கவிதைகளின் ஊற்று ரூமி!

கவிதைகளின் ஊற்று ரூமி!

மெரிக்காவில் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் ரூமி. ஆனால் அவர் பிறந்ததோ, இந்த நவீன அமெரிக்கா உருவாவதற்குப் பல வருடங்களுக்கு முன்பு.கி.பி 1207-ம் ஆண்டு இதே செப்டம்பர் 30-ம் தேதி `பால்க்’ என்ற மத்திய ஆசியப் பகுதியில் (தற்போது ஆப்கானிஸ்தான்) ரூமி பிறந்தார். பால்க் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் பெர்சிய கலாசாரமாக விளங்கியதால் என்னவோ, அரேபிய வம்சத்தில் பிறந்தாலும் பெர்சிய மொழியில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார். இவரின் இயற்பெயர் `முஹம்மத்’. ஆனால், அனைவரும் `ஜலாலுதீன்’ என்றே அழைத்தனர். அப்போது மங்கோலியர்களின் ஆக்கிரமிப்பு, கொள்ளை போன்ற தொல்லைகள் அதிகம் இருந்ததால், பால்க் நகர மக்கள் துருக்கியில் உள்ள `ரூம்’ என்ற இடத்துக்குக் குடிப்பெயர்கிறார்கள். தனது 12-வது வயதில் இங்கு வருகிறார் ஜலாலுதீன். பிறகு, இந்த நகரின் பெயரே இவரின் பெயரோடு `ரூமி’ என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிறகு, இந்தப் பெயரே வரலாற்றிலும் நிலைத்து நிற்கிறது.

“நீ கடலின் ஒரு துளியல்ல…ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்”.

“வானில் தெரியும் நிலவைப் பார்…ஏரியில் தென்படும் ஒன்றை அல்ல”.

“நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ… அது உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது” =இது போன்று வாழ்க்கையின் மீது பிடிப்பும், தன் மீது அதீததன்னம்பிக்கையும் ஊட்டக்கூடிய ஆயிரக்கணக்கான கவிதைகளை வடித்தவர் தத்துவ கவி ரூமி. ஆகவேதான் இத்தகைய கவிதைகளை படைத்த அந்த மனிதர் மறைந்து 700 ஆண்டுகள் ஆனதற்கு பிறகு இன்றும் அவர்கள் உலகெங்கிலும் வாழும் கவிதை பிரியர்களால் கொண்டாடப்படுகிறார்.ரூமி என்றாலே தத்துவம் என்று அர்த்தம். ரூமி என்றதும் வயதான தோற்றத்தில் கையில் மயில் இறகுடன் அமர்ந்து எழுதுவதுபோல் இருக்கும் உருவப்படம் நினைவுக்கு வரும். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. 2007-ல் இவர் அமெரிக்க அரசால் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப் பட்டார்.

ரூமியின் படைப்புகள்:

ரூமியின் எழுத்துகள் பாரசீக மொழியில் எழுதப்பட்டவை. ‘மஸ்னவி’ என்பது ஆழமான ஆன்மிகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக் கவிதைகளின் தொகுப்பு புத்தகமாகும். இது பாரசீக மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இவரின் கவிதைகள் பிற்காலத்தில் பாரசீகம், உருது, பஞ்சாபி, துருக்கிய இலக்கியங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தியது. இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல் ‘திவான்-ஈ- ஷம்ஸ்-ஈ தப்ரீஸி’ (Divan-i Shams-i Tabrizi) என்பதாகும்.

பாடப்புத்தகத்தில் ரூமி:

ஜலாலுதீன் ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ். தமிழில் “தாகங்கொண்ட மீனொன்று” என்ற தலைப்பில் என்.சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். இத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ எனும் கவிதை தமிழக அரசு பள்ளி பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளது.

‘மஸ்னவி’ எழுத உதவியவர்:

ரூமியின் சீடராகவும், தோழராகவும் வாழ்ந்தவர் ஹுஸாமுதீன் ஹஸன். தனது தோழர் ஹுஸாமுதீன் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக ‘மஸ்னவி’ புத்தகத்தில் 2 பாடல்களுக்கு ஹுஸாமுதீனின் பெயரை தலைப்பாக சூட்டினார். ‘மஸ்னவி’ நூலுக்காக ரூமி தினமும் பாடல்களைச் சொல்லச் சொல்ல ஹுஸாமுதீன் அவற்றை எழுதினார். மொத்தம் 25,600 பாடல்கள், ஆறு அத்தியாயங்களில் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

ரூமி 68 வயதில் 1273 டிசம்பர் 16-ல் காலமானார்.

ரூமியின் கவிதைகளில் சில

என்னைத் தவிர நீ வேறு
எல்லோருடனும் இருப்பாயானால்
எவரோடும் நீ இருக்க வில்லை !
என்னைத் தவிர நீ வேறு
எல்லோரிடம் இல்லா விட்டால்
ஒவ்வொருவர் உடனும் நீ இருக்கிறாய் !
ஒவ்வொரு வருக்கும் உரிமையாய்
இருப்பதற்குப் பதிலாக
எல்லாரும் போல் இருப்பாய் !
பலரைப் போல் நீ இருந்தால்
நீ எவனு மில்லை !
பூஜியம் !

* அழகு நம்மைச் சுற்றியே உள்ளது, ஆனால் நாம் வழக்கமாக ஒரு பூங்காவில் நடந்தே அழகைத் தெரிந்து கொள்கிறோம்.

* துயரப்பட வேண்டாம். நீங்கள் இழக்கும் எதுவாயினும் மற்றொரு வடிவத்தில் உங்களிடமே திரும்பவும் வரும்.

* நாம் அனைவரும் அன்பாலேயே பிறந்துள்ளோம்; அன்பு நமது தாய்.

* நமக்குள் கண்ணுக்குத் தெரியாத வலிமை ஒன்று உள்ளது.

* நீங்கள் இறகுகளுடனே பிறந்துள்ளீர்கள், ஏன் வாழ்க்கையில் தவழ்ந்து செல்ல விரும்புகிறீர்கள்?

* தொடர்ந்து தட்டிக்கொண்டே இரு… உள்ளிருக்கும் ஆனந்தம்… என்றேனும் சாளரத்தைத் திறந்து எட்டிப் பார்க்கும்…
எவர் வந்திருக்கிறார் என..

* உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல.

* கவிதைகளின் உள்ளிருக்கும் துடிப்புகளை கேள்.. அவை விரும்பும் இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்லட்டும்

* உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளை தொடர்ந்து கொண்டே இரு.. அதன் அருகாமையை நழுவ விடாதே
ஒருபோதும்..

*காதலர்கள் இறுதியில் எங்கேனும் சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக இருந்து வருகிறார்கள்
காலம்காலமாக..

* தாகம் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை, தண்ணீரும் தாகத்தை தேடுகிறது.

* காதலைவிட முக்கியமானது உலகில் எதுவுமில்லை, காதல் காற்றைப் போன்றது..

* நீ எதை தேடிக்கொண்டிருகிறாயோ… அது உன்னை தேடிக் கொண்டிருக்கிறது…

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!