சுழித்து ஓடும் வதந்திகளுக்கும் சுடச்சுட வெளிவரும் உண்மைக்கும் இடையிலான மெல்லிய கோட்டை மையமாகக் கொண்டு, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘வதந்தி’ வெப் சீரிஸின் இரண்டாவது அத்தியாயம் தயாராகிவிட்டது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் தொடர், வரும் ஆகஸ்ட் 7 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒலிச்சேர்க்கையுடனும், ஆங்கிலம் உட்பட 15-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் சப்டைட்டில்களுடனும் 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த 8 எபிசோட் தொடர் வெளியாகிறது.
மதுரை மண்வாசனை… ஜல்லிக்கட்டு களம்… மர்ம பின்னணி!
முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இச்சீசனையும் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் முன்னணி இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த முறை கதைக் களம் தென் தமிழகத்தின் இதயப் பகுதியான மதுரைக்கு நகர்கிறது. மதுரையின் செறிவான கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் விறுவிறுப்பையும் பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. குற்றவுணர்வு, பல அடுக்கு ரகசியங்கள், ஊடகங்களின் பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்தொடரில், நடிகர் எம். சசிகுமார் ‘எஸ்.ஐ. மூசா ரஸா’ என்ற நேர்மையான காவல் அதிகாரியாக முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றி கதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.
எலும்புக்கூடு எச்சங்களும்… ‘மணி’ என்ற கைதியும்!
ஒரு புதிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் தொடக்க விழாவின் போது, எதிர்பாராத விதமாக மனித எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த அதிர்ச்சி தரும் வழக்கை விசாரிக்க களம் இறங்குகிறார் எஸ்.ஐ. மூசா ரஸா.
விசாரணையின் நகர்வில், ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கி தடயங்கள் நீள்கின்றன. ஒருபுறம் அரசியல் அழுத்தங்கள், மறுபுறம் ஊடகங்களின் ஊகங்கள் மற்றும் போலி வதந்திகள் என அனைத்து தடைகளையும் தாண்டி, மூசா ரஸா உண்மையை எப்படி வெளிக்கொணர்கிறார் என்பதே இத்தொடரின் விறுவிறுப்பான மையக்கதை.
நம்பிக்கையுடன் தயாரிப்புக் குழு!
பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவுத் தலைவர் நிகில் மாதோக் கூறுகையில், “தென்னிந்திய கதைகளுக்கு உலகம் முழுவதும் பேராதரவு கிடைத்து வருகிறது. முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, ஆண்ட்ரூ லூயிஸ் – புஷ்கர் காயத்ரி கூட்டணியுடன் மீண்டும் இணைவதில் பெருமை கொள்கிறோம். மதுரையின் கலாச்சார வேர்களை இழக்காமல் உருவாகியுள்ள இக்கதை உலகளாவிய ரசிகர்களைக் கவரும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.
தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி பேசுகையில், “சஸ்பென்ஸ் மற்றும் மனித உணர்வுகளின் தனித்துவமான கலவையை இச்சீசன் தக்கவைத்துள்ளது. சசிகுமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கதையாக இது இருக்கும்,” என்றனர்.
தமிழ்செல்வி

