இராமன் குறித்த சர்ச்சை:-வைரமுத்து மன்னிப்பு கேட்பது கெளரவம்!

இராமன் குறித்த சர்ச்சை:-வைரமுத்து மன்னிப்பு கேட்பது கெளரவம்!

ண்மையில், சென்னையில் நடந்த கம்பன் விழா ஒன்றில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கம்பன் விருது வழங்கப்பட்டது. அதில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த விழாவில் வைரமுத்து பேசியதுதான் இராம பக்தர்கள் மத்தியில் ஒரு பெரும் பூகம்பத்தைக் கிளப்பி விட்டுவிட்டது. அன்று இராமனைப் பற்றி அவர் எவ்வளவோ பேசினாலும் அதில் அவர் பேசிய ஒரேயொரு சொல்தான் பூகம்பத்திற்குக் காரணமாகிவிட்டது. அதையொரு சொல் என்று சொல்வதைவிட, கம்பனின் ஒரு சொல்லுக்கு வைரமுத்து கொடுத்த விளக்கம்தான் வில்லங்கமாகிவிட்டது. வாலி வதைப்படலம்தான் இன்று வைரமுத்துவை வதைக்கும் படலமாகிவிட்டது. வள்ளுவனுக்கு உரை எழுதியதுபோல் கம்பனுக்கு உரை சொன்னதால் வந்த பிரச்னை.

சரி, நீட்டி முழக்காமல், பிரச்னைக்கு வந்துவிடுவோம். வாலிமேல் மறைந்திருந்து அம்பெய்துவிட்டு வாலியின் முன் சென்று நிற்கிறான் இராமன். தன்மேல் அம்பெய்தவன் இராமன்தான் என்று தெரிந்ததும் அதை வாலியால் நம்பமுடியவில்லை. இராமனின் குலப்பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, அப்படிப்பட்ட நீயா இப்படிச் செய்தாய்? என்று பல கேள்விகளைக் கேட்கிறான். அந்தக் கேள்விகளில் ஒன்றுதான் கீழே வருவது:

‘கோ இயல் தருமம் உங்கள்

குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்

ஓவியத்து எழுத ஒண்ணா

உருவத்தாய்; உடைமை அன்றோ?

ஆவியை, சனகன் பெற்ற

அன்னத்தை அமிழ்தின் வந்த

தேவியைப் பிரிந்த பின்னை

திகைத்தனை போலும் செய்கை’

மேற்கண்ட பாடலுக்கு, நச்சினார்க்கினியரோ, பேராசிரியரோ வந்து உரையெழுதத் தேவையில்லை. சாதாரணத் தமிழறிந்த அனைவருக்குமே எளிமையாகப் புரியும். குறிப்பாகத்திகைத்தனை’ அல்லது ‘திகைத்தல்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்? எதிர்பாராத ஒன்றைக் காணும்போதோ அல்லது ஒன்றை எதிர்பாராமல் இழக்கும்போதோ ஏற்படுவதுதான் திகைப்பு. இந்தத் ‘திகைத்தல்’ உணர்வுக்கு நாம் அனைவருமே ஏதோவொரு கட்டத்தில் ஆளாகியிருப்போம். அதேபோல ‘சீதையை எதிர்பாராமல் தொலைத்துவிட்ட திகைப்பின் தடுமாற்றத்தால்தான் என்மேல் மறைந்திருந்து அம்பெய்து விட்டாயோ?’ என்றுதான் இராமனைப் பார்த்து வாலி கேட்கிறான்.

இங்குதான் வைரமுத்துவின் புதிய உரை வருகிறது. ‘திகைப்பு’ என்பதற்கு ‘புத்திசுவாதீனமில்லாத’ என்று பொருள் கூறுகிறார். வைரமுத்துவின் கூற்றுப்படி பார்த்தால், இராமன் புத்திசுவாதீனமில்லாதவனா என்பதுதான் இராம பக்தர்களின் கேள்வி. சரி,வைரமுத்துவின் உரைப்படி ‘திகைப்பு’ என்பதற்கு, ‘புத்திசுவாதீனமில்லாத’ என்பது அர்த்தமென்றால்,

தோளையே சொல்லுகேனோ? சுடர் முகத்து உலவுகின்ற

வாளையே சொல்லுகேனோ? அல்லவை வழுத்துகேனோ?

மீளவும் திகைப்பதல்லால், தனித்தனி விளம்பல் ஆற்றேன்;

நாளையே காண்டி அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னோ?’

என்று இராவணனின் காமத்தைத் தூண்டுவதற்காக சீதையின் அழகை, ஓர் ஓவியத்தைக காட்டுவதுபோல் இராவணனிடம் வர்ணிக்கும்போது, ‘மீளவும் திகைப்பதல்லால்’ என்று சூர்ப்பனகை சொல்கிறாளே, அதற்கு என்ன அர்த்தம்? அங்கும்புத்திசுவாதீனமில்லாதஎன்றுதான் பொருளா? சூர்ப்பனகை தவறுதான் செய்கிறாள்; அதுபோலவே இராவணனையும் செய்யத் தூண்டுகிறாள். எல்லாவற்றையும் புத்திசுவாதீனத்தோடுதான் செய்கிறாள்.

ஆக, வைரமுத்துவின் புதிய உரையை இராமபக்தர்களால் மட்டுமல்ல; யாராலுமே ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் வருத்தம் தெரிவிப்பதுதான் நியாயம். மன்னிப்புக் கேட்பதும் கெளரவம்தான்; தவறல்ல. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது கவிஞருக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?

பின் குறிப்பு: ஆண்டாண்டு காலமாக, கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை, ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தி வைத்திருப்பதற்காக யார் வந்து அந்த மக்களிடம் வருத்தம் தெரிவிக்கப் போகிறார்கள் அல்லது மன்னிப்புக் கேட்கப் போகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றோம்.

செ. இளங்கோவன்

Related Posts