இந்தியாவில் ஆண்டு தோறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது!

இந்தியாவில் ஆண்டு தோறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது!

மனித வாழ்க்கையில் ஓர் அங்கமான பெண் இனத்தை ஓரம் கட்டிய காலம் மலையேறி விட்ட நிலையில் இன்று சகல துறைகளிலும் பெண்கள் வரலாற்று சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தின் மத்தியில் சாதிக்க துடிக்கும் பெண்கள் இன்று உலகையே வலம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 39 ஆகும் , இது 2007 ஆம் ஆண்டு 21 ஆக இருந்தது. நம் நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாக்க வேண்டிய பிரதிநிதிகளே பெண்களை சூறையாடி வருவது நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஜம்முவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டு இருக்கும் சம்பவமும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயதுப் பெண்ணின் கற்பை அரசியல் வாதியே சூறையாடி இருக்கும் சம்பவமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் காயங்கள் ஆறுவதற்கு முன்பே சூரத்தில் 9 வயது சிறுமி உடலில் 89 காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்தக் கொலைகளைப் பார்க்கும்போது, அனைவரும் சிறுமிகள்தான். ஆபாசம் வெளிப்படாத பிஞ்சுக் குழந்தைகள். சிறுமிகளிடமும் காமுகத்தைப் பார்க்கும் காட்டுமிராண்டிகள் இருக்கும் உலகில் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளனர். இதற்கு விடிவு எப்போது கிடைக்கும். தாமதமாக கிடக்கும் நீதியால் எந்தப் பலனும் இல்லை. உடனடி நீதியும், கடுமையான தண்டனையும் தான் இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும்.

ஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் பதின் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்குட்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இன்னொரு புறம் அருப்புக்கோட்டை நிகழ்வைப் போல பெண்களை விற்பனைப் பொருளாக மாற்ற முயலும் சமபவங்களும் நடைபெறுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது தொடங்கி 77 வயது வரை யிலான பெண்கள் வன்கொடுமைக்குள்ளாகின்றனர் என்கிறது ஐ.நா. புள்ளிவிபரம். இது அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் கெட்டு விட்ட தனிமனித ஒழுக்கம் தான் அவன் தனித்து இருக்கும் போது அவனை கெடுக்கும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணைய தளங் களும் பெருகிவிட்டன. இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றாவிட்டால் நாடு  போகும் நிலையை எண்ணிப்பார்க்க முடியாது. சட்டங்களை திருத்த நாம் குரல் கொடுக்க வேண்டும்.

இத்தகைய குற்றங்களுக்கு தனிமனித ஒழுக்கம் முக்கிய காரணமாக இருந்தாலும் தண்டனை களுக்கு நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் ஒரு முக்கிய காரணமாகும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 2,78, 886 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதில் தண்டனை பெற்றவர்கள் 30 சதவீதத்திற்கும் குறைவு 70 சதவீதம் தண்டனை பெறவில்லை என்பது உண்மை. 2007- 26.4 சதவீதம், 2008- 26.6 சதவீதம், 2009- 26.9 சதவீதம், 2010- 26.6 சதவீதம், 2011-26.4 சதவீதம், 2012- 24.2 சதவீதம்,2013- 27.1 சதவீதம், 2014- 28 சதவீதம், 2015- 29.4 சதவீதம், 2016- 25.5 சதவீதம் வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

அதிலும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2015 ஆண்டை விட 2016 ல் 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பெரும்பாலான வழக்குகள் ‘கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை செய்யப்படுவது ஆகும். ( 32. 6 சதவீதம்) பெண்களின் மீது தாக்குதல் நடத்தி அவளுடைய மன வலிமையை சீர்குலைத்தல் (25.0 சதவீதமாகும்)பெண்கள் கடத்தல் (19.0 சதவீதம் ) மற்றும் ‘கற்பழிப்பு’ (11.5 சதவீதம்).

நாட்டில் 30 சதவீத அரசியல் வாதிகள் குற்றபின்னணியில் உள்ளவர்கள்.

பாலியல் பலாத்கார வழக்கு 2015 ஆம் ஆண்டில் 34,651 வழக்குகள், 2016 ல் 38,947 என 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் அதிக அளவு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது . 4,882 வழக்குகள் (12.5 சதவீதம் ), 4,816 (12.4சதவீதம்), மகாராஷ்டிரா 4,189 (10.7சதவீதம்) நாட்டின் 6 மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பில் சென்னை முதலி டத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவு. 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544 ஆக பதிவாகி உள்ளது. சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 15 பேர் தான் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடம் பெற்று உள்ளது. 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 1 லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பாதுகாப்பான நகரம் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதே போன்று கொல்கத்தா 3-வது இடத்திலும் பெங்களூரு 5-வது இடத்திலும் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நகராமாக டெல்லி உள்ளதாக குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 39 ஆகும். இது 2007 ஆம் ஆண்டு 21 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts