மழை தொடரும்.. – ஆனா பெய்யாது!- வானிலை தகவல்!
கடந்த 2 நாட்களை பொறுத்தவரையில் ஆந்திர கடலோர பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், “மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை ஒட்டியுள்ள வட ஆந்திர கடலோர பகுதியில் கடந்த 26-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து இருக்கிறது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடியோ மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 1-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழக கடலோர பகுதியில் கடல் காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.


