மோடி எதற்கு நாகர்கோயிலுக்கு வர வேண்டும்?

ஒக்கி புயலின் பாதிப்புகளை பார்வையிட இன்று மோடி கன்னியாகுமரி வந்து சென்றிருக்கிறார். சரியாக சொல்வதானால், ஒக்கி புயல் பாதிப்புகளின் படக் காட்சிகளை பார்வையிடுவதற்காக அவர் வந்திருக்கிறார். எங்கும் நேரில் செல்லவில்லை. மோடி வருவதற்காக அமைக்கப்பட்ட ஹெலி பேடில் இறங்கி விருந்தினர் இல்லத்தில் முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்துவிட்டு சில வீடியோ காட்சிகளைப் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டார். இதை செய்வதற்கு எதற்கு நாகர்கோயிலுக்கு வர வேண்டும்?
ராகுல் காந்தி நேரில் வந்தார்; அதனால் தானும் வந்து வருகைப் பதிவில் பெயர் எழுதுகிறாரா? அப்படியானால் ராகுல் சென்றதைப் போல நேரில் செல்ல வேண்டும். ‘நேரில் போனால் கலவரம் வரும்; வன்முறை வெடிக்கும்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்ன அதே பதிலை இவருக்கும் சொல்கின்றனர். இவர் பெரிய தீப்பொறி திருமுகம்… அந்தப் பக்கம் போனாலே நெருப்புப் பத்திக்கும்…
நெருப்பு பற்ற வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம். கைவிட்ட அரசு, அரபிக் கடலில் செத்து மிதக்கும் மீனவன், இப்போதும் உயிருக்குப் போராடி ஆழ்கடலில் பரிதவிக்கும் உயிர்கள்… என்று தென் தமிழக கடற்புரத்தின் துயரம் உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போகாமலேயே பாதிப்புகளை பார்வையிட்டிருக்கிறார் மோடி. இது மீனவர்களை கொந்தளிப்புக்குள் தள்ளும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. ஏற்கெனவே நிலவும் வெறுப்பரசியலின் நரம்பை இன்னும் இறுக்கமாக்கும் முயற்சி.
இப்போதும் மீனவர் பகுதிகளில் அலறல் சத்தம் ஓயவில்லை. அரசின் கோஸ்ட் கார்டு, கடற்படை எல்லாம் கைவிட்ட நிலையில், மீனவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் ஆழ்கடலுக்குள் சென்று அங்கே பரிதவித்துக்கொண்டிருந்த 10 மீனவர்களை உயிரோடு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் பலர் உயிரோடு இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் தொடர்ந்து தேடி கொண்டிருக்கிறார்கள்.
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ். மீனவர்கள் எங்கிருந்தாலும் கரைக்கு வந்துவிடுவார்கள். அந்த நாளை எதிர்நோக்கி, ஏதோ ஒரு நம்பிக்கையோடு மீனவ மக்கள் கடற்புரத்தில் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ… தன் வாக்கு வங்கியை பலப்படுத்தவும், மீனவர்களை கடற்புரத்தில் இருந்து அப்புறப்படுத்தவும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பார்க்கிறது.