இது திட்டமிட்ட கொள்ளை ; நிர்வாகத் தோல்வி! – மோடி முடிவு குறித்து மன்மோகன் சிங்
திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திய பிரதமர் மோடி மாநிலங்களவை விவாதத்தில் கலந்துக் கொள்ள வேண்டும், அதுவரை அவையை செயல்பட விடமாட்டோம் என எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக கூறிவந்தன. இந்நிலையில் நேற்று நாடாளுமன்றம் தொடங்கியதும் மாநிலங்களவைக்கு பிரதமர் மோடி வந்தார். உடனே எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம், ‘‘பிரதமர் அவையில் உள்ளார். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, கரன்சி விவகாரம் குறித்த விவாதத்தை தொடங்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி விவாதத்தை உடனே தொடங்கலாம். பிரதமர் அவையில் நிச்சயம் இருப்பார்’’ என்றார்.

அதன்பின் இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும் போது, “ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என ஒரே இரவில் பிரதமர் அறிவித்து விட்டார். இதன் நோக்கம் நல்லதுதான். ஆனால் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என யாருக்கும் தெரியாது. இந்த அறிவிப்பால் அதிகம் பாதிப்படைந்தது சாதாரண மக்கள்தான். நமது நாட்டில் 90 சதவீதம் பேர் முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 55 சதவீதம் பேர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் குறைகளை குறிப்பிட வேண்டியது மிக முக்கியம்.
50 நாட்கள் பொறுமையாக இருங்கள் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 50 நாட்கள் என்பது குறுகிய காலம்தான். ஆனால் ஏழை மற்றும் அடிதட்டு மக்களுக்கு இந்த 50 நாள் கொடுமை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால்தான் 65 பேர் இறந்துள்ளனர். இன்னும் அதிகமாக கூட இறந்திருக்கலாம். கிராமப்புற மக்களுக்கு அதிகம் சேவை அளிக்கும் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளன.
வங்கியில் இருந்து மக்கள் பணத்தை எடுப்பது தொடர்பாக அரசு புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து விதிமுறைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இது பிரதமர் அலுவலகம், நிதித்துறை அமைச்சர் அலுவலகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மோசமான செயல்பாட்டை காட்டுகிறது. ரிசர்வ் வங்கியும் விமர்சனத்துக்கு ஆளானது வருத்தம் அளிக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கையால் ரூபாய் மீதும், வங்கிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். மக்கள் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க, அனுமதிக்காத நாடுகளை பிரதமர் கூற முடியுமா? பணத்தை திடீரென செல்லாததாக அறிவித்தது, நாட்டின் வேளாண் உற்பத்தியை பாதிக்கும். சிறு தொழில்களை பாதிக்கும், முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களையும் பாதிக்கும்.
ஒட்டுமொத்தமாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) 2 சதவீதம் குறையும். இது குறைவான மதிப்பீடுதான். மிகப்பெரிய வளர்ச்சி என்ற பெயரில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது திட்டமிட்ட கொள்ளை. என்றும் ஞாபகத்தில் இருக்கும் மிகப்பெரிய நிர்வாக தோல்வி. அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவது எனது நோக்கம் அல்ல. இந்த கடைசி நேரத்தில் கூட சாதாரண மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில், நடைமுறைக்கு தகுந்த நடவடிக்கையை பிரதமர் எடுப்பார் என நம்புகிறேன்”என்று மன்மோகன் சிங் கூறினார்.


