June 7, 2023

ஆட்டிசத்தை கண்டறியும் குறுஞ்செயலி கண்டுபிடிப்பு..!

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. குழந்தை பிறந்த பின் – காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை எளிமையாக கண்டுகொள்ள முடியும். ஆனால் ஆட்டிசம் அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாதது.

autism nov 16

1943ல் டாக்டர். லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர் உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையையே அறிமுகப்படுத்துகிறார். அவர் தனது “அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட்(Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது. ஆனால், ஆட்டிசத்திற்கு காரணமாக கானர் கருதியதில் முக்கியமானது, பெற்றோர்களின் அரவணைப்பை குழந்தைப் பருவத்தில் பெறாததினால் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது என்று பெரிதும் நம்பினார். முற்றிலும் தவறான கொள்கை என்று பின்னாளில் தெளிவாக நிறுவப்பட்டு விட்டது என்றாலும் ஆட்டிசம் எனும் குறைபாட்டை முதன் முதலாக வரையரை செய்தவர் என்கிற வகையில் டாக்டர். கானரின் பங்கு மகத்தானது. ஆட்டிசம் என்ற வார்த்தைக்கு யதார்த்ததிலிருந்து விலகி ஓடுவது என்பதுதான் அகராதிப்படியான அர்த்தம்

இந்த ஆட்டிசம் என்ற குறைபாடு சமீபகாலமாக அதிக அளவில் குழந்தைகளிடம் காணப்படுகிறது. இந்த குறைபாட்டுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சரியான பயிற்சிகளை அளித்தால், மற்ற குழந்தைகள் போல மாற்ற முடியும். ஆனால் எந்த குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் பல்வேறு பிரச்சனைகள் நிலவுகின்றன.

இந்நிலையில் குழந்தைகளின் கருவிழி அசைவைக் கொண்டு, அந்த குழந்தை ஆட்டிசத்திற்கு ஆட்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கும் குறுஞ்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செயலியை திறன்பேசி அல்லது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்துவிட வேண்டும். பின்னர் இந்த குறுஞ்செயலியை திறந்து, அதில் தோன்றும் பிரத்யேக புகைப்படங்களை குழந்தைகளை பார்க்கச் செய்ய வேண்டும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, குறுஞ்செயலியில் தோன்றும் புகைப்படங்கள் பல பாகமாக சிதறிக் கிடப்பது போல தோன்றும். ஆட்டிசம் இல்லாத குழந்தைகளுக்கு அப்படி தோன்றாது. இதன் மூலம் குழந்தைகளுக்கு இருக்கக் கூடிய ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப கட்டதிலேயே கண்டறிந்துவிடலாம்.

உலகில் 1000 குழந்தைகளில் இருவர் ஆட்டிசம் குறைபாட்டுடன் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன்னரே, ஆட்டிசம் குறைபாட்டை கண்டறிந்து அதற்கான பயிற்சிகளை கொடுத்தால் மட்டுமே, பின்னாட்களில் சாதாரண குழந்தை போல செயல்பட முடியும்.

இந்த குறுஞ்செயலியானது வெறும் 54 நொடிகளில் குழந்தைகளுக்கு உள்ள ஆட்டிசம் குறைபாட்டை கண்டறியக் கூடியது. இந்த குறுஞ்செயலி மூலம் 2 வயதிலிருந்து 10 வயதுக்குட்பட்ட சுமார் 32 குழந்தைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதில் இந்த கருவி 93.96 சதவீதம் துல்லியான முடிவுகளை அளித்துள்ளது. தற்போது அடிப்படை வடிவமைப்பு நிலையில் உள்ள இந்த குறுஞ்செயலியில் விரைவில் நரம்பியல் நிலைகளை கண்டறியும் தொழில்நுட்பமும் பொறுத்தப்பட உள்ளதாக இதனை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்வமுரளி