தமிழ் பத்திரிகையுலகில் புரட்சி செய்த தமிழ்வாணன் நினைவு நாளின்று!
சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார். இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு ‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார். என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம் வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார். எழுத்தால் வாசகர்களைக் கவர்ந்த “கல்கி’க்குப் பிறகு, செய்தி இதழால் புதிய வாசகர்களைக் கண்டெடுத்த சி.பா.ஆதித்தனாருக்குப் பிறகு, பேச்சாற்றலால் அறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்ததுபோன்று இளைஞர்களைக் கவர்ந்தவர் தமிழ்வாணன்.
யுத்த காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி காலணா, அரையணா, ஓரணா என்ற விலையில் தம்பி – தங்கைகளுக்காக வார, மாத இதழ்கள் வெளிவரத்தொடங்கின. அதன் ஆசிரியர்கள், “அண்ணன்’, “மாமா’ என்ற அடைமொழியுடன் வளரும் குருத்துகளிடையே படிக்கும் ஆவலைத் தூண்டினர்; வளர்த்தனர். அதையொட்டி “துணிவே துணை’ என்ற கோஷத்தை முதன் முறையாக தாரக மந்திரமாக ஒலிக்க, தமிழ்வாணன் பத்திரிகையாளராகும் முயற்சியில் ஈடுபட்டார். திருச்சி “கிராம ஊழியன்’ பத்திரிகையில் சேர்ந்தார். வல்லிக்கண்ணன் அந்தப் பத்திரிகையின் முதல் ஆசிரியர். தமிழ்வாணன் உதவி ஆசிரியர். முப்பது ரூபாய் சம்பளம். அங்குதான் பல எழுத்தாளர்கள் பழக்கமானார்கள். பிரபல எழுத்தாளர் நா.பிச்சமூர்த்தியைச் சந்தித்தார். அவருடைய எழுத்து நடை தமிழ்வாணனைக் கவர்ந்தது. கிராம ஊழியன் அதிபர் கிருஷ்ணசாமி செட்டியாரிடம் பிச்சமூர்த்தி தமிழ்வாணனை அறிமுகப்படுத்தினார்.”தம்பி! எப்போதும் உன் எழுத்து எளிமையாக இருக்க வேண்டும். பின்னலான வாக்கியங்களை அறவே விட்டுவிடு, நீ ஒரு நாள் பிரபல எழுத்தாளராகி விடுவாய்” என்று கூறினார்.
கிராம ஊழியன் ஆசிரியராய் சில மாதங்களில் பதவி உயர்வு பெற்றார். சென்னை வந்தார். எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாகவும், நல்ல நூல்கள் வெளியிடுவதற்கு வழிகாட்டியாக இருந்தவருமான சக்தி வை.கோவிந்தன் “சக்தி’ என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார். அவருக்குப் புதிய புதிய வெளியீடுகளை வெளியிடுவதில் கொள்ளை ஆசை. அவர், “அணில்’ என்ற பெயரில் குழந்தைகளுக்காகப் புதிய வார இதழ் தொடங்கினார். அதற்குத் தமிழ்வாணன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். என்ன துணிவு! தன் சொந்த வாழ்க்கைப் படிப்பினையால் உழைப்பே துணை என்ற மந்திரச் சொல்லை அறிமுகப்படுத்தினார். தன் அறிவாற்றலால் “அணில்’ பரபரப்புடன் விற்குமாறு செய்தார். “அணில் அண்ணன்’ அப்போதுதான் தோன்றினான்.
வானதி திருநாவுக்கரசு, தமிழ்வாணனின் உயிர் நண்பர் – பள்ளித் தோழர். இருவரும் கூட்டாகச் சேர்ந்து “ஜில்ஜில்’ பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு “சிரிக்காதே!’. அடுத்து ஜவாஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தமிழ்வாணனால் எழுதப்பட்டு, நான்கணா விலையில் வெளியிடப்பட்டது. வெற்றிகரமாக விற்பனையானது. தொடர்ந்து “அல்வாத் துண்டு’, “சுட்டுத் தள்ளு’, “பயமா இருக்கே’ என்ற பல தலைப்புகளில் நூல்கள் வெளிவந்தன. எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும், எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது. ‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர் வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார். ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’ என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார். இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம்.
தமிழ்வாணன் நூல்களின் அமோக விற்பனையைப் பார்த்து – பல பதிப்புகள் அச்சிடப்படுவதைக் கண்ட குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, தமிழ்வாணனைச் சந்தித்தார். தமிழ்வாணனுடைய பேச்சு, உற்சாகம், திட்டங்கள், சுறுசுறுப்பு எல்லாம் எஸ்.ஏ.பி.க்கு மிகவும் பிடித்திருந்ததால் குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’ வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைத்தார். ‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படித்தனர். இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார். நூறு, ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்குப் பத்திரிகைகள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டபோது ஆயிரம், பதினாயிரம் என்று பரபரப்புடன் படிக்கத் தூண்டியவரிவர்.
கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா, அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.
மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார். 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார். பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர். கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார். வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை பார்ப்பதில் வல்லவர்.
‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து விற்பனை செய்தார். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய 2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார். ‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதி, தயாரித்து வெளியிட்டார்.
தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை. ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு வந்துவிடுமாம்.
இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும் மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால் 56-வது வயதில் (1977) இதே நாளில்தான் காலமானார்.
நிலவளம் ரெங்கராஜன்