மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதை – முதல்வர் உத்தரவு!

மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதை – முதல்வர் உத்தரவு!

ந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் வியாழக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 98. இந்தியாவின் குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகள் அதிக மகசூல் உற்பத்தி செய்வதை உறுதிசெய்ய உதவிய அதிக மகசூல் தரும் நெல் வகைகளை உருவாக்குவதில் எம்.எஸ்.சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தவர். அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சூழலில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உலகம் போற்றும் விஞ்ஞானியாகச் சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனைக் கவுரவிக்கும் விதமாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் துறையில் அபரிமிதமான வளர்ச்சியை ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை வியந்து பார்க்க வைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இந்திய வேளாண் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியவரும் இவரே. தனது 98 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த இவர், கடந்த பத்து நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இயற்கை எய்தினார்.

இந்தியாவின் பசுமைப்புரட்சியில் முக்கியமானவராகக் கருதப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் இந்திய ’பசுமைப் புரட்சியின் தந்தை’ எனப் போற்றப்படுபவர்.அதாவது
எம்.எஸ்.சுவாமிநாதன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அவரது முழுப்பெயர் ’மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்’ ஆகும். இவர் 1925ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கும்பகோணத்தில் பிறந்தவர். இவரது தந்தை எம்.கே.சாம்பசிவம் கும்பகோணத்தில் ஒரு பிரபலமான மருத்துவர். கச்சா எண்ணெய்யை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் ஒரே ஆண்டில் அப்பகுதியில் யானைக்கால் நோயை உண்டாக்கும் கொசுக்களை ஒழித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு. அதனாலேயே இவரை கொசு ஒழித்த சாம்பசிவம் என அப்பகுதி மக்கள் அழைத்தனர். கல்வி மூலம் மக்களை ஒன்று திரட்டி சமூகமாற்றத்தை உருவாக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை தன் தந்தை மூலமாக கற்றுக் கொண்டார் எம்.எஸ்.சுவாமிநாதன். தனது தந்தை வழியில் இவரும் மருத்துவம் பயின்று, அவர்களது சொந்த மருத்துவமனையை நிர்வகிக்க வேண்டும் என்பதுதான், அவரது குடும்பத்தினர் விருப்பமாக இருந்தது.

ஆனால், 1942ம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சம் எம்.எஸ்.சுவாமிநாதனை மிகவும் பாதித்தது. எனவே, வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என அவர் முடிவு செய்தார். எனவே, திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தைப் பெற்றதும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தைப் பெற்றார். வேளாண்துறைக்கே முன்னுரிமை 1947ம் ஆண்டு டெல்லியில் உள்ள பூசா நிறுவனத்தில் புதிய மரபணு பயிற்சிகள் குறித்த முதுநிலை படிப்பை முடித்த சுவாமிநாதன். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இடையில், வேளாண் துறையில் எதிர்காலம் இல்லை என வற்புறுத்தி அவரை உறவினர்கள் ஐஏஎஸ் தேர்வு எழுத வைத்தனர். அவரும் 1948ம் ஆண்டும் ஐஏஎஸ்க்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அந்தப் பணிக்குச் செல்ல அவருக்கு விருப்பமில்லை. எனவே, மேற்கொண்டு வேளாண் படிப்புகளை மேற்கொண்டார். கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதும், அவருக்கு அமெரிக்காவில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்திலேயே நிரந்தப்பணி கிடைத்தது. ஆனால், தன் சொந்த நாட்டு மக்களின் பசி, பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்பதே எம்.எஸ்.சுவாமிநாதனின் இலட்சியமாக இருந்தது.

எனவே, அமெரிக்க வேலையை மறுத்துவிட்டு, 1954ம் ஆண்டு இந்தியா திரும்பினார். இங்கு வந்ததும் மீண்டும் அவருக்கு ஐஏஎஸ் பணியில் சேர அழைப்பு வந்தது. ஆனால், அதை மறுத்த அவர், ஒடிசா மாநிலத்தில் கிடைத்த வேளாண்துறைப் பணியில் சேர்ந்தார். கோதுமைப் புரட்சி வேளாண் துறையில் எம்.எஸ்.சுவாமிநாதன் தனது ஆராய்ச்சிகளை ஒருபுறம் மேற்கொண்டிருந்த சூழலில், 1960ம் ஆண்டு மீண்டும் பீகாரில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, அமெரிக்காவில் இருந்து ஒரு கோடி டன் கோதுமையை இறக்குமதி செய்தார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலையை விமர்சனத்திற்கு ஆளாக்கியது. உலக நாடுகளிடம் இந்தியா உணவுக்காக கையேந்தி நிற்பதாக வெளிநாட்டினர் ஏளனம் செய்ததால், மனவேதனை அடைந்தார் எம்.எஸ்.சுவாமிநாதன்.

