செல்போன் திரையைத் துறக்கும் தலைமுறை – ஜென் இசட் நடத்தும் டிஜிட்டல் புரட்சி!

செல்போன் திரையைத் துறக்கும் தலைமுறை – ஜென் இசட் நடத்தும் டிஜிட்டல் புரட்சி!

நொடிக்கு நொடி மாறும் தொழில்நுட்பத்தின் மடியில் பிறந்து, விரல் நுனியில் உலகத்தையே சுழற்றிப் பழகிய ஜென் இசட் (Gen Z) தலைமுறை, இப்போது ஒரு ‘மெய்நிகர் சிறையில்’ இருப்பதை உணரத் தொடங்கியுள்ளது. 6 மணி நேரத் திரைப்பயன்பாடு, முடிவில்லாத ரீல்ஸ்கள் எனத் தங்களைச் சூழ்ந்திருந்த மாயவலையை அறுத்துக்கொண்டு, இப்போது அவர்கள் “நிஜத்தை” நோக்கி ஓடத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதிர்ச்சியைத் தரும் அழைப்புகள்

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஓர் ஆய்வில், 81% ஜென் Z இளைஞர்கள் திடீர் தொலைபேசி அழைப்புகள் வரும்போது மனஅழுத்தம் அடைவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் பேசுவதை விட ‘டெக்ஸ்ட் மெசேஜ்’ அல்லது ‘வாய்ஸ் நோட்’ அனுப்புவதையே பாதுகாப்பாக உணர்கின்றனர். ‘ஹலோ’ சொல்லாமல் உரையாடலைத் தொடங்குவதைச் சமூக மரியாதைக்குறைவாக இவர்கள் பார்ப்பதில்லை; மாறாக, அதை ஒரு நேரடி அணுகுமுறையாகக் கருதுகிறார்கள்.

முரண்பாடுகளின் உலகம்

ஒருபுறம், மற்ற தலைமுறைகளை விட அதிகமாகத் (தினசரி 6 மணி நேரத்திற்கும் மேல்) திரை முன் நேரத்தைச் செலவிடுகிறார்கள். பொழுதுபோக்கு, கேமிங், ஷாப்பிங் முதல் கல்வி வரை அனைத்தும் போனுக்குள்ளேயே அடங்கிவிட்டன. ஆனால், இந்த அதீதப் பயன்பாடு தரும் எதிர்மறை விளைவுகளை இவர்களே முதலில் கண்டறிந்துள்ளனர்.

ஏன் இந்த விலகல்? (The Psychology of Scroll)

ரீல்ஸ்களையும் வீடியோக்களையும் முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்வது ஒருவித மன அழுத்தத்தையும், ஆழ்மனதில் ஒரு திருப்தியின்மையையும் விதைக்கிறது.

“ஆன்லைனில் மற்றவர்களின் பகட்டான வாழ்க்கையோடு தங்களை ஒப்பிடுவது, இளம் மனங்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது.”

இதனை உணர்ந்ததால்தான், குறைந்த அளவு செல்போன் பயன்பாடு மனநிலை மேம்பாட்டை (Mental Well-being) அதிகரிக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

இந்தியாவில் பரவும் ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ கலாச்சாரம்

டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் உள்ள இளம் தொழில் வல்லுநர்கள் மத்தியில் ‘அமைதி’ ஒரு புதிய ஆடம்பரமாக மாறி வருகிறது.

  • நோ ஃபோன் ஏரியா (No-Phone Zones): குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும்போது போனைத் தொடாமல் இருப்பது இப்போது டிரெண்டாகி வருகிறது.

  • சைலன்ட் கஃபேக்கள் (Silent Cafes): இரைச்சலான இசை இல்லை, செல்போன் அழைப்புகள் இல்லை. அமைதியாக அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசிக்கவோ அல்லது தங்களுக்குள் உரையாடவோ மட்டுமே இந்த இடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • டிஜிட்டல் லாக்கர்கள்: பல உணவகங்களில் வாடிக்கையாளர்களின் போனைப் பத்திரப்படுத்த லாக்கர்கள் அல்லது பைகள் வழங்கப்படுகின்றன. இது போன் குறுக்கீடு இல்லாத ‘உண்மையான’ சமூகக் கூடல்களை உறுதி செய்கிறது.

புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை (Talker Research)

சமீபத்திய தரவுகளின்படி, 50%-க்கும் அதிகமான Gen Z இளைஞர்கள் தினமும் திரையற்ற நேரத்தை (Screen-free time) கட்டாயமாக ஒதுக்குகின்றனர். இது 33% ஜென் எக்ஸ் மற்றும் 22% பேபி பூமர்ஸை விட மிக அதிகம்.

தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களும் அவர்களே, அதன் பாதிப்பிலிருந்து தங்களை மீட்டெடுப்பவர்களும் அவர்களே. இன்றைய இளைஞர்கள் ‘டிஜிட்டல் அடிமைத்தனத்தை’ விட ‘டிஜிட்டல் ஆரோக்கியத்திற்கே’ முன்னுரிமை அளிக்கிறார்கள். “டிஸ்கனெக்ட் (Disconnect) செய்வதன் மூலமே நாம் மீண்டும் மனிதர்களாக கனெக்ட் (Connect) ஆக முடியும்” என்ற உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்கிறது இந்த ஜென் இசட் தலைமுறை.

தமிழ்செல்வி

Related Posts

error: Content is protected !!