பதான் – விமர்சனம்!

பதான் – விமர்சனம்!

கோலிவுட் அல்லது பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் சினிமா ரசிகனைக் கூட மூளை இல்லாதவனாகவே யோசித்து கதை, திரைக்கதை எல்லாம் கோர்த்து உருவாக்கிய படத்தை எடுத்து ரிலீஸ் செய்யும் போது பொறை எனப்படும் சில பல நற்பலன்களை தூக்கிப் போட்டு விட்டால் போதும் .. ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ் என்று என்ற மனநிலையை ஊடகவாசிகளிடம் உருவாக்கி விட முடியும் என்ற மன நிலை சில பத்திரிகை தொடர்பாளர்களிடையே நிலவுகிறது.

அந்த மனநிலையை பயன்படுத்திதான் வாரிசு புரொமோஷனை கையில் எடுத்த நலம் விரும்பியான பீஆர் ஓ-வுக்கு முன்னதாக வேறொரு பி ஆர் ஓ-விடம் இந்த பதான் படக் குழு புரோமோஷனுக்காக அப்ரோச் செய்தார்கள்.  அப்போது அவர் புரொமோஷனுக்கு கேட்ட தொகையைக் கேட்டு யோசித்த நிலையில் செகண்ட்ரியாக எண்ட்ரியான இந்த தளபதியின் பீ ஆர் ஓ பேமண்டே பேசாமல் ஷோ போடுவதற்கே குரூப் எல்லாம் ஆரம்பித்த சீன் எல்லாம் காட்டி அசத்தி விட்டார்

ஆனால் நான்காண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்து பெரிய எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகியுள்ள படம் பதான் எதிர்பார்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

ஆம்.. நம்ம கேப்டன் விஜய்காந்த் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் பலமுறை கடித்து துப்பிய கரும்பில் இருந்து சாறு எடுப்பது போல் பாகிஸ்தான், தீவிரவாதி, உளவாளி, எஜெண்ட், என புளிச்ச மாவில் தயாரான சூடான பதார்த்ததை அதையும் தங்கத் தட்டில் கொடுத்து கவர் முயன்றிருக்கிறார்கள்.

அதாவது காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் சில சட்ட மாற்றங்களால் அப்செட் ஆகி ஆவேசமாகும் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை அழிக்க ஒருவரை (ஜான் ஆப்ரகம்) நியமிக்கிறது. இவர் அழிந்து போன அம்மை கிருமிகளை மறு உருவாக்கம் செய்து மக்களை அழிக்க நினைக்கிறார். விஷயமறிந்து இவருடன் நேருக்கு நேர் மோதுகிறார் தேச பக்தி நிறைந்த நம் ஹீரோ பதான். அதன் பிறகு…?

வழக்கம் போல் அதே சண்டை காட்சிகள், துப்பாக்கி சத்தம் இறுதியில் நாட்டு பற்று. காட்சிக்கு காட்சிக்கு பிரமாதமான விஷுவல் இருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் கூட பலம் இல்லாததால் ரொம்ப சாதாரண படமாக கடந்து செல்கிறது. ஸ்டன்ட்டுக்கான ஐடியாக்கள் சிறப்பாக இருந்தாலும், க்ரீன் ஸ்க்ரீன் காட்சிகள் அனைத்தும் சுமார் ரக கிராபிக்ஸால் நம்மை டயர்டாக்குகின்றன. இரண்டு ஹெலிகாப்டர், ஒரு பெரிய டிரக், ரயிலில் நடக்கும் சண்டை என எல்லாவற்றின் தரத்துக்கும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று பாப்கார்ன் விற்பவரே வருத்தப்பட்டுஆலோசனை சொல்லுமளவிற்குதான் இருக்கிறது .

ஆனாலும் ஷட்சித் பலூஸ் கேன்ராவும் கர்சரண் ஆர்யா மற்றும் கைலாஷ் ஷாவின் ஆர்ட் டைரக்ஷனும் இணைந்து கண்கவர் கலவையை தருகின்றன. ஷாருக்கானின் வயசு கொஞ்சம் அதிகரிப்பது தெரிந்தாலும் நடிப்பில் பழைய ஷாருக்தான் என்பதை நிரூபித்து விடுகிறார். ஜான் ஆபிரகம் நடிப்பிலும், உடல் கட்டிலும் கவர்கிறார்.

தீபிகா படுகோனேக்கெனவே காஸ்ட்யூம் டிசைனர்.. பெரும் பொருட் செலவில் மிக குறைந்த ஆடையிலேயே பல காட்சிகளில் வரும் தீபிகாவால் கிளுகிளுப்படையும் ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டர் அதிர்கிறது. .

ஆனாலும் ஷாருக்கானே இது மாதிரி சிலபல படங்களில் நடித்திருந்தாலும் இது வித்தியாசமான படம் என்பதை நம்ப வைக்க முயன்றிருப்பது வீணாகி விட்டது

மொத்தத்தில் பதான் – பணால்

மார்க் – 2.5/5

error: Content is protected !!