மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம் ! – பிரதமர் அறிவிப்பு!

மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம் ! –  பிரதமர் அறிவிப்பு!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மத்திய கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது போல் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறையின் பெயர் துறை முகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மாற்றம் செய்யப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சூரத்தின் ஹசிரா முதல் பாவ்நகரில் உள்ள கோகா வரையிலான Ro-Pax படகு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த போது இதை தெரிவித்தார்.

தரைவழி போக்குவரத்தை ஒப்பிடுகையில் கடல்வழி போக்குவரத்துக்கான செலவை குறைக்கும் நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த இரண்டு இடங்களுக்கு இடையிலான பயண நேரமும் 12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும். இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ‘சுயசார்பு இந்தியாவில் கடல்வழி போக்குவரத்தின் பங்கு முக்கியத்துவம் வகிக்கிறது. அரசின் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மிக முக்கியமாக ஒரு நடவடிக்கையாக, கப்பல் போக்குவரத்து அமைச்சகம் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

வளர்ந்த பொருளாதார நாடுகளில் கப்பல் போக்குவரத்து துறைதான் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்தை கவனித்துக் கொள்கிறது. இந்தியாவிலும், இதேபோன்ற பணிகள்தான் நடந்து வருகிறது. பெயரில் உள்ள தெளிவு, பணியிலும் கண்டிப்பாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!