மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ.15) பிரிந்தது.

1947 ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்னாள் நாடே சுதந்திரம் கிடைக்கப்போகும் சந்தோசத்தில் கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சில சுதந்திர போராட்ட வீரர்கள் மட்டும் இன்னும் சிறை கம்பிகளுக்கு பின்னால் சிவப்பு வானின் நட்சத்திரங்களை போல சுதந்திரம் யாருக்கானதாய் இருக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். 1947 ஆகஸ்ட் 14 மாலை 6மணிக்கு மதுரை சிறைச்சாலைக்குள் நுழையும் நீதிபதி உங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு போலீசாரால் புனையப்பட்டது, எனவே உங்களை விடுதலை செய்கிறேன் என்று கூறுகிறார். வெளியில் இருந்து தொண்டர்கள் உள்ளே இருந்த தலைவர்களை மதுரை சிறைச்சாலையில் இருந்து திலகர் திடல் வரை அழைத்து செல்கின்றனர்.அந்த வழக்கில் விடுதலை ஆகி வெளியே வந்த தலைவர்களில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவர் தமிழகம் அறிந்த தலைவர்களில் ஒருவரான பி. ராமமூர்த்தி, இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விடுதலை ஆனவர் தற்போது 102 வயதை கடந்து காலமான தகைசால் தமிழர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா.

இடதுசாரி இயக்கத்தில் என்.எஸ் என்று அன்போடு அழைக்கப்படுபவர், கோவில்பட்டி நரசிம்மலு – ராமானுஜம் தம்பதியருக்கு மகனாக ஜூலை 15 1922ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தவர் சங்கரய்யா.இவரது இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்கவேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யா என மாறியது. சிறுவயது தொட்டே சங்ககால இலக்கியங்கள் மற்றும் தமிழ் நூல்கள் மீது ஆர்வமும், பற்றும் கொண்டவர். தமிழுக்கு அரசியல் தளத்தில் இருந்து குரல் கொடுத்தவர்கள் மற்றும் பங்காற்றியவர்களில் இவரும் முக்கியமானவர் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது அங்கு செயல்பட்டு வந்த பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலராகவும் பதவி வகித்தார். அதன் பொருட்டே ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து வந்து இந்த மன்றத்தில் பேச வைத்தார்.ஆங்கிலேயே அடக்குமுறைக்கு எதிராக போராடி தடுப்புக்காவல் சட்டத்தில் கைதாகியதால் அதே கல்லூரியில் இருந்து இவரின் படிப்பும் அத்தோடு முடிவுக்கும் வந்தது. சிறைபுகுந்து வெளியில் வந்த சங்கரய்யா அப்போதிலிருந்தே தன்னை முழுமையாக அரசியல் களத்தில் ஈடுபடுத்தி கொண்டார்.

பின்னர் 1939 ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டம், பின் 1941 ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியும், மொழிவாரி மாநிலமாக பிரித்தபோது தமிழகத்திற்கு குரல் கொடுத்தவர்.

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சோசலிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு பிறகு அதில் இணைந்து செயல்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் 1943 ல் மதுரை மாவட்ட கம்யூனிஸ்ட் செயலாளராக பொறுப்பேற்று, பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்து தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண போராட்டம், ஆலை தொழிலாளர்களின் எண்ணற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். கொள்கை பிடிப்புடன் சாதி மறுப்பு திருமணம் மேடையில் மட்டும் பேசாமல் தன்னுடைய குடும்பத்திலேயே நடத்தினார்.

1997 ல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடும், 1998 ல் மத நல்லிணக்க பேரணியை கோவையில் நடத்தினார். தன்னுடைய வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர் 3 முறை மதுரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கிராமங்களில் ரேசன் கடை அமைப்பது குறித்தும், சுயமரியாதை திருமணம் நிறைய நடப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்.

மொத்த வாழ்நாளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் மாணவராக, கட்சித்தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, விவசாய சங்க மாநில, அகில இந்தியத் தலைவராக பல சேவைகளையாற்றிய , சுதந்திரப் போராட்ட வீரர், ‘உழைக்கும் மக்களின் தோழர்’ எனப் போற்றப்படும் என்.சங்கரய்யா இன்று (15.11.2023) காலமானார். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தகைசால் தமிழர், முதுபெரும் பொதுவுடைமை போராளி சங்கரய்யா மறைவு செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன். சங்கரய்யாவின் வாழ்க்கையும், தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். இந்திய விடுதலைப் போராட்ட வீரராகத் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

error: Content is protected !!