பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: விஜய் டி.வி. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  எதிர்ப்பு: விஜய் டி.வி. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

தினமும் பல லட்சம் மக்களால் பார்க்கப்படும்பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி விஜய் டி.வி. அலுவலகத்தின் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் டி.வி.யில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2 கடந்த ஜூன் 17 -ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.கமல்ஹாசன் இரண்டாவது முறையாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த முறை நிகழ்ச்சி ஒளிபரப்பான சமயத்தில், போராட்டங்களின் வாயிலாக தங்களது எதிர்பை இந்து மக்கள் கட்சியினர் பதிவு செய்திருந்தனர். அதுவே நிகழ்ச்சிக்கான விளம்பரமாகவும் மாறியது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் மீண்டும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். இதில் 30 – க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸார் விஜய் டிவி அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்தனர். இதன்பேரில், சுமார் 50-க்கும் அதிகமான போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக இந்து மக்கள் கட்சியினர், பிக்பாஸ் நிகழ்சியில் நடக்கும் நிகழ்வுகளை பதாகைகளாக கையில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் குமார், பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் அவருடைய சுய விளம்பரத்திற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதனால் அவருக்கும், தொலைக்காட்சிக்கும் மட்டுமே லாபம். இந்த நிகழ்ச்சி குழந்தைகளை தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கும். சினிமா துறையில் சென்சார் போர்டு உள்ளது போல் தொலைக்காட்சிக்கும் சென்சாரைக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

Related Posts

error: Content is protected !!