மருத்துவ உலகில் எத்தனையோ நவீனக் கண்டுபிடிப்புகள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மருந்துகள் வந்துவிட்டன. ஆனால், உலகளவில் கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மிக எளிய, மலிவான மருத்துவக் கண்டுபிடிப்பு எது தெரியுமா? அதுதான் வாய்வழி நீரேற்றக் கரைசல் எனப்படும் ORS (Oral Rehydration Solution).
உடலில் ஏற்படும் தீவிர நீரிழப்பைத் தடுத்து (Dehydration), மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளைக் மீட்கும் இந்த எளிய கரைசலின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தவே ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம் தேதி சர்வதேச ORS தினம் அனுசரிக்கப்படுகிறது.
மருத்துவ வரலாற்றுப் புரட்சி: வங்கதேச போரும் ஒரு இந்திய மருத்துவரும்!
ORS கரைசலின் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சம்பவம் ஒளிந்திருக்கிறது. 1971-இல் நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரின்போது, லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தஞ்சமடைந்தனர். அப்போது அகதிகள் முகாம்களில் ‘காலரா’ நோய் மிக வேகமாகப் பரவி, நீரழிவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அக்காலத்தில் காலராவால் ஏற்படும் நீரிழப்புக்கு நரம்பு வழியே (IV Fluid) திரவம் செலுத்துவதே ஒரே வழியாக இருந்தது. ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு IV திரவ பாட்டில்களும் ஊசிகளும் வழங்குவது சாத்தியமில்லாமல் போனது.
அந்த இக்கட்டான சூழலில்தான், இந்திய மருத்துவருமான டாக்டர் திலீப் மகாலனாபிஸ் (Dr. Dilip Mahalanabis) ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். குளுகோஸ் மற்றும் உப்பு கலந்த நீரைக் குடிக்கக் கொடுப்பதன் மூலம் உடலின் குடல் சுவர்கள் சோடியத்தையும் நீரையும் உடனடியாக உறிஞ்சிக் கொள்ளும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ORS கரைசலை நோயாளிகளுக்குக் கொடுத்தார்.
விளைவு? 30 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், வெறும் 3 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்தது. மருத்துவ உலகம் வியந்து போற்றி ‘இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவ முன்னேற்றம்’ என்று இதனைப் பாராட்டியது.
ORS எப்படிச் செயல்படுகிறது?
வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஏற்படும்போது, உடலில் உள்ள நீருடன் சேர்ந்து சோடியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளும் வெளியேறுகின்றன. வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால் இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது.

குளுக்கோஸும் சோடியமும் குறிப்பிட்ட விகிதத்தில் இணையும் போது, அவை குடலில் மிக வேகமாக உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டத்தில் நீரைச் சேர்க்கின்றன. இந்த அறிவியல் விதியைத்தான் ORS மிகத் துல்லியமாகப் பயன்படுத்துகிறது.
வீட்டில் ORS தயாரிக்கும் சரியான விகிதம்
உலக சுகாதார அமைப்பின் (WHO) தயார்நிலை ORS பாக்கெட்டுகள் மருந்தகங்களில் மலிவு விலையில் கிடைக்கின்றன. அவை கிடைக்காத அவசரக் காலத்தில் வீட்டிலேயே இதனைத் தயாரிக்கலாம்:
-
1 லிட்டர் தூய்மையான குடிநீர் (கொதிக்க வைத்து ஆறவைத்த நீர்)
-
6 தேக்கரண்டி சர்க்கரை
-
1/2 தேக்கரண்டி சமையல் உப்பு
இவற்றைத் துல்லியமாக அளந்து கலக்க வேண்டும். சர்க்கரையோ உப்போ அளவுக்கு அதிகமானால் அல்லது குறைந்தால் கரைசலின் வீரியமும் தன்மையும் மாறிவிடும்.
தவறுதலாகப் பயன்படுத்தப்படும் ‘ஜூஸ்’ மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ்!
சந்தையில் கிடைக்கும் பாக்கெட் ஜூஸ்கள், கார்பனேட்டட் பானங்கள் அல்லது ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் போன்றவை ORS-க்கு மாற்றாக முடியாது. அவற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், உப்பின் அளவு குறைவாகவும் இருப்பதால், அவை வயிற்றுப்போக்கை மேலும் தீவிரமாக்கக்கூடும்.
குழந்தைகளுக்கு ORS கொடுக்கும்போது, அதனுடன் மருத்துவரின் ஆலோசனையோடு ஜிங்க் (Zinc) மாத்திரைகளையும் சேர்த்து வழங்குவது குடல் ஆரோக்கியத்தை விரைவாக மீட்டெடுக்க உதவும்.
வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பால் உலகில் நாள்தோறும் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான சிறார்களைக் காப்பாற்ற, இந்த ‘அற்புதக் கரைசல்’ குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு குடும்பத்திற்கும் போய்ச்சேர வேண்டியது காலத்தின் அவசியம்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்

