June 3, 2023

அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன் – கொஞ்சம் ஞாபகக் குறிப்புகள்!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள்தான் உற்சாகமாக அறிவித்தன. அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹேரிஸ் தேர்வாகியுள்ளார். 1942–ம் ஆண்டு நவம்பர் 20–ம் தேதி பிறந்தவர் ஜோ பிடன். இதுவரை அமெரிக்க வரலாற்றில் வயது முதிர்ந்த அதிபர் என்ற பெயர் பெற்றிருந்தவர் ரொனால்ட் ரீகன். 1989–ம் ஆண்டு அவர் அதிபர் பதவியில் இருந்து வெளியேறியபோது அவருக்கு வயது 77. அந்த வகையில் ஜோ பிடன்தான், அமெரிக்க வரலாற்றிலேயே வயது முதிர்ந்த அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

1972ம் ஆண்டு அவரது 29வது வயதில் டெலாவரிலிருந்து அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் பிடன். 36 வருடங்கள் அந்த பதவியில் தொடர்ந்தார். 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை, பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபர் பதவி அந்தஸ்து வகித்தார்.

2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் களம் இறங்கியதால் ஒதுங்கிக் கொண்டார்

2011ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் உள்ளே புகுந்து சுட்டுக் கொன்ற போது அந்த நடவடிக்கையை எடுப்பது ரிஸ்க் என்று எச்சரிக்கை செய்தவர் ஜோ பிடன். ஆனால் அதை ஏற்கவில்லை ஓபாமா. தாக்குதலை வெற்றிகரமாக முடித்தார்.

1972ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்தின்போது ஜோ பிடனின் முதல் மனைவி மற்றும் 13 மாத பெண் குழந்தை பலியானார்கள். இதையடுத்து தனது 2 மகன்களை கவனித்துக் கொள்வதற்காக அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். ஜோ பிடன் மகன் ஜோசப்பியோ பிடன் டெலாவர் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றி வந்தார். ஆனால் 2015–ம் ஆண்டு அவரது 46வது வயதில் மூளை புற்று நோய் காரணமாக அவர் உயிரிழந்தார். மற்றொரு மகன் ஹன்டர் போதை மருந்து பிரச்சினைகளில் சிக்கியவர். 1988ம் ஆண்டு ஜோ பிடன் இருமுறை மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமெரிக்க மக்கள் 1900ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2020இல்தான் இந்த அளவுக்குப் பெருவாரியாகத் திரண்டு வந்து வாக்களித்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் 16 கோடி மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று ஃப்ளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். இது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையான சுமார் 24 கோடியில் 67 சதவீதமாகும். 2016 ஜனாதிபதி தேர்தலில் 60.1 சதவீதம் மக்களே வாக்களித்து இருந்தார்கள். 1900இல் 73.7 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால் அப்போது பெண்களுக்கும் கறுப்பின மக்களுக்கும் சம வாக்குரிமை இருக்கவில்லை. அதைக் கணக்கில் கொண்டால், அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக 2020இல்தான் பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

இதில் 10 கோடி மக்கள் தேர்தல் நாளான நவம்பர் 3க்கு முன்னரே வாக்களித்து விட்டார்கள். கொரோனா கொள்ளை நோய் காரணமாக ஆறு கோடிக்கும் அதிகமான மக்கள் தபாலில் வாக்களித்தார்கள். கடந்த நான்கு வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் மக்களைப் பிரிக்கும் அரசியலைச் செய்தார். அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதமாக இருக்கும் கறுப்பின மக்களையும் சுமார் 10 சதவீதமாக உள்ள தென் அமெரிக்க வம்சாவளி யினரையும் வெறுப்போடு அணுகியதுதான் டொனால்ட் டிரம்ப்பின் மிகப்பெரிய பலவீனம். கொரோனா வைரஸ் கொள்ளை நோயைச் சரிவரக் கட்டுப்படுத்த முடியாமல் போனதும் மே 25, 2020 அன்று மின்னியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின மனிதர் வெள்ளையின போலீஸ் அதிகாரி டெரக் சோவினால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதும் டிரம்புக்கு எதிரான அணிதிரட்டலுக்குக் காரணமாக அமைந்தது.

டெமாக்ரேட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனும் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹேரிஸும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உலகின் பழமையான ஜனநாயகமான அமெரிக்காவை ஆட்சி செய்வதற்கான தீர்ப்பை அமெரிக்க மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் ஏழரை கோடி மக்களின் வாக்குகளை ஜோ பைடன் பெற்றுள்ளார். இதற்காக அவர் அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.