மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நியமனம்!

கடந்த சில மாதங்களாக தொடரும் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நெக்டர் சன்ஜென்பாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மியான்மருக்குள் சென்று நாகா தீவிரவாதிகளை அழிக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி சமுதாயத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி மற்றும் நாகா சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த மே 3-ம் தேதி மணிப்பூரில் மைத்தேயி, குகி சமுதாயத்தினருக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக நீடிக்கும் கலவரத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். ஏராளமான மைத்தேயி இன மக்கள் அசாம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் சென்றனர்.
மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில காவல் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்து புதிய காவல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனாலும் இதுவரை கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சூழலில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கர்னல் நெக்டர் சன்ஜென்பாம் மணிப்பூர் காவல் துறையில் சிறப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.