இந்தியாவின் உணவுப் பஞ்சத்தைப் போக்க ஏதாவது செய்ய நினைத்த அவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட நாரி என்ற குட்டை ரக கோதுமைப் பயிர்களை 1964ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தார். விவசாயிகளுக்கு 200 சதவீத லாபம் கிடைத்ததால் அவர்களும் இந்த குட்டை ரக கோதுமைப் பயிர்களை அதிகம் விவசாயம் செய்யத் தொடங்கினர். இந்த குட்டை ரக கோதுமைப் பயிர்களை நேரில் கண்டு அதன் பலன்களை அறிந்து கொண்டதன், தொடர்ச்சியாக 1968ம் ஆண்டு கோதுமைப் புரட்சியை அறிவித்தார் இந்திராகாந்தி. அதோடு உணவுப் பொருட்களின் சேமிப்பு இல்லையென்றால் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்க முடியாது என்பதை உணர்ந்த இந்திராகாந்தி, இந்தியாவில் பசுமைப்புரட்சி உண்டாக வேண்டும் என விரும்பினார். அதன் பலனாக கோதுமை மட்டுமின்றி, நெல் புரட்சியும் உருவானது. இந்தப் பசுமைப்புரட்சியை எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னின்று நடத்தினார். அரிசித் தட்டுப்பாட்டை நீக்க பல நவீன அறிவியல் முறைகளை அவர் கண்டறிந்தார். நாட்டில் பஞ்சம் போன்ற காலங்களில் விவசாயிகள் மற்றும் அரசின் கொள்கைகளுடன் இணைந்து, பிற விஞ்ஞானிகள் உதவியுடன் ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்தினார்.

எம்.எஸ்.சுவாமிநாதனின் திட்டங்கள் மூலம் இந்தியாவில் வேளாண் துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டது. ஏளனம் செய்த நாடுகள் இந்தியாவை வியந்து பார்க்க ஆரம்பித்தன. இந்த பசுமைப்புரட்சி மூலம் எம்.எஸ்.சுவாமிநாதனும் சர்வதேச அளவில் அவர் புகழ் அடைந்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநராக 1972ஆம் ஆண்டு முதல் 1979 வரை பணியாறியுள்ளார். இதுதவிர, மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்து எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள உலக அரிசி ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநராக (1982-88) எம்.எஸ். சுவாமிநாதன் பணியாற்றியுள்ளார். பட்டினியில்லாத இந்தியாவே என் கனவு! வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்த எம்.எஸ்.சுவாமிநாதன், ‘இந்தியாவில் பட்டினியைப் போக்கும் ஒரே வழி, நிலையான வேளாண்மையை ஏற்படுத்துவதுதான்’ என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

‘பட்டினியில்லாத இந்தியா’வைத்தான் தனது கனவாக வைத்திருந்தார். “நம்முடைய பாரம்பரிய சொத்தான மரங்களையும் இயற்கை வளங்களையும், எதிர்காலத்துக்காக பாதுகாக்க வேண்டும். பெரும்பாலும் காடுகளில் உள்ள மரங்களின் முக்கியத்துவத்தை பழங்குடி மக்களே உணர்கின்றனர். அவர்களுக்குத்தான் மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான உறவுமுறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. பழங்குடி மக்களிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். 97 சதவிகித தண்ணீரை கடற்பகுதியில் இருந்துதான் நாம் பெறுகிறோம். எனவே, அதை முறையாக சேமிக்கவும் பயன்படுத்தவும் வேண்டும்,” என தொடர்ந்து மக்களிடம் அறிவுறுத்தி வந்தார். மகசேசே விருது கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக் கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க 20 ஆசியர்களின் ஒருவராக டைம் பத்திரிகையால் எம்.எஸ்.சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 1988ஆம் ஆண்டு தனது பெயரிலேயே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (MS Swaminathan Research Foundation) என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, கிராமப்புற பகுதிகளில் வேளாண் தொழில் வளர்ச்சி பெற பங்காற்றத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் அமைப்பாளராகச் செயல்பட்டு வந்த அவர், தனது வயதையும் பொருட்படுத்தாமல் சுறுசுறுப்புடன் இயங்கி வந்தார். இந்த தொண்டு நிறுவனம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் 14 மாநிலங்களில் வேளாண் சார்ந்த ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறது. இரங்கல் இந்நிலையில்தான் இன்று அதிகாலை வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது

இதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “பசிப்பிணி ஒழிப்பு – உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்” என்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!