தன் மீதான கத்திகுத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம்- சல்மான் ருஷ்டி தகவல்!

தன் மீதான கத்திகுத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம்- சல்மான் ருஷ்டி தகவல்!

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது வாலிபர் ஒரு கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் அவர் ஒரு கண் பார்வையை இழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக சல்மான் ருஷ்டி கடந்த 20-ந் தேதி நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் தன் மீதான கத்திகுத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம் எழுத போவதாக சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளது இப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..!

இந்தியாவில் பிறந்த சல்மான் ருஷ்டி, 1988-ல் எழுதிய ’சாத்தானின் வசனங்கள்’ நூலுக்காக சர்ச்சை வட்டத்தில் விழுந்தார். இஸ்லாமிய விரோத நூலாக அது அறிவிக்கப்பட்டதை அடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அவருக்கு ’ஃபத்வா’ விடுக்கப்பட்டன. ஈரான் உள்ளிட்ட நாடுகளின் ஆட்சியாளர்கள் சல்மான் ருஷ்டியின் தலைக்கு, விலை விதித்து அறிவிப்பு வெளியிட்டனர்.

அவற்றுக்கு அஞ்சாத சல்மான் ருஷ்டி, பிற்போக்குத்தனம் மற்றும் அடிப்படைவாதங்களுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய நூல்களை எழுதியும், பேசியும் வந்தார். இதனால் அவருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரித்தன. கடந்தாண்டு ஆகஸ்டில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி, மர்ம நபரின் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி, சுமார் ஒன்றரை மாத தீவிர மருத்துவ சிகிச்சை மூலம் மறுபிறவி எடுத்தார். எனினும், ஒரு கண்ணின் பார்வை மற்றும் கை விரல்களின் செயல்பாட்டையும் இழந்திருக்கிறார். உடல்நிலை குணமாகி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கும் சல்மான் ருஷ்டி, தற்போது தனது அடுத்த புத்தகம் குறித்து அறிவித்திருக்கிறார்.

கடந்தாண்டு தன் மீது தொடுக்கப்பட்ட கத்திக்குத்து சம்பவம் குறித்தும், அதன் முன்-பின்னான பல்வேறு அம்சங்களை ஒட்டியும் புதிய நூல் அமைந்திருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். முந்தைய நூல்களைப் போலவே, சல்மான் ருஷ்டியின் புதிய புத்தகமும் சர்ச்சைகளை உருவாக்கும் எனத் தெரிகிறது.

error: Content is protected !!