நாட்டின் முதன்மை கல்லூரிகள் தரவரிசை – மத்திய அரசு அறிவிப்பு!

நாட்டின் முதன்மை கல்லூரிகள் தரவரிசை – மத்திய அரசு அறிவிப்பு!

என்ஐஆர்எஃப் எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் சார்பில் நம் நாட்டிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக்கழகம், கல்லூரிகள், பொறியியல், மேலாண்மை, மருந்தகம், சட்டம், மருத்துவம், கட்டிடக்கலை, பல் மருத்துவம், ஆராய்ச்சி, விவசாயம் மற்றும் புதுமை என 13 வகைகளின் கீழ் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள், உள்ளடக்கிய தன்மை மற்றும் உணர்தல் உள்ளிட்ட அளவுருக்களின் அடிப்படையில் மதீப்பிடு செய்யப்பட்டன. மேலும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகள் இந்த ஆண்டு முதல் முறையாக இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ராஜீவ்காந்தியால் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இயங்கி வந்த அமைப்பை மோடி அரசு மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றிய சூழலில் அதன் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் முதன்மை பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2ம் இடத்தை டெல்லி ஐஐடி-யும், 3ம் இடத்தை மும்பை ஐஐடி-யும் பிடித்துள்ளன. 4-ம் இடத்திற்கு கான்பூர் ஐஐடி-யும், 5ம் இடத்திற்கு ரூர்கீ ஐஐடி-யும், 6ம் இடத்துக்கு காரக்பூர் ஐஐடி-யும் தேர்வாகி உள்ளன. 7-ம் இடத்தை கவுஹாத்தி ஐஐடியும், 8-ம் இடத்தை ஹைதராபாத் ஐஐடி-யும், 9-ம் இடத்தை திருச்சி என்ஐடி-யும், 10-ம் இடத்தை கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன.

பல்கலைழக்கழகங்களின் தரவரிசை:

இதேபோல், பல்கலைக்கழக தர வரிசையில் பெங்களூருவில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சையின்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2-ம் இடத்தை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும், 3-ம் இடத்தை டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகமும், 4-ம் இடத்தை கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும், 5-ம் இடத்தை வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. மணிபாலில் உள்ள மணிபால் அகாடமி ஆஃப் ஹையர் எஜூகேஷன், கோவையில் உள்ள அம்ரிதா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, வேலூரில் உள்ள விஐடி, அலிகரில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவை முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களை பிடித்துள்ளன.

நிர்வாகக் கல்வி நிறுவனங்களின் தரவரிசை:

நிர்வாகக் கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், அகமதாபாத் ஐஐஎம் முதலிடம் பிடித்துள்ளது. 2-ம் இடத்தை பெங்களூரு ஐஐஎம்-மும், 3ம் இடத்தை கோழிக்கோடு ஐஐஎம்-மும் பிடித்துள்ளன. கொல்கத்தா ஐஐஎம், டெல்லி ஐஐடி, லக்னோ ஐஐஎம் ஆகியவை முறையே 4,5,6 இடங்களை பிடித்துள்ளன. மும்பையில் உள்ள என்ஐடிஇ 7-வது இடத்தையும், இந்தூர் ஐஐஎம் 8-வது இடத்தையும், சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட் 9-வது இடத்தையும், மும்பை ஐஐடி 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.

கல்லூரிகளின் தரவரிசை:

கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்து கல்லூரி 2-வது இடத்தையும், சென்னையில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரி (மாநிலக் கல்லூரி) 3-வது இடத்தையும், கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கல்லூரி 4-வது இடத்தையும், கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரி 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. புதுடெல்லியில் உள்ள ஆத்ம ராம் சனாதர் தர்ம கல்லூரி, சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, ஹவுராவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திர், டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி, டெல்லியில் உள்ள கிரோரி மால் கல்லூரி ஆகியவை முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களை பிடித்துள்ளன.

error: Content is protected !!