ஒத்த ஓட்டு முத்தையா – விமர்சனம்!
கோலிவுட்டில் சுமார் 25 ஆண்டு காலம், தன்னுடைய நக்கல் பேச்சுகளாலும், நைய்யாண்டித்தன நகைச்சுவையாலும் ஆட்சி செய்தவர் நடிகர் கவுண்டமணி. அக்காலத்தில் கவுண்டமணியிடம் கெஞ்சிக் கூத்தாடி கால்ஷூட் வாங்கி அவருகாகவே தனியாக காமெடி டிராக்ஸ் உருவாக்க ஏகப்பட்ட டீம் உண்டாம். இந்த கவுண்டமணியோடு இணைந்து நடிக்கும் கதாநாயகர்களெல்லாம் தவறாது சொல்லும் ஒரு விஷயம், கவுண்டமணியின் டைமிங் சென்ஸ். காட்சியைப் படமாக்கிக்கொண்டிருக்கும்போது கவுண்டமணியின் டைமிங் சென்ஸ் அந்தளவிற்குக் கச்சிதமாக இருக்குமாம். அதேசமயத்தில், எப்பேர்ப்பட்ட கதாநாயகர்களுக்கும் கவுண்டமணியுடன் நடிப்பதென்றால் சற்று பயம்தான். காரணம், காட்சி படமாகிக் கொண்டிருக்கும்போதே கவுண்டமணி ஏதாவது கவுன்டர் அடித்துவிட, கதாநாயகர்களும் அடக்க முடியாமல் சிரித்து விழ, அந்த ஷாட் மீண்டும் மீண்டும் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுமாம். அப்பேர்ப்பட்ட கவுண்டமணிக்கு இப்போது 85 வயதான நிலையில் ஹீரோவா நடித்து ரிலீஸாகி இருக்கும் படமே ஒத்த ஓட்டு முத்தையா!
கதை என்னவென்றால் அசெம்பளி எலெக்ஷனில் நின்று ஒரே ஒரு ஓட்டு பெற்றதால் ‘சித்தப்பா பெரியப்பா மக்கள் கட்சி’ என்கின்ற ஒரு கட்சியில் மாவட்ட செயலாளர் கவுண்டமணிக்கு ஒத்த ஓட்டு முத்தையா என்று பெயர் நிலைத்து விடுக்றது. அவர் தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்ற முடிவோடு இருக்கிறார்.ஆனால் அவரது தங்கைகளோ தான் காதலிப்பவர்களை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்காக மூவரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று கவுண்டமணியிடம் சொல்லி திருமணம் செய்ய திட்டமிடுகின்றனர். அந்த சமயத்தில் மீண்டும் தேர்தல் வருகிறது. இம்முறை கவுண்டமணிக்கு கட்சி சீட்டு தராமல் கவுண்டமணியின் டிரைவராக இருக்கும் யோகி பாபுவிற்கு சிபெம கட்சி சீட்டு கொடுக்கிறது. இதனால் கோபம் அடைந்த கவுண்டமணி கட்சியை விட்டு விலகி சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.இறுதியில் தேர்தலில் அவர் வெற்றி பெற்றாரா ? அவரது தங்கைகள் அண்ணனை ஏமாற்றி காதலர்களை கரம் பிடித்தார்கள் இல்லையா?? என்பதுதான் ஒத்த ஓட்டு முத்தையா.
நாயகனாக வரும் கவுண்டமணி முதியோராகி விட்டலும் அவருக்காக உருவாக்கப்பட்ட கவுண்டர்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பது போல் இருந்தாலும், அதில் பழைய கணீர், கம்பீரம், வேகம், டைமிங் மற்றும் உடல்மொழி என எதுவுமே இல்லாததால் சிரிப்பவர்கள் கூட யோசித்து ஐயோ பாவமென சிரிக்கிறார்கள். கவுண்டமணியுடன் கூட்டணி அமைத்துள்ள யோகி பாபுவின் காமெடி காட்சிகளும் வழக்கம் போல எடுபடவில்லை. கள்ள உறவுகளை வைத்து நிறைய சீன்கள் வைத்து சிரிப்பு என்ற பெயரில் பிரசண்ட் செய்துள்ளார்கள்.
வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், சென்ட்ராயன், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார், மணவை பொன் மாணிக்கம் என படத்தில் நடித்த அனைவரும் டைரக்டர் சொன்னதை செய்து விட்டு போகிறார்கள்.
கேமராமேன் எஸ்.ஏ.காத்தவராயனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தி விடுகிறது
மியூசிக் டைரக்டர் சித்தார்த் விபின் இசையில் சினேகன், மோகன்ராஜா, சாய் ராஜகோபால் ஆகியோரது வரிகளில் பாடல்களும், பின்னணி இசையும் ஃபீல் குட். குறிப்பாக ‘ ராஜமுந்திரி அழகி நான்; என்ற பாடலும், அந்தப் பாடலை பாடமாக்கிய விதமும் அடடே சொல்ல வைக்கிறது.
சில பல ஆண்டுகளுக்கு பின்னர் சவுண்ட் விடும் கவுண்டமணியை திரையில் பார்க்கும் உற்சாகத்துடன் வரும் ரசிகர்களுக்கு அவரது தோற்றம் மற்றும் உடல்மொழி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுப்பதோடு, அவர் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. அதே சமயம் கவுண்டர் மூலம் இன்றைய அரசியலை அக்குவேறு ஆணிவேராக கழற்றி கலாய்த்து இருப்பதுதான் படத்தின் பலம். அதிலும் கூவத்தூரில் நடத்த காமெடி தொடங்கி ஓபிஎஸ்., ஜெ. சமாதியில் நடத்திய தர்ம யுத்தம் வரை கேஷூவலாக காலி செய்திருப்பதெல்லாம் நச்.
மொத்தத்தில் ஒத்த ஓட்டு முத்தையா – டெபாசிட் இழந்த வேட்பாளர்.
மார்க் 2/5


