சர்வதேச அளவில் போலி நிறுவனங்கள் நடத்தும் இந்தியர்களின் பட்டியல் !- பாரடைஸ் பேப்பர்ஸ்!

சர்வதேச அளவில் போலி நிறுவனங்கள் நடத்தும் இந்தியர்களின் பட்டியல் !- பாரடைஸ் பேப்பர்ஸ்!

உலக பிரபலங்கள் போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக சொத்து குவித்தது தொடர்பான கோடிக்கணக்கான ஆவணங்கள் ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்ற பெயரில் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான இந்த ஆவணங்களில் இந்தியாவை சேர்ந்த 714 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், அமெரிக்க வர்த்தக துறை செயலாளர் வில்பர் ராஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.

உலக பிரபலங்கள் பலர் வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக சொத்து குவித்தது தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்கள் பதினெட்டு மாதங்கள் முன்பு ‘பனாமா கேட்’ என்ற பெயரில் வெளியானது. அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists) இந்த ஆவணங்களை வெளியிட்டது. “பனாமா கேட்” என்றழைக்கப்பட்ட இந்த விவகாரத்தில் பல உலக பிரபலங்களின் பெயர்கள் சிக்கின. இந்த குற்றசாட்டில் சிக்கியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தன் பிரதமர் பதவியை இழந்தார்.

பனாமாகேட் விவகாரத்தின் தாக்கம் இன்னும் தீராத நிலையில் தற்போது மீண்டும் முறைகேடாக சொத்து குவித்துள்ள பிரபலங்கள் தொடர்பான 1.34 கோடி ஆவணங்கள் பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இந்த ஆவணங்கள் அனைத்தும் பெர்முடா பகுதியில் உள்ள ஆப்பிள்பை (Appleby) என்ற வெளிநாட்டு சட்ட நிறுவனத்தில் இருந்து ரகசியமாக சேகரிக்கப்பட்டுள்ளன. புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு மற்றும் 95 மிடியா உறுப்பினர்கள் இணைந்து நடத்திய புலனாய்வில் இந்த ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்களில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், அமெரிக்க வர்த்தக துறை செயலாளர் வில்பர் ராஸ், கனடா பிரதமரின் முத்த ஆலோசகர் ஸ்டீபன் பிரோஃப்மன் உட்பட சுமார் 1,20,000 நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன. பிரிட்டன் மகாராணியின் சொத்துக்கள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டதா என்று உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால் பிரிட்டன் மகாராணி வெளிநாட்டு நிறுவனங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏற்கத்தக்கதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க வர்த்தக துறை செயலாளர் வில்பர் ராஸ் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நாவிகேட்டர் (Navigator) என்ற நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இந்த நிறுவனம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கு தொடர்புடைய சிபர் (Siber) என்ற எரிசக்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த விவரம் பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் முறைகேடு தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது வெளியான விவரங்களால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவித்துள்ள 714 இந்தியர்கள்

பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்களில் முறைகேடாக சொத்து குவித்துள்ள பல காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் உட்பட இந்தியாவை சேர்ந்த 714 பேர் இடம்பெற்றுள்ளனர். பாரடைஸ் பேப்பர்ஸில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் இந்தியா 19வது இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெஹ்லாட், சச்சின் பைலட், பாஜக விமான போக்குவரத்து துறை துணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா, ஆந்திராவின் எதிர்கட்சி தலைவர் ஒய்.எஸ். ஜகன்மோகன் ரெட்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் அப்போலோ டையர்ஸ், ஹிந்துஜாஸ், ஜிந்தால் ஸ்டீல், வீடியோகான், ஹாவெல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சிக்கினார்

பாரடைஸ் பேப்பர் விவகாரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சவ்காட் ஆசிஸ் (68) பெயர் சிக்கியுள்ளது. இவர் 2004 முதல் 2007ம் ஆண்டுவரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.இவர் பாகிஸ்தானின் நிதி அமைச்சராக பதவி வகிப்பதற்கு முன் 1999ம் வருடம் அமெரிக்காவில் அட்லாட்ண்டிக் டிரஸ்ட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ஆனால் இதுவரை அது குறித்த எந்த விவரங்களையும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அவர் அளிக்கவில்லை. ஆனால் ‘‘இந்த முதலீடு தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு சவ்காட் ஆசிஸ் எந்த விளக்கமும் ஆளிக்கவேண்டிய அவசியமில்லை. அவர் அமெரிக்காவில் அனைத்து வரிகளையும் முறையாக கட்டியுள்ளார்’’ என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!