அடித்து பேச வேண்டியதே காவல் சீர்திருத்தம்தான்!

அடித்து பேச வேண்டியதே காவல் சீர்திருத்தம்தான்!

சென்னை  ஐகோர்ட் திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கை அடுத்த மாதம் 20ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை தமிழக காவல் துறையின் சீர்திருத்தத்தின் அவசியத்தை அழுத்தமாக உணர்த்த வேண்டியதுள்ளது. அஜித் குமாரை எந்த அதிகாரியும் நேரடியாக “அடித்துக் கொல்லுங்கள்” என்று உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், சித்திரவதை செய்து, அடித்துக் கொல்லும் அளவுக்கு காவல்துறையினருக்குள் இந்த வன்மப் புத்தி எங்கிருந்து உருவானது என்ற கேள்விதான் நம் முன் நிற்கிறது.

அஜித்குமாருக்கும், அவரைத் தாக்கிய காவல்துறையினருக்கும் இடையே எந்தவித முன்விரோதமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோலவே, புகாரின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பலருக்கும் காவல்துறையினருக்கும் தனிப்பட்ட பகை இருப்பதில்லை. ஆனாலும், கொலைவெறித் தாக்குதல்கள் அரங்கேறுகின்றன. பொதுவெளியில் ஒருவரைப் பிடிக்கும்போது, “எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து சொல்” என்று அழைத்துச் சென்று, காவல் நிலையத்திற்குள் நுழைந்த நொடியில் இருந்து வாய் திறக்க விடாமல் தாக்கத் தொடங்கும் வன்முறை மனநிலை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இன்றும், மார்பளவு, உயரம், உடல் பலம் போன்றவற்றை மட்டுமே காவல்துறையில் சேர்வதற்கான தகுதிகளாகக் கருதி வந்தால், அடியாட்களைத்தான் உருவாக்க முடியுமே தவிர, காவல் மற்றும் புலனாய்வு விஷயங்களில் ஒரு அறிவு சார்ந்த அமைப்பை உருவாக்கவே முடியாது.

காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என ஒவ்வொரு தரப்பு காவலர்களின் மனநிலையும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. இதை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால் பெரும் அதிர்ச்சிதான் மிஞ்சும். ஆய்வாளருக்கும், துணை ஆய்வாளருக்கும் ஒரு நகரமே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற மனநிலை இருக்கிறது. “இந்த நகரை காக்க வேண்டியது என் கடமை” என்ற மனநிலைக்குப் பதிலாக, “இந்த ஊருக்கே நான்தான்” என்ற சர்வாதிகார மனநிலை உருவாகியுள்ளது. “ஒரு புகார் மட்டும் கிடைக்கட்டும், எவனை வேண்டுமானாலும் தூக்கிப்போட்டு மிதிக்கலாம்” என்ற எண்ணம் மேலோங்குகிறது. காவலர்களுக்கோ, “நான் போலீஸ்; என்கிட்டயே கைநீட்டி பேசுகிறாயா?” என்பதில் ஆரம்பித்து, அது பல விதங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

என்றைக்கு இந்தப் பிரச்சினைகளை உணர்ந்து, காவல்துறையினரின் மனநிலையை உளவியல் ரீதியாக மாற்றுகிறார்களோ அன்றைக்குத்தான் இந்த சமூகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும். ஆளும் அரசுகள் இந்த மாற்றத்தை ஏற்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. எனவே, சுப்ரீம்கோர்ட்தான் இதில் தலையிட்டு, காவல் துறை சீர்திருத்தத்தை விரிவுபடுத்தி, காவல்துறையினரின் மனநிலையிலும், செயல்பாடுகளிலும் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். வெறும் சட்டத் திருத்தங்கள் மட்டும் போதாது; ஆழமான உளவியல் அணுகுமுறைகள் மூலமே இந்தக் கொடூரமான மனநிலையை மாற்ற முடியும்.

ஏழுமலைவெங்கடேசன்

Related Posts