ரெமோ – ரிலீஸ் தசரா லீவில் கன்ஃபார்ம்!
சீயான் விக்ரம் பட ‘இருமுகன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திக்கேயனின் ‘ரெமோ’ கேரக்டரை புகழ்ந்து தள்ளிவிட்டார் விக்ரம். ‘இருமுருகன்’ படத்தில் தான் ஒரு காட்சியில் மட்டுமே நர்சாக நடித்து இருக்கிறேன். இது ஊறுகாய் மாதிரிதான். ஆனால் ‘ரெமோ’ படத்தில் சிவா பிரியாணியே செய்திருப்பார் என்று நம்புகிறேன் எனக் கூறி விட்டு ‘ரெமோ’ என்ற தலைப்பு சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமாக இருக்கும்” எனவும் விக்ரம் கூறியிருந்தார்.

இதனிடையே தமிழக ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வரும் திரைப்படம் ‘ரெமோ’. முற்றிலும் புதுமையான கதை களம், மிகச்சிறந்த மார்க்கெட்டிங் யுக்தி என பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த செய்தியை ரெமோ படக்குழுவினர், தங்களுக்கே உரிய பிரமாண்ட விதத்தில் அறிவித்தனர்.
“சொன்ன தேதியில் படப்பிடிப்பை முடிப்பது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் ஒரு மிக பெரிய சவாலாக தான் இருக்கும். அந்த வகையில் நாங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் எங்கள் படப்பிடிப்பை முடித்து இருக்கிறோம். ஒரு தயாரிப்பாளராக இதை விட மகிழ்ச்சி வேறெதுவும் இருக்காது. மிக விரைவில் எங்களின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் நிறைவேற உள்ளது. தசரா விடுமுறை நாட்களான அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் எங்களின் ‘ரெமோ’ படமானது நிச்சயமாக ரசிகர்களின் அன்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.


