June 1, 2023

பெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு!

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எனப்படும் பெரியார் தனது இறுதிக் காலம் வரை தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

நிற்காத பயணம்! ஓயாத பேச்சு! சளைக்காத உழைப்பு!

அவர் இந்த பூமியில் வாழ்நாள் முழுதும் பயணம் செய்த மொத்தத் தொலைவு 8,20,200 மைல்கள். இது இந்தப் பரந்த பூமிக் கோளத்தை மூன்று முறை சுற்றி வருவதற்கொப்பாகும்!

அவர் பேசிய கூட்டங்கள் 21,400. உயிர் விடுவதற்கு முதல் நாள் வரை பேசினார்! எழுச்சியுகம் காண்பதற்கு எழுந்து வாரீர்! என இளைஞர்களை அழைத்தார்!

இந்த பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம் என்று பிரகடனம் செய் தவர்.

அவரைப்போலவே அவரது பேச்சும், எழுத்தும் எளிமையானவை, வலிமையானவை. தனது இறுதிக்காலம் வரை மானுட மேம்பாட்டை மட்டுமே மையப்படுத்தி இயங்கியவர்.

அதே சமயம் பெரியார் மீது தீவிர மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் அவரது கொள்கைகளை தமிழகம் முழுவதும் பரப்பி மகிழ்ந்த தொண்டர்கள் தமிழக மக்கள் என பலர் பெரியார் மணியம்மை திருமணத்தை எதிர்த்தவர்கள். அந்த திருமணத்தின் காரணத்தால் பெரியாரின் வட்டத்திலிருந்து விலகி சென்றவர்கள் பலர் இருக்கின்றனர். ஏன் அந்த திருமணம் என்பதை அறிந்து கொள்வோமா?

தனது முதல் மனைவி நாகம்மை பெரியாருக்கு 54 வயது இருக்கும் போதே இறந்து விட்டார். அந்த காலகட்டத்திலேயே உறவினர் நண்பர்கள் என பலர் பெரியாரை திருமணம் செய்துகொள்ள கூறியபொழுது முழுமனதுடன் மறுப்பு தெரிவித்து இருந்தார். பெரியார் தனது வாழ்க்கை மற்றும் அதில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் நிச்சயம் தனது துணை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வெகுவாக அறிந்திருந்தார் பெரியார். ஆனால் பிறகு தனது 70 வயதில் மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொள்ள காரணம் என்பதைப் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 70 வயதில் பொதுவாக முதியவர்களுக்கு என்னென்ன உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுமோ அவை எல்லாம் பெரியாருக்கும் ஏற்பட்டது.

அந்நாள் வரை இயக்கம் கொள்கைகள் போராட்டங்கள் குறித்து மட்டுமே கவனம் கொண்டிருந்த பெரியார் தனக்கு பின் யார் அனைத்தையும் வழிநடத்திச் செல்வார்கள் என்ற எண்ணம் அப்போது தான் பிறக்க துவங்கியது. மக்கள் மேம்பாட்டு போராட்டங்கள் மற்றும் அதற்கான சிந்தனைகள் ஒருபுறம் அடித்தட்டு மக்கள் மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட கழகம் மற்றும் அதன் எதிர்காலம் மறுபுறம்.

தனது மரணத்திற்குப் பிறகு தனது சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் கூட்டம் ஒருபுறம் என பெரியாரின் மனதை பல சிந்தனைகள் சூழ்ந்திருந்தன. பெரியாருக்கு பெரும் சொத்து இருந்தது. அதை அவரது இறப்புக்கு பிறகு தனது கழகத்திற்கு எழுதி வைத்து விட்டார். அதனால் கழகமும் சிறப்பாக இயங்க வழி வகுக்க முடியும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார் பெரியார். இதற்காக உடனடியாக தனது வழக்கறிஞரை வரவழைத்து கோப்புகள் ஏற்பாடுகள் செய்ய கூறினார்.

ஆனால் பெரியார் அறிந்திருக்காத ஒரு சட்ட சிக்கலை எடுத்துரைத்தார் அவரது வழக்கறிஞர். பெரியாருக்குப் பிறகு அவரது ரத்த சொந்த கையொப்பம் இருந்தால்தான் சொத்துக்கள் கழகத்தின் பெயருக்கு மாற்ற முடியும் என்று கூறினார் பெரியாரின் முதல் மனைவியான நாகம்மை வெகுகாலம் முன்பே இறந்துவிட்டார். பெரியாருக்கு பிறந்த குழந்தை இறந்தே பிறந்தது. இந்த இரண்டு வாய்ப்புகளும் இல்லாமல் போயின.

