ஒரே பாலினத் திருமண விவகாரம் : சுப்ரீம் கோர்ட் காட்டம்!
ஒரே பாலினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கலாமா, வேண் டாமா? என்ற விவகாரத்தை, நாடாளு மன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண் டும்; இந்தப் பிரச்சனையை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில் தன்பாலினத்தவர் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசை சரமாரியாக கடிந்து கொண்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) வெகு சில நிமிடங்களே நடந்தாலும் கூட அனல் பறக்கும் விவாதங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்றன. அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “இது நீதிமன்றம். இங்கே நாங்கள் தான் பொறுப்பாளர்கள். வழக்கை எப்படி நடத்தவேண்டும் என்பதெல்லாம் நீங்கள் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகக் கூறினர்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: “நாட்டின் 5 கற்றறிந்த அறிவுஜீவிகள் சொல்வதைக் கேட்டெல்லாம் ஒட்டுமொத்த தேசத்திற்கான முடிவையும் எடுக்க முடியாது. இவர்கள் கோரிக்கையை வைத்துக் கொண்டு திருமணம் எனும் அமைப்பிற்குள் ஒரு புதிய சட்டபூர்வ சமூகக் குழுவை உருவாக்கிட முடியாது. அதனால், நீதிபதிகள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்திடமே விட்டுவிடுவது நல்லது. நாடாளுமன்றம் முடிவெடுக்கும். தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரும் தனிநபர்கள் இதை நாடாளுமன்றம் பரிசீலிக்கும் முன்னரே ஏன் நீதிமன்றத்தை நாடினர் என்பதை இந்த நீதிமன்றம் முதலாவதாக விசாரிக்க வேண்டும்.”
தலைமை நீதிபதி சந்திரசூட்: “மன்னிக்கவும் மிஸ்டர் சாலிசிட்டர் ஜெனரல். இங்கு நாங்கள்தான் பொறுப்பில் இருக்கிறோம். வழக்கு விசாரணைகளை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை.”
துஷார் மேத்தா: “இந்த வழக்கில் இனியும் பங்கேற்பதில் அரசுக்கு தயக்கம் இருக்கிறது.”
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்: “அப்படியென்றால் இனி இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு ஆஜராகாது என்கிறீர்களா? வழக்கில் அரசாங்கம் பங்கேற்காது என்று சொல்வதெல்லாம் சரியில்லை. இது எங்கள் முன்னால் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை.”
துஷார் மேத்தா: “இந்த விஷயத்தை வெறும் ஐந்து அறிவுஜீவிகளின் கருத்தைவைத்து மட்டும் முடிவு செய்யக்கூடாது என்பதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தன்பாலினத்தவர் திருமணம் பற்றி நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு விவசாயி என்ன நினைக்கிறார்? வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் என்ன கருதுகிறார் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. சொல்லப்போனால், தன்பாலினத்தவர் திருமணங்கள் விவகாரத்தில் நாம் யாருமே தேசத்தின் கருத்து என்பதை அறியவில்லை என்றே தான் கூறுவேன். அதை விவாதிக்க நாடாளுமன்றமே சிறந்த தளம். இதை நான் இங்கு இன்று சொல்லாவிட்டால் தலைமுறைகள் கடந்தும் இதனை ஏன் நீதிமன்ற கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை என்ற கேள்வி எழும்.”
மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் கே.வி.விஸ்வநாதன்: (மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள்) “இவ்விவகாரத்தில் நாங்கள் அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 32-ன் அடிப்படையில்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான வாழ்வுரிமை இருக்கிறது, அதுவும் மாண்பும், மரியாதையும் கூடிய வாழ்க்கையை வாழும் சுதந்திரம் இருக்கிறது என்ற அடிப்படை உரிமைகளின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.”
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்: (இன்டர்வீனர்) “தன்பாலினத்தவர் திருமணங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் தனிநபர் சட்டங்கள், தத்தெடுத்தல், சொத்துகளை வாரிசுகளுக்கு அளித்தல் எனப் பல்வேறு விஷயங்களிலும் சிக்கலை ஏற்படுத்தலாம். இதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.”
இவ்வாறாக இன்று நீதிமன்றத்தில் விவாதம் நடந்தது.


