ராணுவத்தில் மதமா? ஒழுக்கமே முக்கியம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முக்கியத்துவம்!

ராணுவத்தில் மதமா? ஒழுக்கமே முக்கியம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முக்கியத்துவம்!

ந்திய ராணுவத்தில் தனிநபர் மத நம்பிக்கைகளுக்கும், குழு ஒழுக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்கும் (Unit Cohesion) இடையிலான எல்லைக்கோட்டை வரையறுக்கும் மிக முக்கியமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. லெப்டினென்ட் சாமுவேல் கமலேசன் விவகாரத்தில், தனிப்பட்ட மத உணர்வுகளுக்கு முன்னுரிமை அளித்து ராணுவ நடைமுறைகளை மறுத்த ஒரு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்திருப்பது, தேசப் பாதுகாப்பில் ஒழுக்கத்தின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.

விவகாரத்தின் அடிப்படை 

2017ஆம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்த லெப்டினென்ட் சாமுவேல் கமலேசன், தனது கிறிஸ்தவ மத நம்பிக்கையின் முதல் கட்டளையான “வேறொரு தெய்வத்தை வணங்கக் கூடாது” என்ற காரணத்தைக் காட்டி, தனது படைப்பிரிவில் உள்ள கோயில் மற்றும் குருத்வாராவில் நடைபெறும் கூட்டு மத நிகழ்வுகள் மற்றும் பிரார்த்தனைகளில் பங்கேற்க மறுத்தார். அதிகாரிகள் பலமுறை அறிவுரை வழங்கியும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததையடுத்து, 2021ஆம் ஆண்டில் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்தபோது, இந்தக் கண்ணியமற்ற செயல் ராணுவ விதிகளின் அடிப்படைக்கே எதிரானது என்று கடுமையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் அமர்வின் கூர்மையான அவதானிப்புகள் 

தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, இந்தச் செயலை வெறுமனே கீழ்ப்படியாமை (Insubordination) என்று பார்க்காமல், ராணுவத்தின் அடிப்படைத் தத்துவத்தின் மீதான தாக்குதலாகவே பார்த்தது:

  • மிகப்பெரிய ஒழுங்கீனம்: “இந்த அதிகாரி அனுப்ப விரும்பும் செய்தி என்ன? இது ராணுவ அதிகாரியால் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒழுங்கீனமாகும் (Gross Indiscipline). இதற்காகவே அவர் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் காட்டமாகத் தெரிவித்தார்.

  • மத ஈகோ: “இந்த ரெஜிமென்ட் ஒரு குருத்வாராவையும் பராமரிக்கிறது. குருத்வாரா என்பது மிகவும் மதச்சார்பற்ற இடங்களில் ஒன்றாகும். இவர் நடந்துகொள்ளும் விதம், மற்ற மதங்களை அவமதிப்பதாக இல்லையா? மதம் சார்ந்த அத்தகைய உயர்ந்த ஈகோ ஏன்? சக வீரர்களைப் பற்றி அவர் ஏன் கவலைப்படவில்லை?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  • மதகுருவின் ஆலோசனை புறக்கணிப்பு: மேலும், கோயில் நிகழ்வுகளில் பங்கேற்பது கிறிஸ்தவத்திற்கு எதிரானது அல்ல என்று ஒரு மத போதகரே இவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தும், அதனை ஏற்க மறுத்து அதிகாரி பிடிவாதமாக இருந்ததை நீதிபதி பக்ஷி சுட்டிக்காட்டினார். இதன் மூலம், அதிகாரியின் மறுப்பு தனிப்பட்ட ஈகோ அல்லது விருப்பு வெறுப்பு அடிப்படையிலானது என்றும், அத்தியாவசிய மதக் கொள்கை அல்ல என்றும் தெளிவானது.

தேசமே முதல் மதம் 

ராணுவத்தில் அனுமதிக்கப்படும் சீக்கியர்களின் தலைப்பாகை போன்ற அத்தியாவசியமான அடையாளங்கள், கூட்டு வழிபாடுகளில் பங்கேற்க மறுக்கும் தனிப்பட்ட முடிவிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ராணுவம் என்பது, மத நல்லிணக்கத்தை (Sarva Dharma Sam Bhava) கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் ஒரு அமைப்பு. கூட்டுப் பிரார்த்தனைகளில் பங்கெடுப்பதன் மூலம், எந்த ஒரு வீரரும் சக வீரனின் நம்பிக்கைக்கும் கலாச்சாரத்திற்கும் மதிப்பு கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற அடித்தளம் உறுதியாகிறது.

மொத்தத்தில்  சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு, ராணுவத்தில் ஒற்றுமை, ஒழுக்கம், மற்றும் தேசப்பற்று ஆகியவையே ஒருவரின் தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு மேலாக முதன்மை பெற வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாகக் கூறியுள்ளது. ராணுவ அதிகாரிகள் தங்கள் மதத்தை, சக வீரர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டும் ஒரு சுவராகப் பயன்படுத்த முடியாது. இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் பாதுகாப்பு அரணின் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்கு கிடைத்த முக்கியமான சட்டப்பூர்வ அங்கீகாரமாகும்.

வெங்கடாசலம் பிள்ளை