தமிழ் நாடகக் கலையின் தந்தை என்று அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாளின்று!💐

தமிழ் நாடகக் கலையின் தந்தை என்று அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாளின்று!💐

லைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஆனாலும் நம் தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை இவரது காலத்துக்கு முன் இவரது காலத்திற்கு பின் என்று பிரித்துப் பார்க்கும் அளவிற்கு தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளப்பரியது. தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்டவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

தூத்துக்குடியை அடுத்த காட்டு நாயக்கன்பட்டியில் 1867-ம் ஆண்டு இதே செப்டம்பர் 7 ஆம் தேதி பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் துவக்கினார். அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிக்க, இசையும் பாட்டுத்திறமையும் மிக முக்கியம். அதற்காக புதுக்கோட்டை மான் பூண்டியா பிள்ளையிடம் இசைப் பயிற்சி பெற்றார். இலக்கண இலக்கியங்களை தன் தந்தையிடமே கற்றுக் கொண்ட பிறகுதான் முழு நேர நடிப்பில் ஈடுபட்டார்.

இதனாலேயே இவரது நாடகங்கள் நல்ல மொழி வளங்களோடு இருந்தன. எமதர்மன், சனீஸ்வரன், இராவணன், இரணியன், கடோற்கஜன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்த சங்கரதாஸ் சுவாமிகள், தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கட்டிப்போட்டார். பார்ப்பவர்களை அசத்தும் திறமை பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு நாடகங்களை எழுதி இயக்குவதோடு தன் பங்களிப்பை சுருக்கிக்கொண்டார்.

இதன் பின்னனியின் ஒரு சோக சம்பவம் இருக்கிறது. ஒருமுறை நாடகத்தில் சனீஸ்வர பகவான் வேடமேற்று நடித்தவர், நாடகம் முடிந்ததும் வேஷத்தைக் கலைக்க அந்த ஊரின் ஏரிக்கு சென்றார். அப்போது அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி, சனீஸ்வர வேடத்தில் இருந்த சங்கரதாஸ் சுவாமிகளைக் கண்டதும் பயத்தில் மயங்கிவிழுந்து அங்கேயே இறந்துவிட்டார். இந்த சம்பவம் அவரை அதிகம் பாதித்ததால் அன்றிலிருந்து வேஷமிடுவதை நிறுத்திக் கொண்டார். சோகமான சம்பவமானாலும சங்கரதாஸ் சுவாமிகளின் கதாபாத்திர பொருத்தத்துக்கு இது ஒரு முக்கிய உதாரணம்.

சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘‘வள்ளி திருமணம், பவளக் கொடி சரித்திரம், வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம் போன்றவை அவருக்கு புகழ் தந்த நாடகங்கள். இதில் பெரும்பாலானவை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் அந்தக் காலத்திலேயே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பதிலேயே சங்கரதாஸ் சுவாமிகளின் ஆங்கிலப் புலமையையும் அறிய முடியும்.

தம் வாழ்க்கையை நாடக கலைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகள், திருமணமே செய்து கொள்ளவில்லை. தமிழ் நாடக மேடைகளுக்கு தன் உழைப்பின் மூலம் பெரும் மரியாதையை ஏற்படுத்திய சங்கரதாஸ் சுவாமிகள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சுற்றி தனது கலைச் சேவையை செய்தார். விழுப்புரத்தில் ஒரு நாடகத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 55.

உடனடியாக வ.சுப்பையா, சங்கரதாஸ் சுவாமிகளை புதுச்சேரிக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார். தொடர் சிகிச்சைக்காக இங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது. இருப்பினும் விடாது தன்னால் முடிந்த அளவு நாடக கலைக்கு தொண்டு புரிந்த சங்கரதாஸ் சுவாமிகள், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு பின் நவம்பர் (1922) மரணமடைந்தார்.

Related Posts

error: Content is protected !!