சபாநாயகன் – விமர்சனம்!

சபாநாயகன் – விமர்சனம்!

டிவி சீரியல்களையும், குடும்ப பெண்களையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அப்படித்தான் தமிழ் சினிமாவும் காதலும். ‘நாங்கள் கையாளும் கதை கசப்போ இனிப்போ, அதில் காதல் தேன் தடவித் தராவிட்டால் எங்களுக்கு தூக்கம் வராது!” என்பதே கோடம்பாக்க சினிமா கோட்பாடு. காவியக் காதல், கமர்ஷியல் காதல், யதார்த்தக் காதல் எனத் தமிழர்களின் மனதில் காலம் கடந்து காதல் கதைகளை வழங்குவதில் இங்குள்ளோர் நாலைஞ்சு டிகிரி வாங்கியவர்கள்..அந்த வகையில் ஒரு நாயகன் தன் பள்ளிப் பருவக் காதல் , கல்லூரிக் காதல், அதை அடுத்து இளமைக் காதல் என அடுத்தடுத்து தனக்கு ஏற்பட்ட காதல: அதற்குள் நடக்கும் சுகமான மற்றும் சோகமான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி இரசிக்க வைக்க முயன்றிருக்கும் படமே சபாநாயகன்..!

ஹீரோ அசோக்செல்வனின் கேரக்டர் நேம் ச.பா.அரவிந்த். அதனால் அவரை சபா என்று கூப்பிடுகிறார்கள்.அவர்தான் நாயகன் என்பதால் சபாநாயகன் என்று டைட்டிலாம்.. ஒருநாள் இரவில் மதுபோதையில் இருப்பதாக கூறி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படுகிறார் அசோக் செல்வன். செல்லும் வழியில் தன்னுடைய தோல்வியடைந்த ‘காதல்கள்’ கதையை போலீசாரிடம் சொல்லும் சூழல் உண்டாகிறது. அதாவது முன்னரே சொன்னது போல் பள்ளியில் ஒரு காதல், கல்லூரியில் டிகிரி முடிக்கும் போது ஒரு காதல், பின்னர் சிங்கப்பூரில் இருக்கும் அம்மா அப்பாவை பார்க்கச் சென்ற போது அங்கு ஒரு குட்டி காதல், மீண்டும் பள்ளிகால க்ரஷ் திரும்ப வாழ்க்கையில் வந்ததால் மீண்டும் அவளுடன் காதல், பிறகு எம்.பி.ஏ படிக்கும் போது மற்றுமொரு காதல் இப்படி பல்வேறு காதல்கள் அடங்கிய அரவிந்த்-தின் ஆட்டோகிராப் டைரியே இந்த சபாநாயகன் படக் கதை.

அசோக் செல்வன் திருமணத்துக்கு பின்னர் வெளியாகும் முதல் படம், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்தால் ரசிகர்களை கவரலாம் என்ற அவரின் நம்பிக்கை இந்த படத்திலும் வெளிப்பட்டுள்ளது. அதனால் தான் பிறருக்கு காதல் இருப்பதை கண்டு தனக்கு ஒரு காதல் இல்லையே என ஏங்கும் பலரின் பிரதிபலிப்பாக ச.பா.அரவிந்த் கேரக்டரில் நடித்துள்ளார். எல்லாம் கூடி வரும் நேரத்தில் நடக்கும் பிரேக் அப்புகள், அதை கடந்து அடுத்த காதலை நோக்கி செல்வது என தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ் என முத்தான 3 ஹீரோயின்கள் ஒவ்வொரு பார்ட் கதையிலும் (பள்ளி/கல்லூரி/ மேற்படிப்பு) தங்களால் முடிந்த அளவுக்கு கேரக்டராகவே மாறியுள்ளார்கள். குறிப்பாக கார்த்திகா முரளிதரன் செகண்ட் இன்னிங்க்ஸில் செமத்தியாக ஸ்கோர் செய்கிறார். மேகா ஆகாஷ் தன் அழகினால் கிறங்கடிக்கிறார். ஆனால் யாருக்குமே கதையில் அழுத்தமான காட்சிகள் இல்லை என்பது மைனஸ். இவர்களை தவிர மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, அக்‌ஷயா ஹரிஹரன், ராம் குமார் ஆகிய கேரக்டர்கள் காட்சிகளை ரசிக்கும்படி கதை நகர உதவியுள்ளார்கள்..

படத்தில் இடம்பெறும் மூன்று காலகட்டங்களுக்கும் மூன்று வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள்.ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர்கள் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.இதனால் காலமாற்றம் காட்சிகளிலும் தெரிகிறது. மியூசிக் டைரக்டர் லியோன் ஜேம்ஸ் வழங்கி இருக்கும் இசையிலும் பின்னணி இசையிலும் கொஞ்சமும் வசீகரமில்லை. காட்சிகளில் இருக்கும் வெறுமையையும், உப்பு சப்பில்லாத காட்சிகளையும் அப்பட்டமாக காட்டிக் கொடுக்கிறது இசை.

புதுமுக இயக்குநர் கார்த்திகேயன் படம் பார்க் வரும் ரசிகர்களை முழுக்க முழுக்க ஹேப்பியான மோடில் வைத்திருக்க வேண்டும் என்ற மெனக்கெடல் கால்வாசி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கமலிடம் ஒர்க் செய்த இவருக்கு மிகப்பெரிய மைனஸ் என்பது நீளம் தான் என்பது தெரியாமல் போனது சோகமே..குறிப்பாக பள்ளி காட்சிகள் தொடர்பான இடங்களில் படத்தொகுப்பாளர் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். மேலும் இந்தா ஒரு காதல் கதை முடிந்துவிட்டது என நினைத்தால் சில நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காதல் வருவது, பெண்கள் சற்று பணம் இருந்தால் தான் பார்ப்பார்கள் என்கிற ரீதியில் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் படம் சொல்லும் வரும் விஷயம் அழுத்தமே இல்லாமல் போகிறது.

மொத்தத்தில் திரைக்கதையிலோ அல்லது காட்சிகளிலோ போதுமான நகைச்சுவையும் வராமல், எமோஷ்னலோ ஒரு ஃபீலிங்கோ எடுபடாமல் படம் இரண்டும் கெட்டான் பாணியில் பயணித்து முட்டு சந்தில் போய் நின்று விடுகிறது.

மார்க் 2.75/5

.

error: Content is protected !!