சனாதனம் என்றால் என்ன? ஒரு வாழ்வியல் உதாரணம்!

சனாதனம் என்றால் என்ன? ஒரு வாழ்வியல் உதாரணம்!

1990களில் அயன்புரத்தில் இருந்தபோது ஒரு ஹோமியோபதி மருத்துவர் நெருக்கமான பழக்கம். அவர் அரசு மருத்துவர். மாலை நேரங்களில் தனது வீட்டில் ஒரு அறையில் சிகிச்சை அளித்து வந்தார். எளிமையானவர். மசாலாக்கள் இல்லாத ஹோமியோ மருத்துவர். மிகவும் குறைந்த கட்டனமே பெற்றுக்கொள்வார். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தீவிரமான சிவ பக்தர். பூசை வழிபாடு நடத்திவிட்டுத்தான் கிளினிக் திறப்பார். ஒவ்வொரு முறை மருந்து தேர்வு செய்வதற்கு முன்பும் கடவுளை வணங்கிவிட்டுத்தான் தேர்வு செய்வார். சிவ – சிவா, முருகா என்ற சொல் அவரிடமிருந்து கேட்டுக்கொண்டே இருக்கும். மருந்தை நம்மிடம் கொடுக்கும் போதும் மேலே இருப்பவனைப் பார்த்து வணங்கிவிட்டுத்தான் கொடுப்பார். அவர் கருத்துகள்கூட பெரும்பாலும் பழமையானவை.

ஆனால் அவருக்குள் ஒரு கோபம் இருந்தது. அது பார்ப்பனியத்துக்கு எதிரான கோபம். ஒருநாள் தற்செயலாக பெரிய சங்கராச்சாரி குறித்து பேச்சு வந்த போதுதான் அதைக் கவனித்தேன். கொதித்தெழுந்து விட்டார். கண்கள் சிவந்து விட்டது. உதடுகள் துடிக்க கொட்டித் தீர்த்தார். ’மனிதனைப் புழுவாகப் பார்க்கிறான் சார். கடவுளின் முன் எல்லாரும் சமம் என்றால் இவன் யார் சார் நம்மைப் பாகுபடுத்த? அப்படி எந்த இந்து சட்டத்தில்சார் சொல்லி இருக்கிறது? என்று கேள்விகளாக அடுக்கினார்.

காரணம் அவர் சூத்திரர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல சவால்களுடன் மருத்துவம் பயின்று சமூகத்திலும் மதிக்கத்தக்க மருத்துவராக இருந்தாலும் பார்ப்பணியத்தால் சொந்த மதத்தில் சுயமரியாதை இழந்து வாழ வேண்டியிருக்கிறது என்பது அவரது ஆதங்கம். `பெரும்பாலான சிவனடியார்கள் சூத்திரர்கள், சித்தர்கள் சூத்திரர்கள், நாயன்மார்கள் (ஆழ்வர்களில்) பெரும்பாலானோரும் சூத்திரர்கள்தானே; இந்துமதம் நமது மதம். இந்து கடவுள்கள் கோயில் நமது கோயில். நம்மை கோயிலுக்குள் வரக்கூடாது என்றோ கருவரைக்குள் வரக்கூடாது என்றோ உத்தரவிட இவன்கள் யார்?’ என்பதுதான் இவரது நியாயம்.

இதன்பின் இன்னும் நெருக்கமானார். தொடர்ந்து அவருடன் நடந்த உரையாடல்களில் பார்ப்பனியத்தால் அவர் எவ்வளவு இழிவுபடுத்தப்பட்டுள்ளார் என்பதை உணர முடிந்தது. இது சனாதனத்தால் ஏற்பட்ட இழிவு என்பதால்தான் அவருக்கு இவ்வளவு கோபம். சனாதனம் தனது நால்வர்ண பாகுபாட்டால் தனது சொந்த மத்ததைச் சேர்ந்தவர்களின் சுயமரியாதையை இழிவு செய்வதால் வரும் கோபம்.

சனாதன தர்மத்துக்கும் இறை உணர்வுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. சனாதனம் ஆன்மிகத்தின் அங்கம் இல்லை. இந்து மதத்தில் சனாதனம் ஒரு நோய் பரப்பும் கிருமி. மலேரியா, டெங்குபோல கடுமையான நோய்களை சமூகத்துக்குள் பரப்புகிறது. இந்த நோய் பரவாமல் தடுத்து இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் சனாதனக் கொசுவை ஒழித்துதான் ஆக வேண்டும். இந்து மதம் காப்பாற்றப்பட வேண்டுமானால் சனாதனம் ஒழிக்கப்படத்தான் வேண்டும்.

குறிப்பு: சில மாதங்களாகவே என்னால் அதிகம் முகநூல் வரமுடியவில்லை. கடுமையான Cervical vertigo. அரைமணி நேரம் தொடர்ந்து எழுதவோ வாசிக்கவோ கம்யூட்டரில் பணியாற்றவோ முடியவில்லை. ஆனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. சனாதானம் ஊழிக்கூத்தாடுகிறது. 2024ல் இந்துத்வா பாசிசத்தை ஓட்டியாக வேண்டும். எழுத எவ்வளவோ இருக்கிறது. அவ்வப்போது முடிந்த அளவு பகிர்கிறேன்.

#சனாதனம்ஒழிப்போம்

அப்பணசாமி

Related Posts

error: Content is protected !!