ரஹ்மான் – நேரலை இசைக் கச்சேரி குளறுபடிகள் – எல்லோருக்கும் பாடம்!

ரஹ்மான் – நேரலை இசைக் கச்சேரி குளறுபடிகள் – எல்லோருக்கும் பாடம்!

ஹ்மான் கச்சேரி ஏற்பாட்டில் நிகழ்ந்த குளறுபடிகளில் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மெத்தனம் மற்றும் பேராசை போன்றவைதான் காரணம் என்றும் தெரிகிறது. ஆனால் இதுதான் சாக்கு என்று பலர் நிகழ்ச்சிக்கு டிக்கெட் புக் செய்து வந்திருப்பவர்களை திட்டவும் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர். அவ்வளவு செலவு செய்து நேரடியாகத்தான் பாட்டை கேட்க வேண்டுமா? ஹெட்ஃபோனில் கேட்டுக் கொண்டால் போதாதா, என்று பலர். எனக்கு எம்எஸ்விதான் பிடிக்கும், ரஹ்மான் அனிருத் போடறது எல்லாம் மியூசிக்கா என்று சிலர். ஏம்பா அம்மா, அப்பா காசை வீணாக்குகுறீங்க? என்று இன்னும் சிலர். இதில் எனக்கு குழப்பம் வருகிறது.

நிகழ்வில் நடந்த பிரச்சினைகளுக்குக் காரணம் டிக்கெட் வாங்கியவர்களா, என்றால் இல்லை. இருப்புக்கும் மேல் டிக்கெட் விற்று அவற்றை திடலில் சரிவர வரையறுக்கத் தவறிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். போக்குவரத்தையும் மக்களையும் ஒழுங்குபடுத்தத் தவறிய காவல்துறை. இவர்கள்தான் காரணம். இன்னும் போனால், சரியான திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்படுகிறதா என்று செக் செய்யாமல் போனதற்கு வேண்டுமானால் ரஹ்மானின் அட்மின் டீமை கொஞ்சமே கொஞ்சம் கேள்வி கேட்கலாம். அதையும் தாண்டி நிகழ்ச்சிக்குப் போன பொதுமக்களை விமர்சிப்பதில் எந்த நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சொல்லப் போனால் ரஹ்மானைக் கூட கேள்வி கேட்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அவர் நடத்தும் 85வது நேரலைக் கச்சேரி இது என்று அறிகிறேன். அதாவது 84 கச்சேரிகள் பெரிய பிரச்சினை இல்லாமல் நடந்தேறி உள்ளன. இப்போதுதான் முதன் முறையாக பிரச்சினை வந்திருக்கிறது. உலகில் நேரடி கச்சேரிகளில் பிரச்சினை வரும் முதல் நிகழ்வு கூட இதுவல்ல. அறுபதுகளிலேயே இது நடந்திருக்கிறது. உலகின் ஆகப்பெரிய ராக் குழுவான பீட்டில்ஸ் கச்சேரிகளில் கலவரங்கள் நடந்து கச்சேரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்டாலிகா எனும் தீவிர ராக் இசைக்குழுவின் நிகழ்வுகளில் மக்கள் மயங்கி விழுந்திருக்கிறார்கள். சிலருக்கு காது செவிடாகி இருந்திருக்கிறது. The Who எனும் ராக் இசைக்குழுவின் ஒரு கச்சேரியில் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் 11 பேர் இறந்து போயிருக்கிறார்கள். Pearl Jam எனும் ராக் குழுவின் ஒரு கச்சேரியில் டீன் ஏஜ் இளைஞர்கள் எட்டு பேர் மூச்சு முட்டி இறந்து போயிருக்கிறார்கள்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சரி, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நேரலை கச்சேரிகளுக்கு போய்த்தான் ஆக வேண்டுமா என்றால் அதுதான் சிலருக்கு பிரத்தியேக மகிழ்வைத் தருகிறது. நவீன இளைஞர்கள் மொழியில் சொல்வதென்றால் ‘வைப்’ கிடைக்கிறது. அதில் தவறு காண இடமில்லை. சொல்லப் போனால் இந்தியாவில் இப்படி நேரலை இசைக் கச்சேரியில் வைப் செய்வது என்பதே புதிதுதான். கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் ரஹ்மான், தைக்குடம் பிரிட்ஜ், அனிருத், பாத்ஷா, யோயோ ஹனி சிங் என்று கொஞ்சம் பேர் வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவரை அலுங்காமல் குலுங்காமல் குஷன் சேரில் அமர்ந்து கர்நாடக இசை அல்லது மெல்லிசைக் கச்சேரியை ரசித்து விட்டு, சபா கேண்டீனில் தயிர் வடை சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம்.

