உபி: சவால்களை சாதகமாக்கியதா பாஜக ஆட்சி? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

உபி: சவால்களை சாதகமாக்கியதா பாஜக ஆட்சி? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

டுத்தாண்டு பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள உத்தர பிரதேசம் இப்போதே பரபரப்புடன் காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் தங்களது பலத்தைக் காட்ட பேரணிகள், சுற்றுப்பயணங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை இப்போதே தொடர்ச்சியாக நடத்தி வருகின்றன. வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா தேர்தல் பரப்புரையைத் துவங்கி வைக்கிறார். ஏற்கனவே கடந்த செப்டெம்பர் மாதமே இணையதளப் பரப்புரையை பாஜக துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேச மாநிலத்தை ஆளுகின்ற கட்சிதான் நாட்டையும் ஆளும் எனும் நம்பிக்கை நீண்ட காலமுள்ளது. ஆனால் காங்கிரஸ் உ.பியை ஆளா விட்டாலும் மத்தியில் கூட்டணி ஆட்சியை நடத்தியது. பாஜகவும் அப்படியே.

எனவே இக்கூற்று தனிப் பெரும்பான்மைக்கு மட்டுமே பொருந்தும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் மோடி பிரதமர் ஆன போது உ.பியில் சமஜ்வாதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆயினும் அடுத்து வந்த மக்களவைத் தேர்தல், பேரவைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் சமஜ்வாதி கடும் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகே உத்தர பிரதேசத் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியொரு சூழலில் ஆட்சியைப் பிடித்த பாஜக அதுவரை மக்களவை உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியது. தேர்தல் சமயத்தில் பாஜக யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.

இன்று நிலைமை முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது. உத்தர பிரதேசம் வறுமை, சமூக மோதல், வேலையின்மை, குற்றங்கள் மிகுதி போன்ற எதிர்மறையான அம்சங்களிலிருந்து கணிசமாக விடுபட்டுள்ளது. ஆங்கிலத்தில் ‘பிமாரு ஸ்டேட்ஸ்’ என்று ஹிந்தி பேசும் மாநிலங்களை குறைந்த வளர்ச்சிக்காகவும், பின் தங்கிய நிலைக்காகவும் குறிப்பிடுவார்கள். அப்பட்டியலில் இருந்து உத்தரப் பிரதேசம் வெளியேறி விட்டதாக அம்மாநிலத்தை கவனித்து வரும் பல அரசியல், பொருளியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த நான்காண்டுகளில் யோகி அரசு எடுத்த பல நல்ல முயற்சிகளால்தான் இம்மாற்றம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கின்றனர். யோகி அரசு 40 ற்கும் மேற்பட்ட வளர்ச்சித் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் மாணவர்களுக்கு மடிக்கணினி, ஸ்மார்ட்ஃபோன், டேப்புகளை வழங்கும் திட்டமும் அடங்கும். இத்திட்டப்படி தொழில்நுட்ப, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் யாரெல்லாம் திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தில் சேர்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட்டும், ஸ்மார்ட்ஃபோனும் இந்த கல்வியாண்டிலிருந்து வழங்கப்படவுள்ளது. அத்துடன் சமூக நலத் திட்டங்களே வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பதையும் உள்ளூர் பாஜக தலைவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

நகர்மய திட்டங்களால் பொது மக்களிடையே ஏகோபித்த ஆதரவைப் பெற்று விட முடியாது. ஏழை மக்கள் நிரம்பிய உத்தரப் பிரதேசத்தில் சமூக நலத்திட்டங்களே அதிகம் தேவை, கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பட்டால்தான் உத்தரப் பிரதேசமும் முன்னேறும். எனவே, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தது போல சமூக நலத் திட்டங்களை முன்னெடுக்க உ.பி முனைந்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. மத்தியிலும் பாஜக அரசு பதவியில் இருப்பதால் மத்திய அரசின் பெரும்பாலான சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் யோகி அரசு மிகச் சரியாக பயனாளிகளை சென்று அடையும்படி நடைமுறைப்படுத்துகிறது.

ஒரு காலத்தில் 100 ரூபாயை மக்களுக்கு அளித்தால் அதில் ரூ 15 மட்டுமே பயனாளிகளுக்குப் போய்ச் சேரும். மோடி நேரடிப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவித்து அதைப் பயனாளிகளுக்கு முழுமையாகப் போய்ச் சேர வழிசெய்த்துள்ளது. மேலும் கடந்த நான்காண்டுகளில் சவால்களை சாதகமாக மாற்றிக்காட்டியதே அரசின் வெற்றி என்கிறார் முதல்வர் யோகியார். எடுத்துக்காட்டாக கொரோனாவை சமாளித்த விதமே சாட்சி என்கிறார் அவர். அதுவே இப்போது மீண்டும் யோகியாரே முதல்வர் ஆவார் எனும் முழக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சமூக நலத்திட்டங்கள் தவிர, போக்குவரத்திற்கு என்று இரண்டு பெரிய அதிவேக நெடுஞ்சாலைகளையும் யோகி அரசு புயல் வேகத்தில் நிறைவேற்றியுள்ளது. மேலும் மெட்ரோ, லைட் மெட்ரோ (டிராம்) போக்குவரத்து திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. போதாக்குறைக்கு இவ்வாண்டில் தனது சொந்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவுள்ளது யோகி அரசு. சமீபத்தில் உத்தராஞ்சல் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் ஒன்றை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இது மேற்கு உ.பியையும், தலைநகர் டெல்லியையும் கிழக்கு உபியுடனும் இணைத்து வைக்கிறது. இத்திட்டம் மூலம் பயண நேரம் வெகுவாகக் குறைகிறது.

இதே போன்று வேறொரு திட்டமும் துவங்கப்படவுள்ளது. யோகி அரசு பதவியேற்ற பிறகு வேலையின்மையையும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. உ.பி மாநிலத்தின் மொத்த தேசிய உற்பத்தி (மாநில வருமானம்) மதிப்பு ரூ 10.09 இலட்சம் கோடியிலிருந்து ரூ.21.73 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் எனும் இடத்தை அடைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் நில, நீர் வளமும், இந்தியாவிலேயே அதிகமான அளவில் 24 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாலும், அதனுள் பெரும் இளைஞர் படையைக் கொண்டுள்ளதாலும் விரைவில் அனைத்து விதங்களிலும் முதல் மாநிலமாக உயரும் வாய்ப்பு பிரகாசமாகவேயுள்ளது.

இன்றுவரை தேர்தல் கணிப்புகள் பாஜக ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்றே கூறுகின்றன. அதே சமயம் சமஜ்வாதி கட்சிக்கு 150 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 30 இடங்கள் வரை பெற முடியும் என்றும் கூட கணிப்புகள் கூறுகின்றன. அடுத்தாண்டு நடைபெறவுள்ள நான்கு மாநிலத் தேர்தல்களில் பஞ்சாப்பில் காங்கிரஸ்சிற்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது என்றும் கணிப்புகள் கூறுகின்றன. வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டம், முத்தலாக் போன்றவை பாஜகவிற்கு விவசாயிகள், இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்றுத் தராது; எனவே பாஜகவுக்கு பின்னடைவே ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சமூக நல, மாநில வளர்ச்சித் திட்டங்களை முறையாக நிறைவேற்றிய அரசை மக்கள் மீண்டும் அரியணை ஏற்றுவார்களா என்பதை அடுத்தாண்டு அரசியல் நிலவரங்களே தீர்மானிக்கும் என்பதே உண்மை.

ரமேஷ் பாபு

error: Content is protected !!