ஆகவே ஒன்று பெரியார் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் கழகத்திற்கு சொத்து எழுதி வைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் நிச்சயம் சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டிருந்தார் பெரியார். இதற்காக ராஜாஜி உட்பட தனது நெருங்கிய வட்டத்தினர் பலரிடம் இது குறித்து விசாரித்தார் பெரியார். பெரும்பாலானவர்கள் இது அவ பெயரை பெற்றுத் தரும் வேண்டாம் என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால் கழகத்தின் எதிர்கால மட்டுமே கருத்தில் கொண்டு வேறு வழியில்லை என்பதால் திருமணம் செய்துகொள்ள திட்டத்தை ஏற்கிறார். யாரை திருமணம் செய்வது என்ற பேச்சின்போது மணியம்மை தானாக முன் வருகிறார். அவர் பெரியாரின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்தவர். நான்தானே பெரியாரை கவனித்து வருகிறேன் இது வெறும் சட்டத்திற்கான பதிவு மட்டும் தானே அதைத் தாண்டி எங்கள் உறவானது எப்பொழுதும் போல தான் தொடரப் போகிறது என்று கூறி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார் மணியம்மை.

பெரியாரின் திருமணச் செய்தி அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இருந்த பிளவை இன்னும் பெரிதாக்கியது. சென்னை தியாகராயநகரில் ஏப்ரல் 9 1949 அன்று பெரியாருக்கும் மணியம்மைக் கும் பதிவு திருமணம் நடைபெற்றது. இந்த செய்தி கேட்ட பிறகு அண்ணாவிற்கும் பெரியாருக்கும் இடையே இருந்த உறவானது ஏறத்தாழ முடிவு பெற்றது என்று தான் கூறவேண்டும். மேலும் பெரியார் தனது மகள் வயதிலான பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற அவப்பெயர் உண்டானது. ஆனால் பெரியாரின் திருமணம் செய்து கொண்டதற்கு ஒரே காரணம் தனது சொத்து கழகத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே.

அப்படியாப்பட்ட இன்று பெரியாரின் பிறந்த தினம். அவர் வாழ்நாள் முழுவதும் பேசிக் கொண்டே இருந்தார். அவர் கடைசியாக பேசியது எங்கே, என்னவென்று தெரியுமா?

1973, டிசம்பர் 19-ம் நாள், தியாகராய நகர்ப் பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார், “வாழ்ந்தால் இழிவை அறவே ஒழித்து வாழவேண்டும். இல்லையென்றால் செத்து மடியவேண்டும்” என்று முழக்கமிட்டார். இதுதான் பெரியார் அவர்கள் கடைசியாகப் பேசிய மேடைப்பேச்சு.

பெரியார், தனது 80 வயதுக்குப் பிறகு நடப்பதற்கே சிரமப்பட்டார். சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட கோளாறு மற்றும் குடலிறக்க நோய் போன்றவற்றால் துன்பமுற்றார். சிறுநிர் வெளியேறாததால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு ரப்பர் குழாய் பொருத்தி சிறுநீரை வெளியேற்றச் செய்தார்கள். அவ்வளவு துன்பமுற்றபோதும் சக்கர நாற்காலியில் அழைத்துப் போகச் செய்து, பின்னர் கைத் தாங்கலாக மேடைக்கு கொண்டு செல்லப்படுவார். நீண்டதூரப் பயணங்கள் மேற்கொள்வார்.

இந்த மீட்டிங் முடிந்தபிறகு குடலிறக்க நோயால் வேதனையுற்ற பெரியார், உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏறக்குறைய 60 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்து வந்த பெரியாரின் வாழ்வு, 1973 டிசம்பர் 24-ம் நாள், காலை 7.30 மணியளவில் முடிவுற்றது.

அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் எடுத்து வரப்பட்டு சென்னை இராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, எந்த விதிகளைப் பற்றியும் கவலைப்படாமல் பெரியாரின் இறுதி அஞ்சலியை அரசு மரியாதையுடன் நடத்தி வைத்தார்.

“பெரியார், அரசியலில் எந்த உயர் பதவியும் வகிக்கவில்லை, குறைந்தபட்சம் சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லை. எப்படி அவருக்கு அரசு மரியாதை அளிக்கலாம்?” என்று அதிகார வர்க்கம் ஆட்சேபனைக் குரல் எழுப்பியது.

இதற்குக் கருணாநிதி, “காந்தியடிகள் எந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கவில்லையே. அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டதல்லவா?” என்று கேட்க, “அவர் தேசப் பிதா” என்றது அதிகார வர்க்கம்.

“அவர் தேசப் பிதா என்றால், இவர் திராவிடத் தந்தை” என்றார் கருணாநிதி.

இவ்விதம் வாக்குவாதம் நடைபெற்ற பின்னர்தான் அரசு மரியாதைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர், டிசம்பர் 25-ம் நாள் மாலை, தந்தைப் பெரியாரின் உடல் பெரியார் திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 36 குண்டுகள் முழங்க, இராணுவத்தினர் வாத்தியம் இசைக்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அகஸ்தீஸ்வரன்