ஆனால் ராக் கான்செர்ட் மாதிரி நிகழ்வுகளின் நேரலை அனுபவம் வேறு விதம். உண்மையிலேயே அது ஒரு ‘வைப்’தான். நான் பிங்க் ஃப்ளாய்ட், ப்ரையான் ஆடம்ஸ், மார்க் நாஃப்ளர் கான்செர்ட்களுக்குப் போயிருக்கிறேன். கொஞ்சம் க*ஞ்*சா அடிச்ச மாதிரிதான் மயக்கம் வரும். அதுவுமின்றி சிடியில் இருக்கும் பாடலையே வேறு வேறு விதமாக பாடுவார்கள். பாடலில் வரும் கிதார் லீட்களை கொஞ்சம் நீட்டி முழக்கி வாசிப்பார்கள். கூட்டதின் ரெஸ்பான்ஸ்சுக்கு ஏற்றபடி இயைந்து வாசிப்பார்கள். ரஹ்மானின் One World நேரலை நிகழ்வில் அவர் பாடல்களையே வேறு வடிவில் கொஞ்சம் ஜாஸ், கொஞ்சம் புளூஸ் வடிவில் மாற்றி, சுருக்கி வாசித்தார். புல்லரிக்கும் அனுபவம் அது. அப்படிப்பட்ட புதிய அனுபவங்களைத் தேடித்தான் மக்கள் போகிறார்கள். யாராவது பெண்டாட்டி நகையை விற்று அல்லது பிக் பாக்கெட் அடித்து அந்தக் காசில் டிக்கெட் வாங்கினால் அவர்களை கேள்வி கேளுங்கள். மற்றபடி காசு இருப்பவர்கள் வாங்கிப் போவதை எப்படி விமர்சிக்க முடியும்? யோசித்துப் பார்த்தால் இந்த மாதிரி நேரலை நிகழ்வுகள் வெறும் இசை நிகழ்வு மட்டுமல்ல; பொருளாதார நிகழ்வும் கூட. An activity that helps boost the economy.

இந்தியாவில் இசைத் துறை என்பது மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. சினிமா தாண்டி இசையில் கேரியர் என்று யாராலும் யோசிக்க முடியாமல்தான் இருக்கிறது. அது மாற வேண்டும். அதற்கு நேரலை இசைக் கச்சேரிகள் இன்னும் அதிக அளவில் நிகழ வேண்டும். இப்போது நடப்பது போதவே போதாது. சும்மா ஆங்காங்கே ரஹ்மான், அனி, பாத்ஷா என்பதெல்லாம் தாண்டி அதிகதிக ராக், மெட்டல், ஃபியூஷன் குழுக்கள் தோன்ற வேண்டும். அவர்கள் தேசிய அளவில் அலைகளை கிளப்ப வேண்டும். அவர்கள் பின்னால் இளைஞர்கள் இளைஞிகள் ஓட வேண்டும். அந்தக் குழுக்களின் நேரலை நிகழ்வுகள் விழாக்களாக, கொண்டாட்டமாக மாற வேண்டும். அவற்றின் மூலம் இசையும் வளர்ந்து அதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரமும் வளர வேண்டும்.

அவர்களுக்கெல்லாம் ரஹ்மான் நிகழ்வில் நடந்த குளறுபடிகள் ஒரு பாடமாக, முன்னெச்சரிக்கையாக ஆக வேண்டும். இந்த சம்பவத்தில் கற்றவற்றை வைத்து வருங்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சரியான திட்டமிடலுடன் ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட வேண்டும். ரஹ்மான் நிகழ்வுகளில் பங்கேற்கப் போகிறவர்களை விமர்சிப்பவர்கள் நிறைய பேர் ஆரம்பிக்கும் போதே ‘இப்படி எல்லாம் சொன்னா என்னை பூமர் அங்கிள் என்று சொல்லி விடுவீர்கள், ஆனா’ என்ற டிஸ்களைமருடன்தான் அவர்கள் பதிவுகளை ஆரம்பிக்கிறார்கள். அப்படி டிஸ்களைமரே தேவையில்லை பாஸ். அந்த சந்தேகமே உங்களுக்கு வேண்டாம்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!