரவேண்டும்? இது பார்வையாளர்களை அவமதிப்பதாகாதா? இது அந்தக் கட்சிகளின்மேல் மக்கள் கொண்டுள்ள மரியாதைக்கும் பங்கம் விளைவிப்பதாகாதா?

இதுவும் எனக்குப் புரியவில்லை.

ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பதோ அல்லது அந்தக் கட்சியின் ஆதரவாளராக இருப்பதோ அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. குற்றம் கூறவும் முடியாது. ஒருவர் எந்தக் கட்சியை வேண்டுமானாலும் ஆதரித்தும் பேசலாம்; விமர்சித்தும் பேசலாம். இது நமது அரசியல் சட்டமே நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. ஆனால், எல்லாவற்றிலும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இங்கே, நல்லதை மட்டுமே செய்கிற கட்சிகளும் இல்லை; தவறுகளை மட்டுமே செய்கிற கட்சிகளும் இல்லை. நூறு சதவிகித மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகளும் இல்லை. எனவே, அனைவரும் வெளிப்படையாக வாருங்கள்; வந்து பேசுங்கள். அப்படி வந்து பேசுவதுதான் அந்தக் கட்சிகளின் கண்ணியத்திற்கும் வளர்ச்சிக்கும் நல்லது. அப்போதுதான் பார்வையாளர்களும் ஆர்வத்தோடு பார்ப்பார்கள்.

இளங்கோவன்

Related Posts