சென்னை 2.0 வீதி விழா: நடைப்பயிற்சி, ஓடுதல் & மிதிவண்டி போட்டிகளில் கலந்துக்கத் தயாரா?

சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 வீதி விழா 1ந் தேதி முதல் 26ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடைப்பயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற போட்டிகளில் பங்கு கொள்ள சென்னை வாசிகள் அன்புடன் வரவேற்கப்படுகின்றனர்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் முக்கியமான 10 நோக்கங்களில் நலமிகு சென்னையும் ஒன்றாகும். மக்களின் நலமான வாழ்விற்கு வழிவகுக்கும் பல திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன. மிக முக்கியமாக, மக்களை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நல்ல பழக்கங்களுக்கு ஊக்கப்படுத்துவதும் இதில் முக்கியமான ஒன்றாகும்.
இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டைக் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற ஏதுவாக பல நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்த அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இந்திய அளவில் 75 நகரங்கள் கலந்து கொள்ளும் நடைப்பயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டும் சவாலில் சென்னை மாநகரமும் பங்கேற்கிறது. இதன்மூலம் சென்னை மாநகரத்தை நடைப்பயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி பழக்கங்களுக்கு உகந்த நகரமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கூகுள் பிளேஸ்டோர் மூலம் பதிவிறக்கம்
இந்தப் போட்டிகள் 1ந் தேதி முதல் 26ந் தேதி வரை நடைபெறும். இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் சென்னை மாநகரம் வெற்றி பெற மக்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்
* ஸ்ட்ராவா (Strava) எனும் செயலியை கூகுள் பிளேஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து உங்கள் கைபேசியில் நிறுவவும்,
* ஆல் பார் ஸ்போர்ட் (All for Sport) இணையதளத்தில் உங்களுக்கான சவாலை தெரிவு செய்து பதிவு செய்யவும், மிதிவண்டி பயிற்சிக்கு https://www.allforsport.in/challenges/challenge/99c592c2-5fd5-11ec-9186-d34c1c4dcfa0, நடைப்பயிற்சி மற்றும் ஓடுதல் பயிற்சிக்கு https://www.allforsport.in/challenges/challenge/f20f3ad4-5fd3-11ec-a7db-738b2a27ce13
* ஆல் பார் ஸ்போர்ட் பக்கத்தோடு Strava கணக்கை இணைத்தால், உங்கள் செயல்பாடுகள் தானியங்கி கண்காணிப்புக்கு உட்படும்.
சான்றிதழ், பதக்கம்
இந்தப் போட்டிகளில் முதல் பத்து இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு சான்றிதழும், பதக்கமும் சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கி கவுரவிக்கப்படும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாநகராட்சியின் @chennaicorp என்ற சமூக வலைதள பக்கங்களை பின்தொடரலாம்.
Strava எனும் கைபேசி செயலி மூலம் மக்கள் நடைப்பயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி பயிற்சிகளை பதிவு செய்யவேண்டும். சவாலின் முடிவில் நடைப்பயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதலில் அதிகப்படியான தூரத்தை கடந்து முன்னிலை வகிக்கும் நகரமே வெற்றியடையும். எனவே, சென்னை மாநகரம் இந்திய அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் முன்னிலை வகிக்க பொதுமக்கள் அனைவரும் அதிக அளவில் கலந்து கொள்ளவேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.