‘கனவு நாயகன்’ கலாமின் கடைசிப் பயணம்: கம்ப்ளீட் ரிப்போர்ட் + போட்டோ + வீடியோ

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றியபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இன்று காலை கலாமின் உடல் பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அது முடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அப்துல்கலாம் அவர்களின் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. மக்கள் வெள்ளத்தில் கலாம் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள், பாரத மாதாவிற்கு ஜெ! என்ற கோஷத்துடன் ராணுவ வாகனத்துடன் சென்றனர். பள்ளிவாசலில் இருந்து ராமேசுவரம் நகர வீதிகள் வழியாக 4 கிலோ மீட்டர் தொலைவில் தங்கச்சிமடம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தை இறுதி ஊர்வலம் சென்று அடைந்தது.
இன்று காலை கலாம் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து சேர்ந்தார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்திற்கு சென்றார், பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் வந்து கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து நீண்ட நேரம் அஞ்சலி செலுத்தினார். உடல் அடக்கம் நடந்த இடத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அப்துல்கலாமின் அண்ணன் 99 வயதான முகம்மது மீரா மரைக்காயர் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்து இருந்தார்.பிரதமர் மோடி கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு நேராக சென்று முகம்மது மீரா காலில் விழுந்து வணங்கினார். பின்னர் சிறிது நேரம் அவர்கள் அருகில் இருந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.பின்னர் தலைவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் சென்று அமர்ந்து இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டார்.
மோடியை தொடர்ந்து தமிழக கவர்னர் ரோசையா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, சுந்தர்ராஜ், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், கேரள கவர்னர் சதாசிவம், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, வைகோ, பொன்.ராதாகிஷ்ணன், விஜய்காந்த், அன்புமணி ராமதாஸ், மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலாம் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவர்களுடன் லட்சக்கணக்கான பொது மக்களும், இளைஞர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனை அடுத்து கலாமின் தனிச்செயலாளர் பொன்ராஜ் உட்பட அவருடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் ஆகியோர் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் முப்படையை சேர்ந்த வீரர்கள் கலாம் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை முறைப்படி நீக்கினார்கள். பிறகு அவரது உடல் அப்துல் கலாமின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இஸ்லாமிய முறைப்படி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்களும் எழுந்து நின்றனர். பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் நடைபெற்றன. இறுதியாக கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.