இந்திந்த நல்ல விஷயங்கள்தான் சனாதனம்!?

‘சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம்’ என்று பிரதமரே பொங்கியெழுகிற அளவுக்கு சனாதனம் பேசு பொருளாகி விட்டது. வாக்கு அரசியலாகவும் மாற்ற நினக்கிறார்கள். இப்படி, சனாதனத்தை ஆதரிக்கும் யாரும் சனாதனம் என்றால் என்னவென்று தேங்காய் உடைத்ததுபோல் விளக்கியதாகத் தெரியவில்லை. ‘இந்திந்த நல்ல விஷயங்கள்தான் சனாதனம். அத்தனையும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கானது…’ என்று விஷயங்களைப் பிட்டுப்பிட்டு வைத்தால், எதிர்ப்பவர்களெல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிய மாட்டார்களா? ஏன் செய்யவில்லை? அதிலென்ன இரகசியம் வேண்டிக் கிடக்கிறது?
சனாதனம் என்பது ஆதி அந்தம் இல்லாதது என்றெல்லாம் கம்பி கட்டுவதில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. அறிவியல்படி எல்லாவற்றுக்கும் ஆதியுமுண்டு; அந்தமும் உண்டு. எத்தனையோ கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனிலுள்ள எரிபொருள்களும் தீர்ந்துபோய் விடும் என்கிறார்கள். அப்போது, சூரிய மண்டலத்தில் உள்ள பூமி உள்பட மற்ற கோள்களின் கதி என்ன?
சனாதனம் என்பது வாழ்வியல் முறை என்றால் யாருடைய வாழ்வியல் முறை? ஒரு கூட்டத்தின் வாழ்வியல் முறை இன்னொரு கூட்டத்துக்குப் பொருந்துமா? சாதாரண மக்களுக்கு பால் கொடுக்கும் பசு மட்டுமே தெய்வம். ஆனால் உழவனுக்கோ காளை மாடுகளும் தெய்வம். உழவுத் தொழில் செய்பவன்தான் தனது தொழிலுக்காகக் காளை மாடுகளை வளர்ப்பான். உழவுத் தொழில் செய்யாதவர்கள் எதற்காகக் காளை மாடுகளை வளர்க்க வேண்டும்? வளர்க்கச் சொல்வது அறிவீனமில்லையா?
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னோரு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’
என்று ஆதிமுதலே வாழ்க்கையை இயற்கையோடு இயைந்தும் பகுத்துணரும் அறிவோடும் வாழ்ந்து வருபவர்களிடம் வந்து கம்பி கட்டும் வேலையெல்லாம் இனி எதற்கு?
செ. இளங்கோவன்