5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து!

பலதரப்பிலும் சர்ச்சையும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் ஐந்து மற்றும் எட்டாம்ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
2018-19ம் கல்வியாண்டில் இருந்து ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
அனைத்து குழந்தைகளும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளித்து வருகிறது. ஆனால், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோவு நடத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்று பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய தேர்வு முறை தொடரும் என்றும் தெரிவித்தார்.