மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி! – தீர்ப்பு வந்துடுச்சு!
கடந்த 1998-ஆம் ஆண்டு நடந்த சம்பவமான மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சரியாக இருபது ஆண்டுகளுக்ளுக்கு கழித்து இத்தீர்ப்பு வெளியாகி உள்ளதும் தண்டனை விபரம் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற ஹிந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சென்றிருந்தனர். அன்றைய தினம் இரவு, ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் ‘வெளி மான்’ (பிளாக் பக்) என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது, மேற்குறிப்பிட்ட நடிகர்களும் அவருடன் இருந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தங்களின் வாக்குமூலங்களை மேற்கூறிய 5 நடிகர்களும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும், கடந்த மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமது தீர்ப்பை ஏப்ரல் 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதன்படி, இவ்வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் நடிகர் சல்மான் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதேசமயம் யீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே சல்மான் கானுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
அடிசினல் ரிப்போர்ட்:
முன்னதாக, இது தொடர்பான மற்றொரு வழக்கில், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது சுமார் ஒரு வாரகாலம் சிறையில் இருந்த சல்மான் கான் தரப்பில், இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி சல்மான் கானை நீதிமன்றம் விடுவித்தது.
அதேபோல், இந்த வழக்கு விசாரணையின் போது, உரிமம் காலாவதியான துப்பாக்கியை சல்மான் கான் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக ஆயுத சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அது கை விடப் பட்டது



